Thursday, November 28, 2013

டிசம்பர் 1, 2013

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்பு டன் அழைக்கிறோம். புதிய திருவழிபாட்டு ஆண்டின் முதல் நாளாகிய இன்று, ஆண்டவ ரின் இரண்டாம் வருகையைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். நாம் வாழும் இந்த பாவச் சூழ்நிலை ஆண்டவரின் வருகைக்கான எச்சரிக்கை என்பதை இன்றைய நற் செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது. திருடனைப் போன்று, நினையாத நேரத்தில் மானிட மகனின் வருகை நிகழும் என்று இயேசு எச்சரிக்கிறார். இறைவனின் அரசுக்காக எடுத்துக் கொள்ளப்படுவோரில் ஒருவராய் இருக்குமாறு விழிப்புடன் வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய முதல் வாசகம் இறுதி நாள்களைப் பற்றி இறைவாக்கினர் எசாயா கண்ட காட்சியை எடுத்துரைக்கிறது. ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை அனைத்து மலைகளுக்கும் மேலாய் உயர்த்தப்படும், மக்கள் அனைவரும் ஆண்டவரின் கோவிலைத் தேடிச் செல்வார்கள் என்ற முன்னறிவிப்பு வழங்கப்படுகிறது. வேற்றினத்தார் தீமைகளை விட்டொழித்து ஆண்டவரின் நெறியில் நடப்பார்கள் என்ற உறுதியும் அளிக்கப்படுகிறது. நாமும் ஆண்டவர் காட்டும் வழியில் அவரது ஒளியில் நடக்க வரம் வேண்டி, இந்த வாச கத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூர் பவுல் இறுதிக்காலம் நெருங்கி வந்து விட்டது என்பதை உணர அழைப்பு விடுக்கிறார். இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்துகொள்ள அழைக்கப் படுகிறோம். இவ்வுலகின் தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் திருத்தூதர் நம்மை எச்சரிக்கிறார். இது உறக்கத்தில் இருந்து விழித்தெழும் நேரம் என்பதை உணர்ந்து வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவி மடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. விழித்திருக்க அழைப்பவரே இறைவா, 
   உமது திருமகனின் வருகைக்காக இந்த உலகை விழிப்புடன் தயார் செய்யும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் நிறைவாய் அளித் திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வல்லமை தருபவரே இறைவா,
   போர்களாலும், வன்முறைகளாலும் நிறைந்திருக்கும் இந்த உலகை உமது அரசுக்குரிய அமைதியான இடமாக மாற்றும் வரத்தை, உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருக் கும் வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒன்று சேர்ப்பவரே இறைவா,
  
எம் நாட்டு மக்களிடையே நிலவும் சிலை வழிபாடுகள் ஒழியவும், உண்மை இறைவ னாகிய உம்மில் நம்பிக்கை கொண்டு உமது கோவிலை அனைவரும் நாடி வரவும் அருள் புரிந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கம் காட்டுபவரே இறைவா,
   உமது வழியில் நடக்காத கிறிஸ்தவர்கள் அனைவரும் இருளின் செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய இயல்பை பெற்றுக்கொள்ள உதவிவேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. அனைத்துலக அரசரே இறைவா,
   இயேசுவின் வருகைக்காக உமது ஒளியில் விழிப்புடன் காத்திருப்பவர்களாய் வாழும் வரத்தை, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் வழங்கி பாதுகாத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, November 23, 2013

நவம்பர் 24, 2013

கிறிஸ்து அரசர் பெருவிழா

முதல் வாசகம்: 2 சாமுவேல் 5:1-3
   அந்நாள்களில் இஸ்ரயேலின்அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: "நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். 'நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்' என்று உமக்கே ஆண்டவர் கூறினார்." இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப் பொழிவு செய்தனர்.
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 1:12-20
   சகோதர சகோதரிகளே, தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக் களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்கு பெற உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கியுள்ளார். அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார். அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம். அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகா தவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழி யாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடு இணைந்து நிலைபெறுகின்றன. திருச்சபையாகிய உடலுக்கு தலையும் தொடக் கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புர வாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 23:35-43
   அக்காலத்தில் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்ததை மக்கள் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், "பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியா வும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக்கொள்ளட்டும்'' என்று கேலி செய்தார்கள். படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, "நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்'' என்று எள்ளி நகையாடினர். "இவன் யூதரின் அரசன்'' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது. சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியாதானே! உன் னையும் எங்களையும் காப்பாற்று'' என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத் தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!'' என்று பதி லுரைத்தான். பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்'' என்றான். அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்'' என்றார்.

Thursday, November 21, 2013

நவம்பர் 24, 2013

கிறிஸ்து அரசர் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
இறையரசுக்குரியவர்களே,
   கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரையும் அன் புடன் அழைக்கிறோம். என்றென்றும் ஆட்சி செய்பவரான நம் ஆண்டவர் இயேசுவின் அரசத் தன்மையைப் பற்றி சிந்திக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவர் இயேசு ஆட்சியுரிமையுடன் வரும்போது நம்மை நினைவில் கொள்வதற்கு தகுதி உள்ளவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இயேசு அனைத்துலகின் அரசர் என்பதை நல்ல கள்வன் அறிக்கையிடுவதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. ஒரு குற்றமும் செய்யாத இறைமகன் இயேசு, நமது மீட்புக்காக சிலுவையின் கொடிய வேதனையை ஏற்றுக்கொண்டார். இத்தகைய இரக்கமுள்ள அரசரின் மாட்சியில் பங்கேற் பதற்காக, அவரது அரசை உலகில் பரவச் செய்கிறவர்களாக வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறையரசுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம் இஸ்ரயேலின் அரசராக தாவீது திருப்பொழிவு செய்யப்பட்ட நிகழ்வை எடுத்துரைக்கிறது. இஸ்ரயேலுக்கு தலைமை தாங்கும் ஆயராக தாவீதை ஆண்டவர் நியமித்ததை நாம் காண்கிறோம். அனைத்துலக அரசரும் நம் ஆண்டவருமான இயேசு, தாவீதின் வழிமரபினராகவே இவ்வுலகில் தோன்றினார். தந்தையின் மாட்சியில் வீற்றிருக்கும் அவர் அனைத்துலகையும் எக்காலமும் ஆண்டு நடத்தி வருகிறார் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். உலகின் எல்லா நாட்டினரும் மொழியினரும் இயேசுவை அரசராக ஏற்றுக்கொள்ள உழைக்கும் வரம் கேட்டு, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறையரசுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கடவுள் நம்மை இருளின் அதிகாரத்திலிருந்து விடுவித்து தம் மகன் இயேசுவின் ஆட்சிக்கு உட்படுத்தியுள்ளார் என்பதை எடுத்துரைக்கிறார். கண்ணுக்கு புலப்படாத கடவுளின் சாயலாக விளங்கும் நம் ஆண்டவர் இயேசு வழியாய் அனைத்தும் அவருக்காகப் படைக்கப்பட்டன என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால், கடவுளோடு ஒப்பு ரவாக்கப்பட்டிருக்கும் நாம் இறையரசின் தூதுவர்களாக வாழும் வரம் கேட்டு, இந்த வாச கத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. திருச்சபையின் அரசராம் இறைவா, 
   உமது நிலையான அரசை உலகெங்கும் நிறுவும் ஆர்வத்துடன், திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், நற்செய்தி பணியாற்றிட வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அரசர்களின் அரசராம் இறைவா,
   உமது அரசின் மதிப்பீடுகளுக்கு எதிராக செயல்படும் நாடுகளின்
தலைவர்கள் அனைவ ரும் பதவி இழக்கவும், உலகெங்கும் உமது அரசு கட்டியெழுப்பப்படவும் உதவ வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மாட்சியின் மன்னராம் இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மையின் நற்செய்தியை விரும்பித் தேடவும், உம் திருமகனின் மேலான ஆட்சியை மனமுவந்து ஏற்கவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மகிழ்ச்சியின் மன்னராம் இறைவா,
  
வாழ்வின் குறிக்கோளை அறிந்துகொள்ளாமல் இவ்வுலகின் செயற்கைச் சூழலில் சிக்கி, தவறான இலக்கை நோக்கிய பாதையில் பயணம் செய்து கொண்டிருப்போர் மனந்திரும்ப உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வெற்றி வேந்தராம் இறைவா,
   மனித இயல்பில் எங்கள் துன்பங்களை ஏற்ற உம் திருமகனின் விண்ணக மாட்சியில் பங்குபெற எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, November 16, 2013

நவம்பர் 17, 2013

பொதுக்காலம் 33-ம் ஞாயிறு

முதல் வாசகம்: மலாக்கி 4:1-2
   "இதோ! சூளையைப் போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது; முற்றிலும் சுட்டெ ரித்துவிடும்'' என்கிறார் படைகளின் ஆண்டவர். "ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக் கின்ற உங்கள் மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்.''
இரண்டாம் வாசகம்: 2 தெசலோனிக்கர் 3:7-12
   சகோதர சகோதரிகளே, எங்களைப் போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரி யும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித் திரியவில்லை. எவரிட மும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமை யாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல, மாறாக, நீங்களும் எங்களைப் போல நடப்ப தற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம். `உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது' என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட் டளை கொடுத்திருந்தோம். உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிக ளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம். இத்த கையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறி வுறுத்துகிறோம்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 21:5-19
   அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களா லும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக்கொண்டிருந்தனர். இயேசு, "இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக் கப்படும்'' என்றார். அவர்கள் இயேசுவிடம், "போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக் கொண்டு வந்து, 'நானே அவர்' என்றும், 'காலம் நெருங்கி வந்துவிட்டது' என்றும் கூறுவார் கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்க ளையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத் தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது'' என்றார். மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: "நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நில நடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக் கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும். இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிட மும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன் மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோ தரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Saturday, November 9, 2013

நவம்பர் 10, 2013

பொதுக்காலம் 32-ம் ஞாயிறு

முதல் வாசகம்: 2 மக்கபேயர் 7:1-2,9-14
   அந்நாள்களில் சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப்பட்டார் கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டு சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச் சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அவர்களுள் ஒருவர் மற்ற வர்களின் சார்பில், "நீ எங்களிடமிருந்து கேட்டறிய விரும்புவது என்ன? எங்கள் மூதாதை யருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதை விட நாங்கள் இறக்கத் துணிந்திருக் கிறோம்'' என்றார். தாம் இறுதி மூச்சு விடும் வேளையில், "நீ ஒரு பேயன். நீ எங்களை இம்மை வாழ்வினின்று அகற்றிவிடுகிறாய். ஆனால் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்; ஏனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின் பொருட்டே'' என்று கூறினார். அவருக்குப் பிறகு மூன்றாமவரை அவர்கள் கொடுமைப்படுத்தினார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உடனடியாகத் தம் நாக்கையும் கைகளையும் அவர் துணிவுடன் நீட்டினார்; "நான் இவற்றை விண்ணக இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டேன்; அவருடைய சட்டங்க ளுக்காக நான் இவற்றை பொருட்படுத்துவதில்லை. அவரிடமிருந்து மீண்டும் இவற்றை பெற்றுக்கொள்வேன் என நம்புகிறேன்'' என்று பெருமிதத்தோடு கூறினார். அவர் தம் துன் பங்களை பொருட்படுத்தவில்லை. எனவே மன்னனும் அவனோடு இருந்தவர்களும் இந்த இளைஞரின் எழுச்சியைக் கண்டு வியந்தார்கள். அவரும் இறந்தபின் நான்காமவரையும் அவர்கள் அவ்வண்ணமே துன்புறுத்திக் கொடுமைப்படுத்தினார்கள். அவர் இறக்கும் தறு வாயில், "கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்ப தால், மனிதர் கையால் இறக்க விரும்புகிறேன். ஆனால் நீ வாழ்வு பெற உயிர்த்தெழ மாட் டாய்'' என்றார்.
இரண்டாம் வாசகம்: 2 தெசலோனிக்கர் 2:16-3:5
   சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக! சகோதரர் சகோதரிகளே, இறுதியாக எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள். ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே விரைந்து பர விப் புகழ் பெற்றது. அதுபோல அது எங்கும் பரவிப் புகழ் பெறவும், தீயோர், பொல்லாதவர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படவும் வேண்டுங்கள்; ஏனெனில் நம்பிக்கை எல்லா ரிடமும் இல்லை. ஆனால் ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களை உறுதிப் படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார். நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் செய்கிறீர்கள்; இனியும் செய்வீர்கள் என்னும் உறுதியான நம்பிக்கையை ஆண்ட வர் எங்களுக்குத் தருகிறார். கடவுளின் அன்பையும், கிறிஸ்துவின் மன உறுதியையும் அடைய ஆண்டவர் உங்கள் உள்ளங்களைத் தூண்டுவாராக!

நற்செய்தி வாசகம்: லூக்கா 20:27-38
   அக்காலத்தில் உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, "போத கரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந் தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப் பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?'' என்று கேட்டனர். அதற்கு இயேசு சதுசேயரிடம், "இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்துகொள்வதில்லை. இனி அவர்கள் சாக முடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப் பதால் அவர்கள் கடவுளின் மக்களே. இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்ட வரை, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கூறியிருக் கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவ ரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, November 7, 2013

நவம்பர் 10, 2013

பொதுக்காலம் 32-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் முப்பதிரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். உயிர்த்த ஆண்டவரின் சீடர்களாகிய நாம் அனைவ ரும் உயிர்த்தெழுதலின் மக்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக் கிறது. இவ்வுலக வாழ்வில் அதிக ஆர்வம் காட்டாமல், மறுவுலக வாழ்வுக்குரியவற்றில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள இயேசு நம்மை அழைக்கிறார். இறைவன் தரும் நிலை வாழ்வை நமது சந்தேகங்களாலும், பொறுப்பற்ற நடத்தையாலும் இழந்துவிடாதவாறு நாம் எச்சரிக்கப்படுகிறோம். நாம் உயிர்ப்பின் மக்களாய், வானதூதரைப் போன்று பேரின்ப வாழ்வில் பங்குபெறத் தயாராகுமாறு அழைக்கப்படுகிறோம். இயேசுவின் அழைப்புக்கு கீழ்ப்படிந்து, வாழ்வோரின் கடவுள் தரும் நிலைவாழ்வுக்கு நம்மைத் தயார் செய்ய வரம் வேண்டி இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், கடவுளின் திருச்சட்டத்துக்காக தங்கள் உயிரைக் கையளிக் கத் துணிந்த ஏழு சகோதரர்களைப் பற்றி எடுத்துரைக்கிறது. இவ்வுலக வாழ்வு முடிந்தா லும், இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசராம் கடவுள் நம்மை உயிர்த்தெழச் செய்வார் என்ற நம்பிக்கையை இந்த சகோதரர்கள் பிரதிபலிக்கிறார்கள். புதிய வாழ்வைப் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையால், கடவுளுக்காக உயிரையும் இழக் கும் துணிவு இந்த சகோதரர்களிடம் காணப்படுவதை நம்மால் உணர முடிகிறது. கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்ற நம்பிக்கைக்கு மற்ற மனிதர் முன்னிலையில் சாட்சியாக வாழ வரம் வேண்டிஇவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கடவுள் நமக்கு நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் தருமாறு வேண்டுகிறார். கடவுளின் அருளால் நாம் நல்லதையே சொல்லவும் செய்யவும் ஊக்கம் பெறுமாறு அழைப்பு விடுக்கிறார். தீயோர், பொல்லாதவர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படுமாறு நாம் ஒருவர் மற்றவருக்காக மன்றாட அழைக்கப்படுகிறோம். நம் வாழ்வின் வழியாக ஆண்டவரின் வார்த்தைக்கு புகழ் சேர்க்க வேண்டுமென்று புனித பவுல் நமக்கு கற்பிக்கிறார். கடவுளின் அன்பையும், கிறிஸ் துவின் மன உறுதியையும் அடைய வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. என்றும் வாழ்பவரே இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், நீர் அளிக்கும் உயிர்ப் பின் வாழ்வை இறைமக்கள் உரிமையாக்க உழைக்குமாறு உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
2. நிலைத்திருப்பவரே இறைவா,
  உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இவ்வுலக வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, மக்களின் நல்வாழ்வுக்குத் தேவையானவற்றை செய்ய உதவ
வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
3. உயிர் அளிப்பவரே இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும் அழிவுக்குரிய சிலை வழிபாட்டில் இருந்து விடுதலை பெற்று, உயிர்ப்பின் வாழ்வைப் பற்றி அறிந்து மனந்திரும்ப உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வு தருபவரே இறைவா,
  
இல்லாமை, இயலாமை, முதுமை, நோய் போன்றவற்றால் துன்பத்தில் தவிக்கும் மக்கள் அனைவரும், உமது அருளால் புதுவாழ்வைக் கண்டடைய உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
5. உயிர்ப்பின் ஊற்றே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் நேரிய வழியில் நடந்து, நீர் தரும் உயிர்ப்பின் வாழ்வைப் பெற்றுக்கொள்ள உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, November 2, 2013

நவம்பர் 3, 2013

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு

முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 11:22-12:2
   ஆண்டவரே, தராசில் மிக நுண்ணிய எடை வேறுபாடு காட்டும் தூசி போலவும் நிலத் தின்மீது விழும் காலைப் பனியின் ஒரு சிறு துளி போலவும் உலகம் முழுவதும் உம் கண் முன் உள்ளது. நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார் மீதும் இரங்குகின்றீர்; மனி தர்கள் தங்களுடைய பாவங்களை விட்டு மனந்திரும்பும் பொருட்டே நீர் அவற்றைப் பார்த் தும் பாராமல் இருக்கின்றீர். படைப்புகள் அனைத்தின்மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத் திருக்கவே மாட்டீர்! உமது திருவுளமின்றி எதுதான் நீடித்திருக்க முடியும்? அல்லது, உம் மால் உண்டாக்கப்படாதிருந்தால் எதுதான் காப்பாற்றப்படக்கூடும்? ஆண்டவரே, உயிர்கள் மீது அன்புகூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்; ஏனெனில் அவை யாவும் உம்முடையன. உம்முடைய அழியா ஆவி எல்லாவற்றிலும் உள்ளது. ஆகையால் தவறு செய்பவர்களைச் சிறிதுசிறிதாய்த் திருத்துகின்றீர்; அவர்கள் எவற்றால் பாவம் செய் கிறார்களோ அவற்றை நினைவுபடுத்தி அவர்களை எச்சரிக்கின்றீர்; ஆண்டவரே, அவர்கள் தீமையிலிருந்து விடுபடவும் உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே இவ்வாறு செய்கின்றீர்.
இரண்டாம் வாசகம்: 2 தெசலோனிக்கர் 1:11-2:2
   சகோதர சகோதரிகளே, நாங்கள் உங்களுக்காக என்றும் இறைவனிடம் வேண்டுகி றோம். நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் தகுதியுள்ளவராக்குவாராக! உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும், நம்பிக்கையால் தூண்டப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக! இவ்வாறு நம் கடவுளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப, உங்களால் நம் ஆண்டவரா கிய இயேசுவின் பெயருக்கும் அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக! சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப் பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது: ஆண்டவரு டைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 19:1-10
   அக்காலத்தில் இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோ ருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடி யிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந் தார். அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். இயேசு அந்த இடத்திற்கு வந்த வுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்'' என்றார். அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சி யோடு அவரை வரவேற்றார். இதைக் கண்ட யாவரும், "பாவியிடம் தங்கப் போயிருக்கி றாரே இவர்'' என்று முணுமுணுத்தனர். சக்கேயு எழுந்து நின்று, "ஆண்டவரே, என் உடை மைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்'' என்று அவரிடம் கூறினார். இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்'' என்று சொன்னார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3