Friday, July 27, 2012

ஜூலை 29, 2012

பொதுக்காலம் 17-ம் ஞாயிறு

முதல் வாசகம்: 2 அரசர்கள் 4:42-44 
   அந்நாள்களில் பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப் பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, "மக்களுக்கு உண்ணக் கொடு" என்றார். அவருடைய பணியாளன், "இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?" என்றான். அவரோ, "இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெ னில் 'உண்ட பின்னும் மீதி இருக்கும்' என்று ஆண்டவர் கூறுகிறார்" என்றார். அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.
இரண்டாம் வாசகம்: எபேசியர் 4:1-6
   சகோதர சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல் லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

நற்செய்தி வாசகம்: யோவான் 6:1-15
   அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறு கரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மை யில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவ தைக் கண்டு, "இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?'' என்று பிலிப் பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே'' என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?'' என்றார். இயேசு, "மக்களை அமரச் செய்யுங்கள்'' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண் களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந் தளித்தார். அவர்களுக்கு வேண்டியமட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்'' என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டு களைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ``உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண் மையில் இவரே'' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரச ராக்க போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, July 25, 2012

ஜூலை 29, 2012

பொதுக்காலம் 17-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
வாழ்வுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரை யும் அன்புடன் அழைக்கிறோம். இறைவன் நமக்கு மிகுதியாக தருகிறார் என்ற கருத்தை இன்றைய திருவழிபாடு நமக்கு முன்வைக்கிறது. மக்கள் மீது பரிவு கொண்டவராய் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்கிறார். நம் மேல் கனிவு காட்டும் இறைவன், நமது வாழ்வில் அற்புதங்களை செய்யவும் தயாராக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இறைவனின் செயல்பாட்டை நம் வாழ்வில் உணர, நாம் அன்போடும் தாழ்மையோடும் நம்மை அவரிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம். ஆண்டவரின் அருஞ்செயல்களை நமது வாழ்வில் காண வரம் வேண்டி, இந்த திருப்பலி யில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
வாழ்வுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், இயேசு அப்பங்களைப் பலுகச் செய்ததன் முன் அடையாள மாக இறைவாக்கினர் எலிசா செய்த அற்புதத்தை எடுத்துரைக்கிறது. பணியாளர் கொண்டு வந்த இருபது வாற்கோதுமை அப்பங்களைப் பலுகச் செய்து எலிசா நூறு பேரின் பசியாற் றிய நிகழ்வையும், ஆண்டவரின் சொல்லுக்கு ஏற்ப அவற்றில் மீதியும் இருந்ததாக இங்கு காண்கிறோம். நாமும் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டவர்களாக வாழ்ந்து, மிகுதியான வரங் களைப் பெற வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
வாழ்வுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவரில் முழுமையாக நம்பிக்கை கொள்ள அழைப்பு விடுக்கிறார். அன்பு, அமைதி, பொறுமை, கனிவு, தாழ்மை ஆகியவற்றைக் கடைபிடித்து, அனைவரும் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும் என்ப தையும் அவர் எடுத்துரைக்கிறார். திருமுழுக்கின் வழியாக கடவுளின் பிள்ளைகளாக மாறியுள்ள நாம், அவரை முழுமையாக சார்ந்து வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத் துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. பரிவுள்ளவராம் இறைவா,
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனை வரும் உமது மக்கள் மீது பரிவு கொள்ளும் நல்ல மேய்ப்பர்களாகவும், அவர்களின் தேவை யறிந்து பணிபுரியும் சிறந்த தலைவர்களாகவும் செயல்பட துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. கனிவுள்ளவராம் இறைவா,
  எங்கள் நாட்டு மக்களை வழிநடத்தும் அரசியல், சமூகத் தலைவர்கள் அனைவரும் மக்களை அன்பு, அமைதி, ஒற்றுமை போன்ற இறையரசின் மதிப்பீடுகளில் வழிநடத்த வும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க உழைக்கவும் உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. இரக்கம் உள்ளவராம் இறைவா,
  
உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் தேவைகளில் உம்மையே நாடி வரவும், உமது இரக்கத்தால் அனைத்து நலன்களையும் பெற்று, உமக்கு உகந்த மக்களாக உருமாற்றம் பெறவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வளிப்பவராம் இறைவா,
   போர்ச் சூழல், வறட்சி, இல்லாமை, இயலாமை போன்ற காரணங்களால் உணவின்றி வாடுவோருக்கும், அன்பின்மை, அமைதியின்மை, நலமின்மை போன்ற துன்பங்களால் வருந்துவோருக்கும் 
புதுவாழ்வு வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மிகுதியாகத் தருபவராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம்மில் முழு மையாக நம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து, நீர் வழங்கும் அருளாதார, பொருளாதார நலன்களை மிகுதியாகப் பெற்று மகிழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, July 20, 2012

ஜூலை 22, 2012

பொதுக்காலம் 16-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எரேமியா 23:1-6 
   ஆண்டவர் கூறுவது: "என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு!" தம் மக்களை வழிநடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: "நீங்கள் என் மந்தையைச் சித றடித்துவிட்டீர்கள்; அதனைத் துரத்தியடித்தீர்கள்; அதனைப் பராமரிக்கவில்லை." "இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன்" என்கிறார் ஆண் டவர். "என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடு களிலிருந்தும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப்பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும். அவற்றைப் பேணிக் காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா; திகிலுறா; காணாமலும் போகா" என்கிறார் ஆண்டவர். ஆண்டவர் கூறுவது: "இதோ நாள்கள் வருகின்றன. அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள 'தளிர்' தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படு வார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். 'யாவே சித்கேனூ' - ஆண்ட வரே நமது நீதி - என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்."
இரண்டாம் வாசகம்: எபேசியர் 2:13-18
   சகோதர சகோதரிகளே, ஒரு காலத்தில் தொலையில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டுவரப் பட்டிருக்கிறீர்கள். ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத் தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார். பல கட்டளைகளையும் விதி களையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந் திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத் தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார். அவர் வந்து, தொலையில் இருந்த உங்களுக்கும், அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற் செய்தியாக அறிவித்தார். அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 6:30-34
   அக்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்த வையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், "நீங்கள் பாலை நிலத் திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்'' என்றார். ஏனெ னில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலை நிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையா கவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, July 18, 2012

ஜூலை 22, 2012

பொதுக்காலம் 16-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினாறாம் ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறோம். இறைவனின் மந்தையாகிய மக்கள் முறையான வழிநடத்துதல் இன்றி சிதறிப்போகும்போது, ஆண்டவர் நமக்காக புதிய ஆயர்களை வழிகாட்டிகளாக அனுப்பு கிறார் என்பதை இன்றைய திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. இறைவனின் பராம ரிப்பை வழங்கும் திருச்சபையின் திருப்பணியாளர்களைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப் படுகிறோம். இறைவனால் நம்மிடம் அனுப்பப்பட்ட மேய்ப்பர்களாகிய அவர்களை ஏற்று வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவரின் ஆடுகளை சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு எதிரான வார்த்தைகள் இறைவாக்கினர் எரேமியா வழியாக உரைக்கப்படுகின்றன. ஆண்ட வர் தனது மந்தையாகிய இறைமக்கள் மீது கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையை நாம் இங்கு காண்கிறோம். தாவீதின் வழிமரபில் தோன்றும் கிறிஸ்து வழியாக, புதிய ஆயர் களை உருவாக்கும் கடவுளின் திட்டம் முன்னறிவிக்கப்படுகிறது. இறைத்திட்டத்துக்கு உகந்த ஆயர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு கீழ்ப்படியும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், யூதர்கள், பிறஇனத்தார் என்று பிரிந்திருந்த உலக மக்களை கிறிஸ்துவே ஒன்றிணைத்தார் என்று எடுத்துரைக்கிறார். அன்பின் வெளிப்பாடாக இயேசு நமக்காக ஏற்றுக்கொண்ட துன்பங்கள் வழியாக, நமது பகைமைச்சுவர் தகர்க்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார். கிறிஸ்து அறிவித்த அமைதியின் நற்செய்தி நம்மை தந்தையாம் கடவுளிடம் கொண்டு சேர்க்க வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நல்லாயராம் இறைவா,
  
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனை வரும் உமக்கு ஏற்ற நல் மேய்ப்பர்களாக பணியாற்றவும், இறைமக்கள் அனைவரையும் கூட்டிச் சேர்த்து, உமது அரவணைப்பின் கீழ் கொண்டு வரவும் துணைசெய்ய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் தலைவராம் இறைவா,
   உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் உமக்கு உகந்த தலைவர்களால் வழிநடத்தப் படவும், அன்பு, அமைதி, ஒற்றுமை போன்ற இறையரசின் மதிப்பீடுகளை இம்மண்ணில் நிலைநாட்டவும் உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. ஆயர்களை அனுப்புபவராம் இறைவா,
  
உண்மையின் வழியில் மக்களை வழிநடத்தும் நல்ல ஆயர்களை எங்கள் நாட்டுக்கு அனுப்பி, வாழும் உண்மை கடவுளாகிய உம்மை அறிந்துகொள்ள மக்களுக்கு உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஒன்றிணைப்பவராம் இறைவா,
   பல்வேறு காரணங்களுக்காக பிரிந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள், நாடுகள் மற்றும் இனங்களின் மக்கள் அனைவரும், ஏற்றுக்கொள்தல், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் ஆகியவற்றின் மேன்மையை உணர்ந்தவர்களாய், பகைமையை வி
டுத்து ஒன்றிப்பில் புது வாழ்வு காண அகத்தூண்டுதல் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வாழ்வு தருபவராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், கிறிஸ்துவின் நற்செய்தி ஒளியில் வாழவும், உமக்கு சான்று பகரும் மந்தையாய் ஒன்றிணைந்து செயல் படவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, July 13, 2012

ஜூலை 15, 2012

பொதுக்காலம் 15-ம் ஞாயிறு

முதல் வாசகம்: ஆமோஸ் 7:12-15 
   அந்நாள்களில் பெத்தேலின் குருவாகிய அமட்சியா ஆமோசைப் பார்த்து, "காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்'' என்று சொன்னான். ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறி னார்: "நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக் கொண்டுபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, 'என் மக்களாகிய இஸ்ரயே லிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு' என்று அனுப்பினார்.''
இரண்டாம் வாசகம்: எபேசியர் 1:3-14
   நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள் வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அந்த அருளை அவர் நம்மில் பெருகச் செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத் திறனையும் தந்துள்ளார். அவர் தமது திருவுளத்தின் மறை பொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தை யுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற திட்டமே அம்மறை பொருள். கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப்பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்துபாட வேண்டுமென அவர் விரும்பி னார். நீங்களும், உங்களுக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தை யைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக் குள் முத்திரையிடப்பட்டீர்கள். அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது. இவ்வாறு கடவுளது மாட்சியின் புகழ் விளங்கும்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 6:7-13
   அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள்மீது அதிகாரமும் அளித்தார். மேலும், "பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். மேலும் அவர், "நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கி ருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'' என்று அவர்களுக்குக் கூறினார். அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப் படுத்தினார்கள்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, July 11, 2012

ஜூலை 15, 2012

பொதுக்காலம் 15-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பெற்றவர்களே,
   பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்களை அன்பு டன் வரவேற்கிறோம். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் அனைவரும், அவரது பணிக்காக அனுப்பப்பட்டிருப்பதை இன்றைய திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. இயேசுவை அறியாதவர்களிடம், அவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க கிறிஸ்தவர் களாகிய நம் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு என்பதை உணர அழைக்கப்படுகி றோம். இயேசுவிடம் பிறரைக் கொண்டு சேர்க்கும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பெற்றவர்களே,
     இன்றைய முதல் வாசகம், பெத்தேலின் குருவாகிய அமட்சியா ஆமோஸ் இறைவாக் கினரை வேறிடத்துக்கு சென்று இறைவாக்கு உரைக்க கோரும் நிகழ்வை எடுத்து ரைக்கிறது. இஸ்ரயேலில் இறைவாக்கு உரைக்க ஆண்டவரே தன்னை அனுப்பியதாக ஆமோஸ் துணிவுடன் பதிலளிப்பதை இங்கு காண்கிறோம். இறைவனின் பணியினை நாமும் துணிவோடு ஆற்ற வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பெற்றவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நாம் கடவுளுக்காக கிறிஸ்துவின் வழியாக தேர்ந்தேடுக்கப்பட்டிருப்பதை நினைவூட்டுகிறார். இயேசு நமக்காக சிந்திய இரத்தத்தால் நாம் மீட்பு அடைந்துள்ளோம் என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். கிறிஸ் துவின் தலைமையில் அனைத்தையும் ஒன்று சேர்க்க உழைக்கும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. பணியாற்ற அழைப்பவராம் இறைவா,
  
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனை வரும் உமக்கு உகந்த பணியாளர்களாக விளங்கவும், திருச்சபையின் மக்கள் அனைவ ரையும் உமது பணி செய்பவர்களாக உருமாற்றவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. தலைவராக பணிப்பவராம் இறைவா,
   இந்த உலகின் ஒவ்வொரு நாட்டிலும் தலைமைப் பணியாற்றும் ஒவ்வொருவரையும் உமது அன்பினால் நிறைத்து, உமக்கு உகந்தவர்களாய் இறையரசைக் கட்டியெழுப்பும் தெளிந்த மனதை அவர்களில் உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. பொறுப்பை வழங்குபவராம் இறைவா,
  
எங்கள் நாட்டில் நடைபெற இருக்கும் குடியரசுத்தலைவர் தேர்தலில் உமக்கு உகந்த ஒரு நல்ல தலைவருக்கு வாக்களிக்கும் தூண்டுதலை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப் பினர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. அற்புதங்கள் செய்பவராம் இறைவா,
   பல்வேறு நோய்களாலும், துன்பங்களாலும் வேதனை அடைந்து வருந்தும் மக்கள் அனைவரும், கிறிஸ்தவர்களின் செபங்களால் அற்புதங்களைப் பெற்று உமது இறை யரசில் ஒன்றிணைய உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. தேர்ந்தெடுத்து அனுப்புபவராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது அன்பின் சாட்சிகளாகவும் நற்செய்தியின் தூதுவர்களாகவும் வாழவும், நீர் எங்களுக்கு நியமித் துள்ள
ப் பணிகளை நிறைவேற்றுபவர்களாக திகழவும் துணை செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, July 6, 2012

ஜூலை 8, 2012

பொதுக்காலம் 14-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசேக்கியேல் 2:2-5 
   அந்நாள்களில் ஆண்டவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது; அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன். அவர் என்னிடம், "மானிடா! எனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்று வரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர்'' என்றார். "வன் கண்ணும் கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம் போய், 'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்று சொல். கலக வீட்டாராகிய அவர்கள், செவிசாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும், தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.''
இரண்டாம் வாசகம்: 2 கொரிந்தியர் 12:7-10
   சகோதர சகோதரிகளே, எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப்போல் இருக்கிறது. நான் இறுமாப்பு அடையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவ ரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், "என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்'' என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ் துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கி றேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 6:1-6
   அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வு நாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், "இவருக்கு இவை யெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலும் உள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, July 4, 2012

ஜூலை 8, 2012

பொதுக்காலம் 14-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினான்காம் ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்களை அன்பு டன் அழைக்கிறோம். இறைவனின் பணியாளர்களிடம் நம்பிக்கை கொண்டு புதுமை களைக் காண இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவை ஏற் றுக்கொள்ள மனமில்லாத மக்களிடையே அவரால் புதுமைகள் செய்ய முடியவில்லை. கடவுளின் திருப்பணியை செய்யும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் ஆகியோரின் முக்கியத்துவத்தை உணர நாம் அழைக்கப்படுகிறோம். இறைவனிடமும் பிறரிடமும் சரியான நம்பிக்கை கொண்டு வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே,
     இன்றைய முதல் வாசகம், எசேக்கியேல் இறைவாக்கினரை ஆண்டவர் இஸ்ரயேல் மக்களிடம் அனுப்பிய நிகழ்வை எடுத்துரைக்கிறது. இஸ்ரயேலர் பலர் கடவுளின் பெய ரால் வந்த இறைவாக்கினர்களை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாதவர்களாக இருந்ததை இதில் காண்கிறோம். நாம் இறைவனின் பணியாளர்களை ஏற்றுக்கொள்ளும் மனதுள்ள வர்களாக வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், தனது வலுவின்மையில் கட வுளின் வல்லமையைக் காண்பதாக எடுத்துரைக்கிறார். ஆண்டவரின் வெளிப்பாடுகளால் இறுமாப்பு அடையாமல் இருக்குமாறு தனக்கு இந்த துன்பம் வழங்கப்பட்டிருப்பதாக அவர் ஏற்றுக்கொள்கிறார். புனித பவுலைப் போன்று நமது வாழ்வில் வரும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நம்பிக்கை தருபவராம் இறைவா,
  
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனை வரும் உமக்கு நம்பிக்கைக்குரியவர்களாக விளங்கவும், திருச்சபையின் மக்கள் எல்லா ரும் அவர்களிடம் நம்பிக்கை கொண்டு வாழவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. தேர்வு செய்பவராம் இறைவா,
  
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் நடுவிலிருந்து, திருச்சபையை வளப்படுத்த தேவையான அருட்பணியாளர்களையும், நல்ல அரசியல், சமூகத் தலைவர்களையும் தேர்ந்தெடுத்து உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நற்பேறு வழங்குபவராம் இறைவா,
  எங்கள் நாட்டு மக்களும், தலைவர்களும் உம்மிலும் பிறரிலும் நம்பிக்கை கொண்டு வாழவும், ஒருவரை ஒருவர் மதித்து நடந்து அன்பிலும் அமைதியிலும் வளர்ச்சி காண வும் உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. ஆறுதல் அளிப்பவராம் இறைவா,
   பல்வேறு நோய்களாலும், துன்பங்களாலும் வேதனை அடைந்து வருந்தும் மக்கள் அனைவரும், நம்பிக்கையோடு உமது உதவியை நாடவும், உமது இரக்கத்தால் தங்கள் வாழ்வில் ஆறுதலை சுவைக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. புதுமைகள் புரிபவராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம்மிலும் பிறரி லும் முழுமையான நம்பிக்கை கொண்டு வாழவும், உமது அருளால் வாழ்க்கைத் தேவை களில் நிறைவு காணவும்
புதுமைகள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Sunday, July 1, 2012

ஜூலை 1, 2012

பொதுக்காலம் 13-ம் ஞாயிறு

முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 1:13-15,2:23-24 
   சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை. கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக் கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.
இரண்டாம் வாசகம்: 2 கொரிந்தியர் 8:7,9,13-15
   சகோதர சகோதரிகளே, நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தை யும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள்மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெரு கிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபட வேண்டும். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். மற்றவர்களின் சுமையைத் தணிப்ப தற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லாரும் சம நிலையில் இருக்கவேண்டும் என்றே சொல்கிறோம். இப்பொழுது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும். "மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்த வருக்கும் எதுவும் குறைவுபடவில்லை'' என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

நற்செய்தி வாசகம்: மாற்கு 5:21-43
   அக்காலத்தில் இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழு கைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, "என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக் கொள்வாள்'' என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர். அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத் தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட் டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப் பட்டு, மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்'' என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார். உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "என் மேலுடையைத் தொட்டவர் யார்?'' என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், "இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்கு வதைக் கண்டும், 'என்னைத் தொட்டவர் யார்?' என்கிறீரே!'' என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந் தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு'' என்றார். அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, தொழு கைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?'' என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்'' என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, "ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்கு கிறாள்'' என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரை யும் வெளியேற்றிய பின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர் களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கை யைப் பிடித்து அவளிடம், "தலித்தா கூம்'' என்றார். அதற்கு, 'சிறுமி, உனக்குச் சொல்லு கிறேன், எழுந்திடு' என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னி ரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். "இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது'' என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்ட ளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி