Friday, January 27, 2012

ஜனவரி 29, 2012

பொதுக்காலம் 4-ம் ஞாயிறு

முதல் வாசகம்: இணைச்சட்டம் 18:15-20
   அந்நாள்களில் மோசே மக்களிடம் கூறியது: உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப் போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, 'நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக' என்று விண்ணப்பித்தபோது, ஆண்டவர் என்னை நோக்கி, 'அவர்கள் சொன்னதெல்லாம் சரி' என்றார். உன்னைப் போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என் பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன். ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக் கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 7:32-35
   சகோதர சகோதரிகளே, நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். மணமாகாதவர் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் மணமானவர் உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது. மணமாகாத பெண்ணும் கன்னிப் பெண்ணும் ஆண்டவருக்கு உரிய வற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோர் ஆகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழு மனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 1:21-28
  அக்காலத்தில், இயேசுவும் அவரது சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' என்று கத்தியது. "வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ'' என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்ற னவே!" என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Friday, January 20, 2012

ஜனவரி 22, 2012

பொதுக்காலம் 3-ம் ஞாயிறு

முதல் வாசகம்: யோனா 3:1-5,10
   அந்நாள்களில், இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப் பட்டது. அவர், நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவ ரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்றுநாள் ஆகும். யோனா நகருக்குள் சென்ற, ஒரு நாள் முழுதும் நடந்தபின், உரத்த குரலில், இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும் என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர்.  கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்: தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லி யிருந்த தண்டனையை அனுப்பவில்லை.
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 7:29-31
   அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.

நற்செய்தி வாசகம்: மாற்கு 1:14-20
   யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார். அவர் கலிலேயக் கடலோரமாய் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயா வையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Friday, January 13, 2012

ஜனவரி 15, 2012

பொதுக்காலம் 2-ம் ஞாயிறு

முதல் வாசகம்: 1 சாமுவேல் 3:3-10,19
   அந்நாள்களில் கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தான். அப்போது ஆண்டவர், "சாமுவேல்" என்று அழைத்தார். அதற்கு அவன், "இதோ! அடியேன்" என்று சொல்லி, ஏலியிடம் ஓடி, "இதோ! அடியேன் என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான். அதற்கு அவர், நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள் என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான். ஆண்டவர் மீண்டும் "சாமுவேல்" என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, "இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான். அவரோ, "நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள்" என்றார். சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறிய வில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. மூன்றாம் முறையாக ஆண்டவர் "சாமுவேல்" என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று, "இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டார். பின்பு ஏலி சாமுவேலை நோக்கி, "சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ ஆண்டவரே பேசும் உம் அடியேன் கேட்கிறேன் என்று பதில் சொல்" என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான். அப்போது ஆண்டவர் வந்து நின்று, "சாமுவேல் சாமுவேல்" என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல், "பேசும், உம் அடியேன் கேட்கிறேன்" என்று மறுமொழி கூறினான். சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 6:13-15,17-20
   சகோதர சகோதரிகளே, உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர். ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார். உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார். எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர். உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.

நற்செய்தி வாசகம்: யோவான் 1:35-42
   அக்காலத்தில் யோவான் தம் சீடர் இருவருடன் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, "இதோ! கடவுளின் செம்மறி" என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, "என்ன தேடுகிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், "வந்து பாருங்கள்" என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, "மெசியாவைக் கண்டோம்" என்றார். 'மெசியா' என்றால் அருள் பொழிவு பெற்றவர் என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, "நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா' எனப்படுவாய்'' என்றார். 'கேபா' என்றால் 'பாறை' என்பது பொருள். 

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Saturday, January 7, 2012

ஜனவரி 8, 2012

ஆண்டவரின் திருமுழுக்கு விழா
(இந்தியாவில்: ஜனவரி 9, திங்கள்)

முதல் வாசகம்: எசாயா 55:1-11
   ஆண்டவர் கூறுவது: தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள். எனக்குச் செவி கொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றும் உள்ள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன். நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராக வும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாத பிற இனமக்களை அழைப்பாய்; உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிற இனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தி யுள்ளார். ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங் களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன. மழையும் பனியும் வானத்தி லிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.     
இரண்டாம் வாசகம்: 1 யோவான் 5:1-9
   அன்பார்ந்தவர்களே, இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிட மிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத் தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக் கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 1:7-11
   அக்காலத்தில் யோவான் அறிவித்ததாவது: "என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்" எனப் பறைசாற்றினார். அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப்போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார். அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

Thursday, January 5, 2012

ஜனவரி 6, 2012

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா
(இந்தியாவில்: ஜனவரி 8, ஞாயிறு)

முதல் வாசகம்: எசாயா 60:1-6
  எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.     
இரண்டாம் வாசகம்: எபேசியர் 3:2-3,5-6
   சகோதர சகோதரிகளே, உங்கள் நலனுக்காக கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப் படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 2:1-12
   ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், "யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், 'யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங் களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்' என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்" என்றார்கள். பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டு போய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், "நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்" என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கி னார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போள மும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Sunday, January 1, 2012

ஜனவரி 1, 2012

கன்னி மரியா இறைவனின் தாய் பெருவிழா

முதல் வாசகம்: எண்ணிக்கை 6:22-27
  ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!'' இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.     
இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 4:4-7
   சகோதர சகோதரிகளே, காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். நீங்கள் பிள்ளை களாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி 'அப்பா, தந்தையே,' எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர் களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.

நற்செய்தி வாசகம்: லூக்கா 2:16-21
   அக்காலத்தில் இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித் தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தை யும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. குழந்தைக்கு விருத்த சேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி