Saturday, August 30, 2014

ஆகஸ்ட் 31, 2014

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எரேமியா 20:7-9
   ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன்; நீர் என்னைவிட வல்லமையுடையவர்; என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்; நான் நாள் முழுவதும் நகைப் புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். நான் பேசும்போதெல் லாம் 'வன்முறை அழிவு' என்றே கத்த வேண்டியுள்ளது; ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது. "அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்'' என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 63:1.2-3.4-5.7-8
பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
   கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. (பல்லவி)
   உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக் குகின்றேன். ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. (பல்லவி)
   என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடை யும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். (பல்லவி)
   ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. (பல்லவி)

இரண்டாம் வாசகம்: உரோமையர் 12:1-2
   சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகி றேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

வாழ்த்தொலி: எபேசியர் 1:18
   அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர் நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறு வனவாக! அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: மத்தேயு 16:21-27
   அக்காலத்தில் இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டு, "ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது'' என்றார். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவைபற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்'' என்றார். பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிட மகன் தம் தந்தையின் மாட்சி யோடு தம் வானதூதர்களுடன் வரப் போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவ ரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்'' என்றார்.

Wednesday, August 27, 2014

ஆகஸ்ட் 31, 2014

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்திரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன் போடு வரவேற்கிறோம். சிலுவையைத் தூக்கிக்கொண்டு இயேசுவைப் பின்தொடர்வதே கிறிஸ்தவ வாழ்வு என்பதை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு தம் பாடுகளையும் மரணத்தையும் முன்னறிவித்ததைக் கேட்ட பேதுரு, இறை மகன் துன்புறக்கூடாது எனத் தடுக்க நினைக்கிறார். தந்தையாம் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற வந்த இயேசுவோ, "நீ கடவுளுக்கு ஏற்றவைபற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" எனக் கடிந்து கொள்வதைக் காண்கிறோம். சிலுவை மரணத்தின் வழியாக உயிர்ப்பின் ஆண்டவரான இயேசுவைப் பின்பற்றி, துன்பங்களின் வழியே மாட்சியைப் பெற்றுக்கொள்ள வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியா ஆண்டவருக்காக தாம் அனுப வித்த வேதனைகளை எடுத்துரைக்கிறார். ஆண்டவரின் வார்த்தையை மக்களுக்கு அறி வித்ததால், பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளானதாக எரேமியா புலம்புவதைக் காண் கிறோம். ஆண்டவரின் வார்த்தை தம்மில் பற்றியெரியும் தீயைப் போன்று இருப்பதாகவும், அதனை பிறருக்கு அறிவிக்காமல் இருக்க முடியவில்லை என்றும் கூறுகிறார். துன்பங் களுக்கு நடுவிலும் ஆண்டவருக்கு உண்மையுடன் நடக்க வரம் வேண்டி, இவ்வாசகத் துக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கடவுளுக்கு உகந்த, தூய, உயி ருள்ள பலியாக நம்மைப் படைக்க வேண்டுமென அறிவுறுத்துகிறார். எத்தகைய துன்பங் கள் நேர்ந்தாலும், கடவுளுக்கு உகந்த வகையில் நமது வாழ்வை மாற்றியமைக்க நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளின் விருப்பத்தை அறிந்து, நமது சிந்தனையைப் புதுப்பிக்க பவுல் அழைப்பு விடுக்கிறார். நன்மையானதையும் கடவுளுக்கு உகந்ததையும் தேர்ந்து, நம் வாழ்வில் செயல்படுத்த வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அன்பின் அரசரே இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இயேசுவைப் பின் பற்றி உம் திருவுளத்தை செயல்படுத்துபவர்களாக வாழவும், இறைமக்களை உமக்கு உகந் தவர்களாக வழிநடத்தவும் உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதியின் அரசரே இறைவா,
   உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும், தனிநபர் சுதந்திரத்தை மதிக்கவும், மனித மாண்புக்கு எதிரான சட்டங்களை நீக்கவும், உமது திருவுளத்தின்படி மக்களை வழிநடத்த வும் 
உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மையின் அரசரே இறைவா,
   எம் நாட்டில் உமது நற்செய்தியின் பரவலுக்கு தடையாக இருக்கும் அனைவரையும் மனந்திருப்பி, இந்தியா முழுவதும் உமது உண்மையின் அரசை விரைந்து கட்டியெழுப்ப வும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆறுதலின் அரசரே இறைவா,
   உம் திருமகனின் சிலுவைப் பாடுகளில் பங்குபெறும் வகையில்
உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்கள், உமது மாட்சியால் பாதுகாப்பு பெறவும், பிறரின் மனமாற்றத்துக்கு தூண்டு தலாகத் திகழவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. மகிமையின் அரசரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது விருப்பத்துக் கேற்ப, உம் திருமகனின் சிலுவை வழியைப் பின்பற்றி விண்ணக மாட்சியைப் பெற்றுக் கொள்ள
உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, August 23, 2014

ஆகஸ்ட் 24, 2014

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 22:19-23
   உன்னை உன் பதவியிலிருந்து இறக்கி விடுவேன்; உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன். அந்நாளில் இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான். அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவு கோலை அவன் தோளின்மேல் வைப்பேன். அவன் திறப்பான்; எவனும் பூட்ட மாட்டான். அவன் பூட்டுவான்; எவனும் திறக்க மாட்டான். உறுதியான இடத்தில் அவனை முளை போல அடித்து வைப்பேன்; அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 138:1-2.2-3.6,8
பல்லவி: ஆண்டவரே, என்றும் உள்ளது உமது பேரன்பு!
   ஆண்டவரே! என் முழு மனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னி லையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். (பல்லவி)
   உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். (பல்லவி)
   ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்; ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர். ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: உரோமையர் 11:33-36
   சகோதர சகோதரிகளே, கடவுளின் அருள்செல்வம் எத்துணை மிகுதியானது! அவரு டைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! "ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?" அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

வாழ்த்தொலி: மத்தேயு 16:18
   அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லே லூயா!

நற்செய்தி வாசகம்: மத்தேயு 16:13-20
   அக்காலத்தில் இயேசு, பிலிப்புச் செசாரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, "மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர் கள், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்'' என்றார்கள். "ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார். அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண் ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனும திப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார். பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.

Wednesday, August 20, 2014

ஆகஸ்ட் 24, 2014

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தோராம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன் போடு வரவேற்கிறோம். கடவுளின் விருப்பத்தை உணர்ந்து செயல்படவும், அவர் வழங்கி யுள்ள பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவர்களாய் திகழவும் இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. "மானிட மகன் யாரென்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற இயேசுவின் கேள்விக்கு சரியாக பதிலளித்த சீமோன் பேதுரு, திருச்சபையின் பாறையாக மாறுவதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. விண்ணரசின் திறவுகோல்களை பேதுருவிடம் வழங்குவதாக ஆண்டவர் இயேசு வாக்களிக்கிறார். விண்ணுலகு மற்றும் மண்ணுலகின் மீது பேதுரு அதிகாரம் பெறுவதையும் காண்கிறோம். 'இயேசுவே வாழும் கடவுளின் மகன்' என்று அறிக்கையிட நாம் தயாராக இருக்கும்போது, ஆண்டவர் நமக்கு மேலான பொறுப்புகளைத் தருவார். நமது வாழ்க்கை கடமைகளை முழுமனதுடன் நிறை வேற்றி, ஆண்டவரின் அருளைக் கண்டுணர வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், எலியாக்கிம் என்பவருக்கு அரண்மனை மேற்பார்வை யாளர் பொறுப்பு வழங்கப்போவதாக ஆண்டவர் வாக்குறுதி அளிக்கிறார். ஆண்டவருக்கு கீழ்ப்படியாத செபுனா என்பவரின் அதிகாரத்தைப் பறித்து, எலியாக்கிமுக்கு தரப்போவதாக இறைவாக்கு உரைக்கப்படுகிறது. தாவீது குடும்பத்தாரின் திறவுகோல் அவருக்கு கொடுக் கப்படும் என்று கூறப்படுவது, பேதுருவின் அதிகாரத்துக்கு முன்னடையாளமாக இருக்கி றது. நாம் ஆண்டவருக்கு கீழ்ப்படிதல் உள்ளவர்களாய் நடக்க வரம் வேண்டி, இவ்வாச கத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கடவுளின் அருள்செல்வத்தைப் பற்றி எடுத்துரைக்கிறார். ஆண்டவரின் திட்டங்களும் தீர்ப்புகளும் மனித அறிவுக்கு அப் பாற்பட்டவை என்பதை உணர்ந்து வாழப் பணிக்கிறார். ஆண்டவரின் முன்னிலையில் நாம் மிகவும் சிறியவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள அழைக்கப்படுகிறோம். அனைத்தை யும் படைத்து பராமரிக்கும் எல்லாம் வல்ல கடவுளின் திட்டத்தை ஏற்று வாழவும், அவர் தந்துள்ள பொறுப்புகளை அர்ப்பணிப்போடு நிறைவேற்றவும் வரம் வேண்டி, இவ்வாச கத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அனைத்துலக அரசரே இறைவா,
  
திருச்சபையின் மீதும் உலகின் மீதும் நீர் வழங்கியுள்ள அதிகாரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உறுதியான மனநிலையோடு கையாள உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. அதிகாரம் வழங்குபவரே இறைவா,
   உலக நாடுகளின் ஆட்சியாளர்களும், சமூகத் தலைவர்களும் மக்களிடையே ஒற்று மையை வளர்க்கவும், பொருளாதார, அருளாதார நலன்களைக் கொணரவும் ஆர்வத்துடன் உழைக்க
உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. அருளின் அதிபதியே இறைவா,
   எம் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் உமது நற்செய்தியைப் பிறருக்கு அறிவிப்பதில் ஆர்வம் கொள்ளவும், இந்தியாவில் உமது அரசை விரைந்து கட்டியெழுப்ப வும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆறுதல் தருபவரே இறைவா,
  
உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பு பெறவும், நற்செய்தியின் பரவலை எதிர்ப்போர் அனைவரும் மனந்திரும்பி அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் கை விடவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. மாட்சியின் மன்னரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது விருப்பத்தை உணர்ந்து வாழவும், ஆண்டவர் தந்துள்ள பொறுப்புகளை முழுமனதோடு நிறைவேற்ற
வும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, August 16, 2014

ஆகஸ்ட் 17, 2014

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 56:1,6-7
    ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைப்பிடியுங் கள்; நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்புகூர் வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக் கொண்டு ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை உறுதி யாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத் தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப் பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக் கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய 'இறைமன்றாட்டின் வீடு' என அழைக்கப்படும்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 67:1-2.4.5,7
பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.
   கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனை வரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். (பல்லவி)
   வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங் களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். (பல்லவி)
   கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற் றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ் வோர் அவருக்கு அஞ்சுவராக! (பல்லவி)

இரண்டாம் வாசகம்: உரோமையர் 11:13-15,29-32
   சகோதர சகோதரிகளே, பிற இனத்தாராகிய உங்களுக்குச் சொல்கிறேன்: உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமை கொள்கிறேன். இதன் வழியாய், என் இனத்தாருள் பொறாமையைத் தூண்டிவிட்டு அவர்களுள் சிலரையேனும் மீட்க முடியும் என நம்புகிறேன். யூதர்கள் தள்ளப்பட்டபோதே உலகம் கடவுளோடு ஒப்புர வாகியது என்றால், அவர்கள் அவரால் ஏற்றுக்கொள்ளப்படும் போது எப்படி இருக்கும்! இறந்தோர் உயிர் பெற்று எழுவர் என்று சொல்லலாம் அல்லவா? ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள் கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வ தில்லை. ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக் கொண்டீர் கள். அதுபோல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்கு உரியவர்களாக இருக்கிறீர்கள்; அவர் கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக் கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது. ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.

வாழ்த்தொலி: மத்தேயு 4:23
   அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற் றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லே லூயா!

நற்செய்தி வாசகம்: மத்தேயு 15:21-28
   அக்காலத்தில் இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, "ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக் கிறாள்" எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, "நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகி றாரே, இவரை அனுப்பிவிடும்" என வேண்டினர். அவரோ மறுமொழியாக, "இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார். ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, "ஐயா, எனக்கு உதவியருளும்" என் றார். அவர் மறுமொழியாக, "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார். உடனே அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க் குட்டிகள் தின்னுமே" என்றார். இயேசு மறுமொழியாக, "அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

Wednesday, August 13, 2014

ஆகஸ்ட் 17, 2014

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இரக்கத்துக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். நம்பிக்கையின் வலிமையை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது துன்ப நேரங்களில் ஆண்டவரின் இரக்கத்தைப் பெற, நம்பிக் கையோடு அவரை தொந்தரவு செய்ய வேண்டுமென இன்றைய நற்செய்தி கற்பிக்கிறது. உதவி தேடிச் சென்ற கானானியப் பெண்ணிடம் இயேசு பாராமுகமாய் நடந்துகொள்வதை காண்கிறோம். நாமும் பல நேரங்களில் ஆண்டவரின் இரக்கத்தைப் பெறுவதற்கு தகுதி யற்றவர்களாய் இருக்கலாம். அப்போது நமது தகுதியின்மையை ஏற்றுக்கொண்டால், நாம் ஆண்டவரின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற உண்மையை உணர அழைக்கப் படுகிறோம். ஆண்டவர் முன்னிலையில் நமது தாழ்நிலையை உணர்ந்து வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இரக்கத்துக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா வழியாக பேசும் ஆண்டவர், பிற இனத்தாரும் தம்மை வழிபட வருவார்கள் என்ற வாக்குறுதியை வழங்குகிறார். ஆண்ட வருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவர் மீது அன்புகூர்வதற்கும் அவர்களை தம் திரு மலைக்கு அழைத்து வரப்போவதாக உறுதி அளிக்கிறார். ஆண்டவரின் இல்லம், இறை மன்றாட்டின் வீடு என அழைக்கப்படும் முன்னறிவிப்பும் வழங்கப்படுகிறது. பிற சமயத்தி னர் ஆண்டவரின் இல்லத்தை தேடி வருவதற்கு தூண்டுகோலாய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்தை உளமேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இரக்கத்துக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், பிற இனத்தாருக்கு நற்செய்தி பணியாற்றுவதில் பெருமை கொள்வதாக எடுத்துரைக்கிறார். கடவுள் விடுத்த அழைப்பும், கொடுத்த அருட்கொடைகளும் திரும்பப் பெறப்படுவதில்லை என்ற நம்பிக்கையை வழங் குகிறார். கடவுள் தேர்ந்தெடுத்த மக்கள் கீழ்ப்படியாதவர்களாய் மாறும்போது, அவரை நாடித் தேடும் பிற இனத்தவர் இறைவனின் இரக்கத்தைப் பெறுவார்கள் என்ற உண்மை யைச் சுட்டிக்காட்டுகிறார். ஆண்டவருக்கு உண்மையுள்ளவர்களாய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்தை உளமேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. இரக்கத்தின் உருவே இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது இரக்கத்தின் கருவிகளாக செயல்பட்டு, மக்களிடையே பிறரன்பு செயல்களைத் தூண்டி எழுப்புபவர்க ளாகத் திகழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. இரக்கத்தின் அரசரே இறைவா,
   உலகெங்கும் போர்கள் மற்றும் வன்முறைகளால் நாட்டையும் வீட்டையும் இழந்து, கைவிடப்பட்ட நிலைக்கு
தள்ளப்பட்டுள்ள மக்கள் மீது இரக்கம் காட்டி, அவர்கள் அமைதி யான வாழ்வைப் பெற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. இரக்கத்தின் ஊற்றே இறைவா,
   எம் நாட்டில் உமக்கும், உமது மக்களுக்கும் எதிராக செயல்படுகின்றவர்கள் மனந்திரும்ப வும், இயற்கைச் சீற்றங்களாலும், அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளோர் அமைதி காணவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கத்தின் நிறைவே இறைவா,
   ஈராக் உள்ளிட்ட நாடுகளில் துன்புறும் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பு பெறவும், உலகெங்கும் உமது மக்களுக்கு எதிராக நிகழும் அடக்குமுறைகளும் வன்முறைகளும் முடிவுக்கு வர வும்
உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. இரக்கம் பொழிபவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது முன்னிலை யில் தங்கள் தகுதியின்மையை உணரவும், துன்ப நேரத்தில் நம்பிக்கையோடு
உம்மை நாடி வரவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, August 9, 2014

ஆகஸ்ட் 10, 2014

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு

முதல் வாசகம்: 1 அரசர்கள் 19:9,11-13
    அந்நாள்களில் எலியா ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தபின் அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவர், "வெளியே வா; மலை மேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்ல இருக்கிறேன்" என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்கு பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல் லிய ஒலி கேட்டது. அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக் கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 85:8,9.10-11.12-13
பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பையும் மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
   ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடி யார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். (பல்லவி)
   பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றை யொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ் நோக்கும். (பல்லவி)
   நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: உரோமையர் 9:1-5
   சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவைச் சார்ந்த நான் சொல்வது உண்மை, பொய்யல்ல. தூய ஆவியால் தூண்டப்படும் என் மனச்சான்றே நான் சொல்வதற்குச் சாட்சி. உள்ளத்தில் எனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு. என் சொந்த இனத்தைச் சேர்ந்த என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன். அவர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்; அவர்க ளையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக்கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக் குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. குலமுதல்வர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்; மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். இவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள்; என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.

வாழ்த்தொலி: திருப்பாடல் 130:5
   அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: மத்தேயு 14:22-33
   அக்காலத்தில் இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவ தற்காக ஒரு மலையின் மேல் ஏறினார். பொழுது சாய்ந்த பிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க் காற்று அடித்துக் கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது. இரவின் நான்காம் காவல் வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, "ஐயோ, பேய்" என அச்சத்தினால் அலறி னர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். "துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர் கள்" என்றார். பேதுரு அவருக்கு மறுமொழியாக, "ஆண்டவரே, நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்" என்றார். அவர், "வா" என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி, இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, "நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?" என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, "உண்மையாகவே நீர் இறைமகன்" என்றனர்.

Wednesday, August 6, 2014

ஆகஸ்ட் 10, 2014

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அமைதிக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன் போடு வரவேற்கிறோம். நம்மை அலைக்கழித்து அச்சத்தில் ஆழ்த்தும் இவ்வுலகின் நெருக் கடிகளில், ஆண்டவரைப் பற்றிக்கொண்டு அமைதி காண இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவரிடம் இருந்து நாம் விலகியிருக்கும்போது, அவரை பேய் எனக் கருதி பயந்து நடுங்க வாய்ப்புள்ளது. பேதுருவைப் போன்று துணிவோடு இயேசுவை நோக்கி முன்னேறும்போது, வியத்தகு செயல்களை செய்ய ஆற்றல் பெறுவோம் என்ற நம்பிக்கை தரப்படுகிறது. நம்பிக்கை பயணத்தில் நாம் தடுமாறும் நேரத்தில் நம் ஆண்ட வரை உதவிக்கு அழைத்து, அவரது கரங்களை உறுதியாய் பற்றிக்கொள்ள வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அமைதிக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் எசாயாவுக்கு ஆண்டவர் காட்சி அளித்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. ஈசபேலின் கொலை மிரட்டலுக்கு பயந்து தப்பி ஓடிய எசாயா, ஆண்டவரின் மலையாகிய ஓரேபில் தஞ்சம் அடைகிறார். அங்கு மெல்லிய காற்றில் எசாயாவோடு பேசிய ஆண்டவர், அவரது பயத்தை நீக்கி அமைதி அளிக்கிறார். நம் நெருக் கடி வேளையில், ஆண்டவர் மேல் முழுமையா நம்பிக்கை வைத்து, அவரது உதவியால் அமைதி காண வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அமைதிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், இஸ்ரயேல் மக்கள் வழியாக ஆண்டவர் அளித்த மீட்பைப் பற்றி எடுத்துரைக்கிறார். இறைவனின் உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் ஒப்படைக்கப்பட்ட இஸ்ரயேல் மக்களிடம் இருந்தே கிறிஸ்து இயேசு தோன்றினார் என்பதை நினிவூட்டுகிறார். மக்களின் மீட்புக்காக துன்புறவும் தயாராய் இருப்பதாக கூறும் திருத்தூதர் பவுலுடன் சேர்ந்து, நற்செய்திக்கு சான்று பகரவும் உல கிற்கு அமைதியைக் கொணரவும் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அமைதியின் உருவே இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது அமைதியின் கருவிகளாக செயல்பட்டு, பல்வேறு நிலைகளில் பிரிந்து வாழும் மக்களிடையே ஒற்று மையை உருவாக்க உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. அமைதியின் அரசரே இறைவா,
  
உலக நாடுகளிடையே இடம்பெற்று வரும் கருத்து மோதல்களும், ஆயுதப் போர்களும் முடிவுக்கு வரவும், அரசுத் தலைவர்கள் அனைவரும் மக்களின் நல்வாழ்வில் ஆர்வம் காட்டவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. அமைதியின் ஊற்றே இறைவா,
   எம் நாட்டில் உமது மக்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவோரும், நற்செய்தியின் பரவலை தடுக்க நினைப்போரும், வன்முறைகளில் உள்ளம் மகிழ்வோரும் மனந்திரும்ப உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. அமைதியின் நிறைவே இறைவா,
   வறுமை, பசி, தனிமை
, நோய், முதுமை போன்ற பல்வேறு துன்பங்களால் வாடும் மக் களை இரக்கத்துடன் கண்ணோக்கி, அவர்களது வேதனை நீங்கி அமைதி காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. அமைதி அருள்பவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், நெருக்கடி நேரத்தில் உம்மை முழுமையாக பற்றிக்கொள்ளவும், உமது உதவியை சுவைத்து அமைதியுடன் வாழவும் உதவு
மாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, August 2, 2014

ஆகஸ்ட் 3, 2014

பொதுக்காலம் 18-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 55:1-3
    இறைவன் கூறுவதாவது: "தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலை களுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள். வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங் குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவன மாய்ச் செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள். எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ் வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்."
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 145:8-9.15-16.17-18
பல்லவி: ஆண்டவரே எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.
   ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத் தின்மீதும் இரக்கம் காட்டுபவர். (பல்லவி)
   எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். (பல்லவி)
   ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: உரோமையர் 8:35,37-39
   சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம். ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்போ நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பி லிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.

வாழ்த்தொலி: மத்தேயு 4:4
   அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: மத்தேயு 14:13-21
   அக்காலத்தில் இயேசு புறப்பட்டுப் படகிலேறிப் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடை யாக அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவு கொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார். மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, "இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்" என்றனர். இயேசு அவர்களிடம், "அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார். ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, "எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை" என்றார்கள். அவர், "அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்" என்றார். மக்களைப் புல் தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண் ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்; அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண் டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்க லாக உணவு உண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.