Wednesday, March 28, 2012

ஏப்ரல் 1, 2012

திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

திருவழிபாட்டு முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு திரு வழிபாட்டு நிகழ்வுகளுக்கு உங்களை வரவேற்கின்றோம். இஸ்ரயேல் மக்களின் வெற்றி ஆர்ப்பரிப்புகளுக்கு இடையே எருசலேமில் நுழைந்த இயேசு கிறிஸ்து, அதே மக்களின் கூக்குரலால் மரணத்துக்கு தீர்ப்பிடப்பட்ட நிகழ்வுகளை சிந்திக்க இந்த குருத்தோலை பவனி நமக்கு அழைப்பு விடுக்கிறது. புனித வியாழனன்று இயேசு நற்கருணையை ஏற்படுத்தியது, யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டது, புனித வெள்ளி ன்று அவர் சிலுவையில் உயிர் துறந்து அடக்கம் செய்யப்பட்டது என திருப்பாடுகளின் நீண்ட வரலாற்றை நாம் இன்றையத் திருப்பலியில் தியானிக்க இருக்கின்றோம். நம்மைப் பாவங்களில் இருந்து விடுவிக்கää தன் உயிரையே பலியாகத் தந்த ஆண்டவர் இயேசு வுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம் என்பதை சிந்தித்தவாறே, இந்த திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், இயேசுவின் திருப்பாடுகளைப் பற்றிய இறைவாக்கினர் எசாயாவின் முன்னறிவிப்பு இடம்பெறுகிறது. இயேசுவை படைவீரர்கள் அவமானப் படுத்திய நிகழ்வையும்ää அவர் சாட்டையால் அடிக்கப்பட்டதையும் இந்த இறைவாக்கு எடுத்துரைக்கிறது. நமது பாவங்களால் நாம் இயேசுவைக் காயப்படுத்திய தருணங் களுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டு இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், தந்தை கடவுளின் மீட்புத் திட்டத்தில் இயேசு கிறிஸ்து எவ்வாறு செயலாற்றினார் என்பதை எடுத்துரைக்கிறது. சிலுவைச் சாவு வரைத் தன்னை அர்ப்பணித்த இயேசுவின் தாழ்ச்சி நிறைந்த கீழ்ப்படிதலேää அவரை மேலான மாட்சிக்கு உயர்த்தியது என்று திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார். நாமும் நமது கீழ்ப்படிதலால் கடவுளின் மாட்சியில் பங்குபெறும் வரம் கேட்டு இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.


இறைமக்கள் மன்றாட்டு:
1. மீட்பு அளிப்பவராம் இறைவா,
   உமது திருமகன் இயேசுவின் வழியாக கிடைத்த மீட்பை சிறப்பான விதத்தில் பறைசாற்ற நீர் தேர்ந்தெடுத்துள்ள திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உலக மக்களுக்கு மீட்பின் கருவிகளாகத் திகழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. வெற்றி வேந்தராம் இறைவா,
   மனித குலத்திற்காக இயேசு சிலுவையில் அனுபவித்த வேதனைகளைப் பற்றி கவலை கொள்ளாமல் வாழும் மக்கள் அனைவரும் மனந்திரும்பி, இயேசுவின் கீழ்ப்படிதல் நிறைந்த அன்பினை உணர்ந்து வாழ
உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நீதியின் அரசராம் இறைவா,
   பிறரைத் தீர்ப்பிடும் மனநிலையோடு பணியாற்றும் எங்கள் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் அனைவரும், தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்த தேவையான மன மாற்றம் வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கத்தின் ஊற்றாம் இறைவா,
   உம் திருமகனின் திருப்பாடுகளை நினைவுகூர்ந்து, உலகில் பல்வேறு பலவீனங் களாலும் பிரச்சனைகளாலும் நோய்களாலும் துன்புறும் மக்கள்மீது இரக்கம் காட்டி உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்பின் உருவாம் இறைவா,
   எங்கள் பங்கு குடும்பத்தில் வாழும் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது மேலான அன்பையும் இயேசுவின் தாழ்ச்சி நிறைந்த தியாகத்தையும் உணர்ந்தவர்களாய், உம் திருவுளத்துக்கு கீழ்ப்படிந்து வாழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, March 23, 2012

மார்ச் 25, 2012

தவக்காலம் 5-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எரேமியா 31:31-34
   இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன், என்கிறார் ஆண்டவர். அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள், என்கிறார் ஆண்டவர். அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர். இனிமேல் எவரும் 'ஆண்டவரை அறிந்துகொள்ளும்' எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தரமாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச் செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூரமாட்டேன்.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 5:7-9
   சகோதர சகோதரிகளே, கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலி ருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறை மகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படி தலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

நற்செய்தி வாசகம்: யோவான் 12:20-33
  அக்காலத்தில் வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந் தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, "ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்'' என்று கேட்டுக்கொண்டார்கள். பிலிப்பு அந்திரேயா விடம் வந்து அது பற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, "மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்'' என்றார். மேலும் இயேசு, "இப்போது என் உள்ளம் கலக்க முற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? 'தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்' என்பேனோ? இல்லை! இதற்காகத்தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக் கிறேன். தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்'' என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், "மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்'' என்று ஒலித்தது. அங்கு கூட்டமாய் நின்றுகொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, "அது இடிமுழக்கம்'' என்றனர். வேறு சிலர், "அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு'' என்றனர். இயேசு அவர்க ளைப் பார்த்து, "இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது. இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன்'' என்றார். தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, March 21, 2012

மார்ச் 25, 2012

தவக்காலம் 5-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறை இயேசுவில் அன்புக்குரியோரே,
   உடன்படிக்கையின் கடவுளின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய திருவழிபாடு, இயேசுவுக்கு தொண்டு செய்வதன் வழியாக கடவுளின் சட் டத்தை நம் உள்ளத்தில் ஏற்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவர் இயேசு இறைமகனாய் இருந்தும், நம்மைப் பாவங்களின் பிடியிலிருந்து விடுவிக்க, மனித உடல் ஏற்று நமக்கு எடுத்துக்காட்டான மனிதராக வாழ்ந்து காட்டினார். அவரைப் பின்பற்றி வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், கிறிஸ்துவுக்குள் மடிந்து அவரிலே புதுவாழ்வு பெறும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம் கடவுளின் புதிய உடன்படிக்கையைப் பற்றிப் பேசுகிறது. கடவுள் தமது சட்டத்தை மக்களின் உள்ளங்களில் பதிக்கப்போவதாகவும், மக்களின் பாவங்களை மன்னிக்கப்போவதாகவும் இறைவாக்கினர் எரேமியா வழியாக வாக்குறுதி தருகிறார். கடவுளின் வாக்குறுதிகளுக்கு நாம் தகுதிபெற வரம் வேண்டி, இந்த வாசகத் திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம் இயேசு கெத்சமனித் தோட்டத்தில் அடைந்த மரண வேதனையைப் பற்றி பேசுகிறது. இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவோர் அனைவரும், அவர் வழியாக மீட்பைப் பெற்றுக்கொள்வர் என்று திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார். நமது துன்பங்கள் வழியாக நாம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. உள்ளிருந்து செயலாற்றும் இறைவா,
   திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் உமது சட்டத்தை தங்கள் உள்ளங்களில் இருத்தி உமக்கு ஏற்ற வாழ்வு வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. உடன்படிக்கையின் தலைவராம் இறைவா,
   உலக மக்களிடையே உமது புதிய உடன்படிக்கையை நிலைநாட்டி, உலகெங்கும் நீதியும் அன்பும் செழிக்கத் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மனங்களை ஆள்பவராம் இறைவா,
   எங்கள் நாட்டில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளும், வறுமைப் பிணிகளும் மறைய அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் முன்னின்று உழைக்கும் நல்ல மனதினை அவர்களுக்கு வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. கீழ்படிதலை கற்பிப்பவராம் இறைவா,
   இவ்வுலகில் பல வகையான துன்பங்களால் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் அனைவரும், துன்பங்கள் வழியாக உமக்கு கீழ்படிந்து வாழக் கற்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. நிலைவாழ்வு அருள்பவராம் இறைவா,
   உமது திருமகன் இயேசுவைப் பின்பற்றி, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளும் வகையில் வாழ, எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, March 16, 2012

மார்ச் 18, 2012

தவக்காலம் 4-ம் ஞாயிறு

முதல் வாசகம்: 2 குறிப்பேடு 36:14-16,19-23
   அந்நாட்களில், குருக்களின் தலைவர்களும், மக்களும் வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும் தொடர்ந்து செய்து, உண்மையற்றவர்களாய், ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையாக்கியிருந்த திருக்கோவிலை மேலும் தீட்டுப்படுத்தினர். அவர் கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவர் தம் மக்களின் மீதும், தம் உறைவிடத்தின் மீதும் இரக்கம் கொண்டு, தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார். ஆனால் அவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர். ஆதலால், அவர்கள் தப்பமுடியாத அளவுக்கு ஆண்டவரது சினம் அவர்கள்மேல் கனன்றெழுந்தது. அவர்களது எதிரிகள் கடவுளின் இல்லத்தை எரித்து, எருசலேமின் மதில்களைத் தகர்த்தனர்; அங் கிருந்த அனைத்து அரண்மனைகளையும் தீக்கிரையாக்கி, விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தையும் அழித்தனர். மேலும் அவன் வாளுக்குத் தப்பியவர்களைப் பாபிலோ னுக்கு நாடு கடத்தினான்; பாரசீக அரசு எழும்பும்வரை அங்கே, அவர்கள் அவனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் அடிமைகளாக இருந்தனர். நாடு ஓய்வு நாள்களைக் கடைப் பிடிக்காததால், எழுபது ஆண்டுகள் பாழாய்க் கிடக்கும் என்று எரேமியா உரைத்த ஆண்ட வரின் வாய்மொழிகள் இவ்வாறு நிறைவேறின. பாரசீக மன்னன் சைரசு ஆட்சியின் முதல் ஆண்டில், எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் நிறைவேறும் வண்ணம், ஆண்டவர் அவனது மனத்தைத் தூண்டி எழுப்பினார். எனவே அவன் தனது நாடு முழுவ தற்கும் மடல் வரைந்து அறிவித்தது யாதெனில், 'பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம் கூறுவது இதுவே: விண்ணகக் கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள் எல்லா வற்றையும் எனக்கு அளித்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்புமாறு எனக்குப் பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!'
இரண்டாம் வாசகம்: எபேசியர் 2:4-10
   சகோதர சகோதரிகளே, கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ் வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே. இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த் தெழவும் விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார். கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனிவரும் காலங்களிலும் எடுத்துக் காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார். நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை. இது மனிதச் செயல்களால் ஆனது அல்ல. எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது. ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப் பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக் கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.

நற்செய்தி வாசகம்: யோவான் 3:14-21
  அக்காலத்தில் இயேசு நிக்கதேமுக்கு கூறியது: "பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன்மீது நம் பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்."

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, March 14, 2012

மார்ச் 18, 2012

தவக்காலம் 4-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறையன்பில் இனியோரே,
   தமது அளவு கடந்த அன்பால் நம்மை மீட்கத் திருவுளம் கொண்ட ஆண்டவரின் பெய ரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை வரவேற்கிறோம். இன்று நாம் தவக் காலத்தின் நான்காம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய திருவழிபாடு, கடவுளின் இரக்கத்தை யும் அன்பையும் உணர்ந்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவராகிய கடவுள் சினம்கொள்ளத் தயங்குபவர்; அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழவோ ருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுபவர் என்பதை உணர்வோம். கடவுளின் இரக்கமும் அன்பும், இயேசு கிறிஸ்துவின் மீட்புச் செயலில் வெளிப்பட்டன. இறை மகனில் முழுமையாக நம்பிக்கை கொண்டு, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
இனியவர்களே,
   இன்றைய முதல் வாசகம் எருசலேம் கோவில் அழிக்கப்பட்டதையும், பாரசீக அரசர் சைரசு அக்கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப ஆணை பிறப்பித்ததையும் எடுத்துரைக் கிறது. கடவுள் அனுப்பிய இறைவாக்கினர்களையும், அவர்களின் வார்த்தைகளையும் புறக்கணித்ததால், கடவுளின் சினம் யூதர்களை தண்டித்தையும், அவரது இரக்கத்தினால் அவர்கள் மீண்டும் புதுவாழ்வு பெற்றதையும் இங்கு காண்கிறோம். கடவுளின் வார்த்தை களை உள்ளத்தில் ஏற்று வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இனியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம் இயேசு கிறிஸ்து வழியாக நாம் பெற்றுள்ள மீட்பைப் பற்றி பேசுகிறது. கடவுளின் இரக்கத்தாலும் அன்பாலும் மீட்கப்பட்ட நாம், கிறிஸ்துவின் அருளைக் கொடையாகப் பெற்றிருக்கிறோம் என்று திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார். இறையருளில் நாம் நிலைத்து வாழ, கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் உருக்கமாக வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நிலைவாழ்வு தருபவராம் இறைவா,
   உம்மில் நம்பிக்கை கொண்டு, உமது திருமகனின் அரசை உலகெங்கும் நிறுவ உழைத்து வருகின்ற திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலை யினர் அனைவருக்கும் நிலைவாழ்வைப் பரிசளிக்க வேண்டுமென்று உம்மைப் பணிந்து மன்றாடுகிறோம்.
2. தீமையை அழிப்பவராம் இறைவா,
   உமது மாட்சியை களங்கப்படுத்தும் விதமாக உலக மக்களிடையே காணப்படும் சிலை வழிபாட்டு கோயில்கள் அனைத்தையும் அழித்தொழிக்க வேண்டுமென்று தாழ்மையுடன் உம்மை மன்றாடுகிறோம்.
3. சினம் கொள்பவராம் இறைவா,
   உலகெங்கும் காணப்படும் அநீதிகள், வன்முறைகள், பயங்கரவாதச் செயல்கள் ஆகிய வற்றுக்கு காரணமானவர்கள் மீது உமது சினத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று மன உருக்கத்துடன் உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கம் காட்டுபவராம் இறைவா,
   இயற்கைச் சீற்றங்களாலும், உடல்நல பாதிப்புகளாலும், மன வேதனைகளாலும், மற்ற வாழ்க்கைப் போராட்டங்களாலும் பாதிக்கப்பட்டுத் துன்புறும் அனைவருக்கும் புதுவாழ்வு வழங்க வேண்டுமென்று பணிவன்புடன் உம்மை மன்றாடுகிறோம்.
5. நம்பிக்கை அருள்பவராம் இறைவா,
   உமது திருமகனில் முழுமையான நம்பிக்கை கொண்டு, நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ளும் ஒளியின் மக்களாக வாழ, எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, வழிநடத்த வேண்டுமென்று உரிமை யுடன் உம்மை மன்றாடுகிறோம்.

Friday, March 9, 2012

மார்ச் 11, 2012

தவக்காலம் 3-ம் ஞாயிறு

முதல் வாசகம்: விடுதலைப்பயணம் 20:1-17
   மோசே மக்களிடம் கூறியது: கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. மேலே விண் வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலை யையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற் றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார். ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப் பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக் கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத் தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வுநாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே. பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே; பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 1:22-25
   சகோதர சகோதரிகளே, யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கி றார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப் பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாக வும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். ஏனெனில் மனித ஞானத்தை விட கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.

நற்செய்தி வாசகம்: யோவான் 2:13-25
  அக்காலத்தில் யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந் திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசை களையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், "இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்'' என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள், 'உம் இல்லத்தின்மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள். யூதர்கள் அவரைப் பார்த்து, "இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், "இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்'' என்றார். அப்போது யூதர்கள், "இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?'' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர். பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர். ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப்பற்றியும் தெரியும். மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச்சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத் தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, March 7, 2012

மார்ச் 11, 2012

தவக்காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அன்பு இறைமக்களே,
   நம்மைப் படைத்து, நமது வாழ்க்கை நெறிகளை வகுத்தளித்த அன்புநிறை இறைவன் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை வரவேற்கிறோம். தவக் காலத்தின் மூன்றாம் ஞாயிறாகிய இன்று நாம் சிறப்பிக்கும்
திருவழிபாடு, இறைப் பற்றுடன் பிறரை அன்புசெய்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுளின் கட்டளைகளைக் கடைப் பிடித்து வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், அவரது திருவுளத்திற்கு ஏற்றவாறு நடக்கவும், பாவச் சூழ்நிலைகளை விட்டு விலகவும் வேண்டும் என்பதை உணர்வோம். இயேசுவைப் போன்று சமூக அநீதிகளுக்கு சாட்டையடி கொடுக்கின்வர்களாய் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அன்புக்குரியோரே,
   இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் கொடுத்த பத்துக் கட்டளைகளை மோசே மக்களுக்கு வழங்குவதைக் காண்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை அன்பு செய்யவும், தன்னைப் போன்று பிறை அன்பு செய்து வாழவும் நாம் அழைக்கப்படுகிறோம். நேர்மையான உள்ளத்துடன் கடவுளின் கட்டளைகளுக்கு பணிந்து வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்புக்குரியோரே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில், சிலுவை மறைபொருளின் வழியாக வெளிப்பட்ட கடவுளின் ஞானத்தையும் வல்லமையையும் பற்றி திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார். நமது ஞானத்தையும் வல்லமையையும் விட, கடவுளின் மடமையும் வலுவின்மையும் மேலானவை என்பதை உணர்ந்து, அவருக்கு உகந்தவர்களாய் வாழும் வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. திருச்சட்டத்தின் நிறைவாம் இறைவா,
   மோசே வழியாக நீர் வழங்கிய பத்து கட்டளைகளும் திருச்சபையோரின் வாழ்க்கை நெறிகளாக தொடர்ந்திட உழைக்கும் ஆற்றலை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதியை நிலைநாட்டும் இறைவா,
   உலக நாடுகளில் நிலவும் அநீதியான சட்டங்களும் அடக்குமுறைகளும் மறையவும், உமது கட்டளைகளுக்கு ஏற்ப உலகில் இறையன்பும் பிறரன்பும் செழிக்கவும் மக்களிடம் நல்லதோர் மனமாற்றத்தை உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. வல்லமை மிகுந்தவராம் இறைவா,
   தாங்களே அதிகாரம் மிக்கவர்கள் என்ற ஆணவத்தில் மிதக்கின்ற எங்கள் நாட்டின் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் உமது வல்லமையை உணர்ந்து, உமக்கும் மக்க ளுக்கும் பணி செய்பவர்களாய் மாற உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஞானத்தின் உற்றாம் இறைவா,
   இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும் பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. போராட அழைப்பவராம் இறைவா,
   உமது கட்டளைகளுக்கு பணிந்து, இயேசுவைப் போன்று அநீதிகளுக்கு எதிராக போராடு பவர்களாக வாழ, எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரை யும் நிறைவாக ஆசீர்வதித்து, வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, March 2, 2012

மார்ச் 4, 2012

தவக்காலம் 2-ம் ஞாயிறு

முதல் வாசகம்: தொடக்கநூல் 22:1-2,9-13,15-18
   அந்நாள்களில், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் 'இதோ! அடியேன்' என்றார். அவர், "உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிட வேண்டும்" என்றார். ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டை களை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று 'ஆபிர காம்! ஆபிரகாம்' என்று கூப்பிட, அவர் 'இதோ! அடியேன்' என்றார். அவர், "பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்'' என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரிபலியாக்கினார். ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, "ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார்.
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8:31-34
   சகோதர சகோதரிகளே, கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!

நற்செய்தி வாசகம்: மாற்கு 9:2-10
  அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். பேதுரு இயேசுவைப் பார்த்து, 'ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்' என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரிய வில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்று முற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காண வில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், 'மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, 'இறந்து உயிர்த்தெழுதல்' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி