Saturday, April 27, 2013

ஏப்ரல் 28, 2013

பாஸ்கா காலம் 5-ம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 14:21-27
   அந்நாள்களில் பவுலும் பர்னபாவும் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, "நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்'' என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள். அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள்.
இரண்டாம் வாசகம்: திருவெளிப்பாடு 21:1-5
   யோவானாகிய நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற்போயிற்று. அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது. பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, "இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன'' என்றது. அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், "இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்'' என்று கூறினார். மேலும், "'இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை' என எழுது'' என்றார்.

நற்செய்தி வாசகம்: யோவான் 13:31-35
  யூதாசு இறுதி இராவுணவின் அறையை விட்டு வெளியே போனபின் இயேசு, "இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, April 25, 2013

ஏப்ரல் 28, 2013

பாஸ்கா காலம் 5-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
ஆண்டவரின் அன்புக்குரியோரே,
   நம் அன்பராம் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நமது ஆண்டவர் இயேசு நம்மை அன்பு செய் தது போன்று, நாமும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டவர்களாய் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் வாழ்வு கடவுளை மாட்சிப்படுத் தியது போல, நம் அன்பு வாழ்வின் வழியாக கடவுளை மாட்சிப்படுத்த நாம் அழைக்கப் பட்டுளோம். இயேசுவின் அழைப்புக்கு ஏற்ப அவரது சீடர்களாய் வாழ்ந்து, கடவுள் தரும் மாட்சியைப் பெற வரம் வேண்டி, நாம் இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்புக்குரியோரே,
   இன்றைய முதல் வாசகம், பவுலும் பர்னபாவும் திருச்சபையின் மக்களை விசுவாசத் தில் உறுதிபடுத்திய நிகழ்வை நமக்கு தருகிறது. லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக் கியா என பல்வேறு இடங்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை சந்தித்து, திருத்தூதர்கள் தங்கள் மேய்ப்பு பணியை ஆற்றுவதை இங்கு காண்கிறோம். பல வேதனைகள் வழியா கவே இறையாட்சிக்கு நாம் உட்பட முடியும் என்ற அறிவுரை நமக்கு வழங்கப்படுகிறது. அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று தேர்வு செய்யப்பட்டுள்ள நாம், அந்த பணியை சிறப்பாக நிறைவேற்ற வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்புக்குரியோரே,
   இன்றைய இரண்டாம் வாசகம்,
புதிய விண்ணகத்தையும் புதிய மண்ணகத்தையும் பற்றி பேசுகிறது. மனிதர் நடுவே உள்ள உறைவிடத்தில் கடவுள் குடியிருப்பார் என்ற வாக்குறுதி நமக்கு வழங்கப்படுகிறது. நம் கண்ணீர் அனைத்தையும் துடைக்கும் கடவுளின் மக்களாக வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். சாவு, துயரம், அழுகை இல்லாத புதிய வாழ்வை வழங்க வல்லவராம் கடவுளில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வாழ்வின் வழியாம் இறைவா,
   திருச்சபையின் மக்கள் அனைவரும் இறையன்பிலும், பிறரன்பிலும் வளர வழிகாட்டு பவர்களாய் திகழும் வரத்தை திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவ ருக்கும் வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. வாழ்வின் ஒளியாம் இறைவா,
  கிறிஸ்தவ உண்மைகளை எதிர்ப்பதையே நோக்கமாக கொண்டு வாழும் மாற்று சமயத் தினர் அனைவரும் மனந்திரும்பி, உமது உண்மையின் ஒளியை நோக்கி முன்னேற
அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. வாழ்வின் இலக்காம் இறைவா,
  கிறிஸ்தவர்கள் செய்யும் சமூக நலப் பணிகளை தவறாக கண்ணோக்கும் இயக்கங்களின் வழிகாட்டுதலால் மனதில் நஞ்சு கலந்திருக்கும் இளைஞர்கள், நீரே வாழ்வின் உண்மை யான இலக்கு என்பதை உணர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. வாழ்வின் துணையாம் இறைவா,
   நோய், துன்பம், அழுகை போன்றவற்றையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் மக்கள், மன அமைதியையும், மகிழ்ச்சியையும் சுவைக்கும் வகையில் புதிய வாழ்வைக் காண
துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வாழ்வின் நிறைவாம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது மாட்சியில் பங்குபெறும் வகையில் அன்பு வாழ்வின் மூலம் கிறிஸ்துவின் சீடர்களாக திகழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, April 20, 2013

ஏப்ரல் 21, 2013

பாஸ்கா காலம் 4-ம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 13:14,43-52
   அந்நாள்களில் பவுலும் பர்னபாவும் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவி லுள்ள அந்தியோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வு நாளன்று அவர்கள் தொழுகைக்கூடத் திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள். தொழுகைக் கூடத்தில் இருந்தோர் கலைந்து சென்றபோது பல யூதர்களும் யூதம் தழுவிக் கடவுளை வழிபட்டவர்களும் பவுலையும் பர்னபாவையும் பின்தொடர்ந்தார்கள். இவ்விருவரும் அவர்களோடு பேசி கடவுளின் அரு ளில் நிலைத்திருக்கும்படி அவர்களைத் தூண்டினர். அடுத்து வந்த ஓய்வுநாளில் ஆண்டவ ரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடிவந்தனர். மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரை பழித்துரைத்தார்கள். பவுலும் பர்னபாவும் துணிவுடன், "கடவுளின் வார்த்தையை உங்களுக்குத்தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உத றித்தள்ளி நிலை வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித் துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம். ஏனென்றால், 'உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்' என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்'' என்று எடுத்துக் கூறினார்கள். இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவ ரும் நம்பிக்கை கொண்டனர். அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது. ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன் மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு, இக்கோனியாவுக்குச் சென்றார் கள். சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.
இரண்டாம் வாசகம்: திருவெளிப்பாடு 7:9,14-17
   யோவானாகிய நான் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியை யும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார் கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள். மூப்பர்களுள் ஒருவர் என்னிடம் கூறியது: "இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள். இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்று கொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டு வருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்க ளைப் பாதுகாப்பார். இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா. ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.''

நற்செய்தி வாசகம்: யோவான் 10:27-30
  அக்காலத்தில் இயேசு கூறியது: "என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற் றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலி ருந்து யாரும் பறித்துக்கொள்ள மாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனை வரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, April 18, 2013

ஏப்ரல் 21, 2013

பாஸ்கா காலம் 4-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   நல்லாயராம் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு திருப் பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். நல்லாயன் ஞாயிறில் சிறப்பிக்கப் படும் இன்றைய திருவழிபாடு, இயேசுவைப் பின்தொடர்ந்து, நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ளும் ஆடுகளாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் குரலுக்கு செவி கொடுக்கும் ஆடுகளாக வாழும்போது நாம் அழிவுக்குள்ளாக மாட்டோம். நமக்காக உயி ரைக் கொடுத்த ஆண்டவர் இயேசுவிடம் இருந்து நம்மை எதுவும் பிரித்து விடாத வகை யில், அவரது பாதுகாப்பில் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவருக்கு உண்மை யுள்ள ஆடுகளாக வாழ்ந்து, நாம் கடவுளைச் சார்ந்தவர்கள் என்பதை மற்றவர்களுக்கு பறைசாற்ற வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், திருத்தூதர்கள் பவுல், பர்னபா ஆகியோர் அந்தியோக்கு நக ரில் நற்செய்தி அறிவித்தது பற்றி எடுத்துரைக்
கிறது. அவர்களின் போதனையைக் கேட்க ஏறத்தாழ நகரத்தார் அனைவரும் திரண்டதால் பொறாமை கொண்ட யூதர்கள், பவுலுக் கும் பர்னபாவுக்கும் எதிராக மக்களைத் தூண்டிவிடுவதைக் காண்கிறோம். வேற்றினத் தார்க்கு ஒளியாக இருக்குமாறு அழைக்கப்பட்ட அவர்கள், யூதர்களுக்கு எதிராக கால் தூசியை உதறிவிட்டு வேறு இடத்துக்கு நற்செய்தி பணியாற்ற செல்கிறார்கள். எத்தனை இன்னல்கள் வந்தாலும் கிறிஸ்துவுக்கு உண்மையான சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு நாம் கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், விண்ணக அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்த மக்களைப் பற்றிய யோவானின் திருவெளிப்பாட்டு காட்சியை எடுத் துரைக்கிறது. கடவுளின் ஆட்டுக்குட்டியாம் இயேசுவின் முன்பாக எல்லா நாட்டையும், குலத்தையும் இனத்தையும், மொழியையும் சார்ந்த மக்கள் நிற்பதைக் காண்கிறோம். நல்லாயராம் இயேசு, நம்மை வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்வார் என்ற வாக்குறுதி இங்கு அளிக்கப்படுகிறது. ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் தூய்மையாக் கப்பட்ட மக்களாக வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு நாம் கவனமுடன் செவி கொடுப்போம்.


இறைமக்கள் மன்றாட்டு:
1. எங்கள் நல்லாயராம் இறைவா,
  
உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு உகந்த மந்தையாக இறைமக்களை உருவாக்க துணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் ஒளியாம் இறைவா,
   உம்மைப் பற்றிய உண்மையைப் புறக்கணித்து, தவறான கொள்கைகளையும் சமயங் களையும் பின்பற்றி வாழும் மக்கள், உண்மை கடவுளாகிய உம்மை ஏற்றுக்கொள்ளவும் உமது அரசில் ஒன்றிணையவும் அருள்புரிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் தலைவராம் இறைவா,
   எங்கள் நாட்டை வழிநடத்தும் அரசியல், சமூகத் தலைவர்
கள் அனைவரும் நீதியோடும், நேர்மையோடும் மக்களை உண்மையின் பாதையில் வழிநடத்தவும், உமது திருச்சபை இம்மண்ணில் வளர துணை நிற்கவும் உதவ வேண்டுமென்று  உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் வழியாம் இறைவா,
  தங்கள் சுயநலத்துக்காக பணம், பதவி, போதை, வன்முறை ஆகியவற்றின் மீது ஆர்வம் கொண்
டு, பிறருடைய நிம்மதியை சீர்குலைக்கும் தீயவர்கள் அனைவரும் மனம் திருந்தி உமது தூய வழியைப் பின்பற்ற வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் வாழ்வாம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது மந்தை யின் நல்ல ஆடுகளாகவும், உமக்கு சான்று பகரும் நல்ல கிறிஸ்தவர்களாகவும் வாழத் தேவையான நலன்களை எம்மில் பொழிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, April 13, 2013

ஏப்ரல் 14, 2013

பாஸ்கா காலம் 3-ம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 5:27-32,40-41
   அந்நாள்களில் தலைமைக் குரு திருத்தூதர்களை நோக்கி, "நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!'' என்றார். அதற்கு பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, "மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல் லவா கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கு மனமாற்றத் தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்ப ராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்'' என்றனர். இனி இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாது என்று திருத்தூதர்களுக்குக் கட்டளையிட்டு விடுதலை செய்தனர். இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.
இரண்டாம் வாசகம்: திருவெளிப்பாடு 5:11-14
   யோவானாகிய நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களை யும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட் டேன்: "கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது'' என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக்கொண்டிருந்தார்கள். பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், "அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன'' என்று பாடக் கேட்டேன். அதற்கு அந்த நான்கு உயிர்களும், 'ஆமென்' என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.

நற்செய்தி வாசகம்: யோவான் 21:1-19
  அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவி லுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசு வின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்க ளிடம், "நான் மீன்பிடிக்கப் போகிறேன்'' என்றார். அவர்கள், "நாங்களும் உம்மோடு வருகி றோம்'' என்று கூறி, போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏற்கனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், "பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இல்லை'' என்றார்கள். அவர், "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்'' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், "அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்'' என்றார். அதைக் கேட்ட வுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக் கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக் குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். படகை விட்டு இறங்கியவுடன் கரி யினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண் டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், "நீங்கள் இப்போது பிடித்த வற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்'' என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழிய வில்லை. இயேசு அவர்களிடம், "உணவருந்த வாருங்கள்'' என்றார். சீடர்களுள் எவரும், "நீர் யார்?'' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார். அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?'' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!'' என்றார். இயேசு அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்'' என்றார். இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?'' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!'' என்றார். இயேசு அவரிடம், "என் ஆடுகளை மேய்'' என்றார். மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?'' என்று கேட்டார். 'உனக்கு என்னிடம் அன்பு உண்டா?' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?'' என்றார். இயேசு அவரிடம், "என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்'' என்றார். பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், "என்னைப் பின்தொடர்'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, April 11, 2013

ஏப்ரல் 14, 2013

பாஸ்கா காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
உண்மைக்குரியவர்களே,
   உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். இயேசுவின் உயிர்ப்பை முழுமையாக ஏற்று, உண்மையான இறைமகனாகிய அவரைப் பின்தொடர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்து இயேசு தம் சீடர்களுக்கு திபேரியக் கடல் அருகே தோன்றியபோது, சீடர்கள் அவரில் சந்தேகம் கொள்ளவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். அவர்களைப் போன்று, ஆண்டவரின் உயிர்ப்புக்கு உண்மையான சாட்சிகளாக வாழ நாம் அழைக்கப்படு கிறோம். பேதுருவைப் போன்று இயேசுவின் மீதான அன்பை வெளிப்படுத்த மீண்டும் நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தைப் பெற்று, நாமும் உயிர்ப்பின் மக்களாக வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
உண்மைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், யூத தலைமைச் சங்கத்துக்கு முன்பாக திருத்தூதர்கள் இயேசுவின் உயிர்ப்புக்கு துணிவுடன் சான்று பகர்ந்ததை எடுத்துரைக்கிறது. யூதர்களின் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்ட இயேசு, கடவுளின் வல்லமையால் உயிர்த்தெழுந்தார் என்பதை திருத்தூதர்கள் பறைசாற்றுவதைக் காண்கிறோம். மக்களைப் பாவங்களில் இருந்து விடுவிக்கும் மீட்பரான இயேசு தந்தையாம் கடவுளின் வலது பக்கத்தில் வீற்றி ருப்பதை நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவுக்காக அவமதிப்பையும் சகித்து வாழ வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு
செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
உண்மைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், நமக்காக கொல்லப்பட்டு, உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவை கடவுளின் ஆட்டுக்குட்டியாக சித்தரிக்கிறது. "கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்ற
து" என்று விண்ணகத்தில் கேட்ட புகழொலியை யோவான் எடுத்துரைக்கிறார். கிறிஸ்துவின் மாட்சி இங்கு பறைசாற்றப் படுகிறது. விண்ணக அரியணையில் வீற்றிருக்கும் கடவுளில் கிறிஸ்துவின் மாட்சி துலங் குவதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் மாட்சியை உணர்ந்தவர்களாய், அவரது புகழ்பாடும் வகையில் வாழ வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஆற்றலின் ஊற்றாம் இறைவா,
   இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாக வாழ அழைக்கப்பட்டுள்ள திருச்சபையின் திருத் தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும், உண்மை யின் நற்செய்தியை உலகுக்கு பறைசாற்றத் தேவையான துணிவை வழங்க வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மேன்மைமிகு அரசராம் இறைவா,
  
பிற சமயத்தினரின் அவமதிப்புகளை பொருட்படுத்தாமல், உலகெங்கும் வாழும் மக் களுக்கு உம் திருமகனது உயிர்ப்பின் நற்செய்தியைக் கொண்டு சேர்க்கும் கருவிகளாக கிறிஸ்தவர்கள் அனைவரையும் உருமாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பின் உருவாம் இறைவா,
   எங்கள் நாட்டில் உருவெடுத்து வரும் மத பயங்கரவாதம், இன, மொழி தீவிரவாதம் ஆகி யவை அடியோடு மறையவும், அனைவரும் அமைதியாக வாழும் வகையில் மக்களின் இதயங்கள் உம் அன்பால் ஆட்கொள்ளப்படவும் துணைபுரிய வேண்டுமென்று  உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கத்தின் நிறைவாம் இறைவா,
   தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் வன்நெஞ்சர்கள் மனம் திரும்பவும், நீர் படைத்து வழங்கிய இயற்கையில் மனிதர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. உண்மையின் நிறைவாம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தைப் பெற்று, சொற்களாலும், செயல்களாலும் உம் புகழ்பாடும் உயிர்ப்பின் சாட்சிகளாக திகழ, உமது தூய ஆவியால் எங்களை வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, April 6, 2013

ஏப்ரல் 7, 2013

பாஸ்கா காலம் 2-ம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 5:12-16
   அந்நாள்களில் மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத் தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவ ராய் கூடி வந்தனர். மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை. ஆயினும் மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர். ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள். பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோ ரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டு வந்து வீதிகளில் வைத் தார்கள்; எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர் கள் அனைவரும் நலம் பெற்றனர்.
இரண்டாம் வாசகம்: திருவெளிப்பாடு 1:9-13,17-19
    உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தூயஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும்குரல் ஒன்று எக்காளம்போல முழங்கக் கேட்டேன். நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி, ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை என்று அக்குரல் கூறியது. என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன். அப் பொழுது ஏழு பொன் விளக்குத்தண்டுகளைக் கண்டேன். அவற்றின் நடுவே மானிடமக னைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார். நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என் மீது வைத்துச் சொன்னது: "அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு. எனவே நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழவிருப்பவற்றை யும் எழுதிவை."

நற்செய்தி வாசகம்: யோவான் 20:19-31
  அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள் மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர் களோ, அவை மன்னிக்கப்படா" என்றார். பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்ட வரைக் கண்டோம்" என்றார்கள். தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணி களால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்க ளோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமா விடம், "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார். தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார். இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார்.  வேறு பல அரும் அடையா ளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந் நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற் காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, April 4, 2013

ஏப்ரல் 7, 2013

பாஸ்கா காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
அன்புக்குரியவர்களே,
   பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருவழிபாட்டுக்கு நம் ஆண்டவர் பெயரால் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். நாம் இன்று இறை இரக்கத்தின் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இறைமகன் இயேசு இந்த நாளில்தான் திருத்தூதர்கள் வழி யாக, திருச்சபைக்கு பாவமன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை வழங்கினார். இறைவனின் இருப்பை கேள்வி கேட்கும் அளவுக்கு சந்தேகம் கொண்டிருந்தாலும், அவர் நம் மீது இரக்கம் கொண்டு அவரது உடனிருப்பை உணர்த்துகிறார் என்பதை புரிந்துகொள்ள இன் றைய நற்செய்தி அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பை காணாமலே நம்பவும், அவருக்கு சான்று பகரவும் அழைக்கப்பட்டுள்ள நாம் விசுவாசத்தில் வளர வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய முதல் வாசகம், கிறிஸ்துவின் திருத்தூதர்கள் வழியாக நிகழ்ந்த அருஞ் செயல்களைப் பற்றி எடுத்துரைக்கிறது. திருத்தூதர்கள் செய்த அற்புதங்களால் ஏராளமான ஆண்களும் பெண்களும் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு, இயேசுவின் சீடர்களானதை நாம் காண்கிறோம். திருத்தூதர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையால், பேதுருவின் நிழல் பட்டவர்கள் கூட நலமடைந்த நிகழ்வு, நாம் கடவுள் மீதும் அவரது பணியாளர்கள் மீதும் எந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க அழைக்கிறது. நாமும் ஆண்டவரில் முழு நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், மானிட மகனின் மாட்சியைப் பற்றிய யோவானின் சான்றை எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவின் ஆட்சியுரிமையில் பங்குபெறும் பொருட்டு அவரது வேதனைகளில் பங்கு பெற்றவராக யோவான் தன்னை சுட்டிக்காட்டுகிறார். நாமும் கிறிஸ்துவோடு இணைந்து வாழ அழைப்பு விடுக்கிறார். எப்பொழுதும் வாழ்பவ ரும், சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரம் கொண்டிருப்பவருமான ஆண்டவரில் நம்பிக்கை கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். என்றென்றும் வாழும் கிறிஸ்து இயேசு வுக்கு சான்று பகரும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நம்பிக்கையின் நாயகராம் இறைவா,
   உம் திருமகன் இயேசுவின் உயிர்ப்பு மறைபொருளின் மீது கட்டி எழுப்பப்பட்டுள்ள திருச் சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலை யினர் அனைவரும் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருந்து, உலகின் முன்னிலையில் உமது சாட்சிகளாக திகழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் அரசராம் இறைவா,
  
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், உலகப் போக்கில் இறுதி விலகி நிறை உண்மை யாக விளங்கும் உம்மை நாடித் தேடவும், உம் திருமகனின் உயிர்ப்பில் முழுமையான நம்பிக்கை கொண்டவர்களாக, இறையன்பிலும் பிறரன்பிலும் வளர துணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மையின் நிறைவாம் இறைவா,
  உண்மையின் ஒளியை ஏற்க மனமின்றி, இருளில் வாழும் எம் நாட்டு மக்கள் அனைவ ரும், உம் திருமகனின் உயிர்ப்பில் உள்ள உண்மையை அறிந்துணர்ந்து, அதன் வழியாக நீர் மக்களுக்கு ஏற்பாடு செய்துள்ள மீட்பை பெற்றுக்கொள்ளவும் தேவையான அகத்தூண் டுதலை அளிக்க
வேண்டுமென்று  உம்மை மன்றாடுகிறோம்.
4. புதுவாழ்வின் ஊற்றாம் இறைவா,
  இலங்கையில் வாழும் எம் தமிழ் சொந்தங்கள் அனுபவிக்கும் வேதனைகளை பரிவுடன் கண்ணோக்கி, அவர்கள் துன்பங்கள் நீங்கவும், உரிமை வாழ்வு பெறவும், உமது மீட்ப ளிக்கும் அருளைக் கண்டுணரவும் உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. நன்மைகளின் உறைவிடமாம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது அருஞ்செயல் களால் நிறைவு பெறவும், காணாமல் விசுவசித்து உமக்கு சான்று பகர்வதன் பலனாக மகிழ்ச்சி நிறைந்த விண்ணக வாழ்வைப் பெற்றுக்கொள்ளவும்
அருள்பொழிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.