Thursday, February 26, 2015

மார்ச் 1, 2015

தவக்காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை: 
அழைக்கப்பெற்றவர்களே,
   மாட்சிமிகு கடவுளின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய திருவழிபாடு நாம் கடவுளுக்கு உரியவர்களாக உருமாற நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருச்சட்டமும் இறைவாக்குகளும் இயேசுவில் நிறைவேறின. அவருடைய இறை மாட்சியில் நாமும் பங்குபெற வேண்டுமென்றால், இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிசாய்த்து வாழ வேண்டும் என்பதை நாம் உணர்வோம். உருமாற்றம் பெற்று இயேசு வின் சாட்சிகளாய் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பெற்றவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், ஈசாக்கை பலியிடுமாறு கடவுள் ஆபிரகாமை பணித்த நிகழ்வை வாசிக்க கேட்கிறோம். வயது முதிர்ந்த காலத்தில் பெற்ற ஒரே மகனையும் கடவுளுக்காக கையளிக்கத் துணிகிறார் ஆபிரகாம். ஆண்டவர் அப்பலியைத் தடுத்து, "உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக் கொள்வர்" என்று தனது மீட்புத் திட்டத்தை அவருக்கு முன்னறிவிக்கிறார். ஆபிரகாமைப் போல கடவுளின் திட்டத்திற்கு கீழ்ப்படிந்து வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பெற்றவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுள் தம் ஒரே மகனான இயேசுவை நமக்காக கையளித்ததை திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார். கடவுளின் அரவணைப்பில் உள்ள நாம் இயேசுவின் பரிந்துரைக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து, அவருக்கு உகந்தவர்களாய் வாழும் வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மாட்சி மிகுந்தவரா இறைவா,
   உமது மீட்பின் கருவியாம் திருச்சபை, உமக்கு ஏற்ற விதத்தில் உருமாற்றம் அடைய திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோர் பொதுநிலையினருக்கு முன் மாதிரியாக வாழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மகத்துவம் மிக்கவரா இறைவா,
   உமது திருமகனின் மீட்புச் செயல் வழியாக, உலக மக்கள் அனைவரையும் உம்மோடு ஒப்புரவாக்க நீர் கொண்ட திருவுளம் நிறைவு காண உழைக்கும் ஆற்றலை கிறிஸ்தவர் களுக்கு வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மீட்பு அளிப்பவரான இறைவா,
   எம் நாட்டில் உள்ள தவறான சமய நெறிகள், வன்முறைக் கலாச்சாரங்கள், சாதிப் பிரிவினைகள், பயங்கரவாதக் குழுக்கள் அனைத்தும் மறைந்து, மக்கள் உமது மாட்சிமிகு மீட்பைக் கண்டுணர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நிறைவு தருபவரா இறைவா,
   இவ்வுலகின் வாழ்க்கைப் போராட்ங்களால் மன அமைதியின்றி தவிக்கும் மக்கள் அனைவரும் உமது வார்த்தைகளுக்கு செவிசாய்த்து, உமது மீட்பில் நிறைவு காண்பவர் களாய் வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உருமாற அழைப்பவரா இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் உமது இறை மாட்சிக்கேற்ப உருமாற்றம் பெற்று, உமக்கு என்றும் சாட்சிகளாக வாழும் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, February 21, 2015

பிப்ரவரி 22, 2015

தவக்காலம் முதல் ஞாயிறு
பொது மொழிபெயர்ப்பு விவிலியம்
முதல் வாசகம்: தொடக்கநூல் 9:8-15
   கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: "இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும் பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது." அப்பொழுது கடவுள், "எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லா வற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். எனக் கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும். மண்ணுலகின்மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது, எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்ப தற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது" என்றார்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 25:4-5.6-7.8-9
பல்லவி: ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மை யானவை.
   ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். (பல்லவி)
   ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். (பல்லவி)
   ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 பேதுரு 3:18-22
   அன்பிற்குரியவர்களே, கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார். அந்நிலையில் அவர் காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார். நோவா பேழையைச் செய்து கொண்டிருந்த நாள்களில், பொறுமையோடு காத்துக்கொண்டிருந்த கடவுளை அந்த ஆவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர், அதாவது எட்டுப் பேர் மட்டும் அந்தப் பேழை யில், தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர். அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்து வின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பு அளிக்கிறது. அவர் வான தூதர்களையும் அதிகாரங்களையும் வல்லமைகளையும் தமக்குப் பணிய வைத்து, விண் ணுலகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்.

வாழ்த்தொலிமத்தேயு 4:4
     மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 1:12-15
  அக்காலத்தில் தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பாலைநிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர். யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்'' என்று அவர் கூறினார்.

Thursday, February 19, 2015

பிப்ரவரி 22, 2015

தவக்காலம் முதல் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   உடன்படிக்கையின் கடவுளின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
மனமாற்றத்தின் காலத்திற்குள் நுழைந்திருக்கும் நாம், இன்று தவக்காலத்தின் முதல் ஞாயிறை சிறப்பிக் கின்றோம். இன்றைய திருவழிபாடு கடவுளின் மீட்பைப் பற்றி சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்றால் நாம் சோதனைகளை எதிர்கொண்டாக வேண்டும் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். நமது வாழ்க்கை சோதனைகளில் வெற்றிபெற இறைவனின் அருள் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், பேரழிவின் வெள்ளப்பெருக்கிற்கு பின்பு நோவாவுடனும் அவர் புதல்வருடனும் ஆண்டவராகிய கடவுள் செய்த உடன்படிக்கையைப் பற்றி பார்க் கிறோம். நோவாவின் வெள்ளப்பெருக்கு திருமுழுக்கு அருட்சாதனத்தின் முன்னடையாள மாக இருப்பதைக் காண்கிறோம். கடந்த காலத் துன்பங்களை மறந்து, இறைவன் தரும் புது வாழ்வை ஏற்கும் மனதுடன் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு, இயேசு கிறிஸ்துவின் இறப்பும் உயிர்ப்புமே நமது மீட்புக்கு ஒரே வழி என்பதை எடுத்துரைக்கிறார். ஆண்டவர் தரும் மீட்பை நாம் திருமுழுக்கின் வழியாக பெற்றுக்கொள்கிறோம் என்றும் சுட்டிக்காட்டுகிறார். திருமுழுக்கில் கடவுளுக்கு நாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவர்களாக வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. உடன்படிக்கையின் இறைவா,
   உமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டு, உமக்கு பிரமாணிக்கமாக வாழும் வரத்தை திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மீட்பளிக்கும் இறைவா,
   உமது திருமகன் வழியாக உலக மக்களோடு நீர் செய்துள்ள உடன்படிக்கையை புதுப்பித்து, உம்மை ஏற்காத மக்கள் எல்லோரும் உமது மீட்புத் திட்டத்தில் பங்குபெற துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அமைதியின் இறைவா,
   எம் நாட்டில் நிலவும் தீவிரவாதம், மதவாதம், சாதிப் பிரிவினைகள், வன்முறைகள் போன்றவை நீங்கி, மக்கள் அமைதியுடன் வாழும் நிலை உருவாக உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வளிக்கும் இறைவா,
   இவ்வுலக வாழ்க்கைப் போராட்டத்தில் பல்வேறு சோதனைகளால் துன்புறும் மக்கள் அனைவரும் உமது இரக்கத்தால் புதுவாழ்வைப் பெற்றுக்கொள்ள துணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மனந்திருப்பும் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் மனமாற்றத்தின் பாதையில் இறையாட்சிக்கு உரியவர்களாக வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, February 14, 2015

பிப்ரவரி 15, 2015

பொதுக்காலம் 6-ம் ஞாயிறு
பொது மொழிபெயர்ப்பு விவிலியம்
முதல் வாசகம்: லேவியர் 13:1-2,44-46
   அந்நாள்களில் ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது: "ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண் படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டுவரப்பட வேண்டும். அவர் தொழுநோயாளி. அவர் தீட்டுள்ளவர். அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார். ஏனெ னில் நோய் அவர் தலையில் உள்ளது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு, 'தீட்டு, தீட்டு' என குர லெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்."
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 32:1-2.5.11
பல்லவி:
ஆண்டவரே, நீரே எனக்குப் புகலிடம்.
   எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். (பல்லவி)
   என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; 'ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். (பல்லவி)
   நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 10:31-11:1
   சகோதர சகோதரிகளே, நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யூதருக்கோ கிரேக்க ருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள். நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன் தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன். நான் கிறிஸ் துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.

வாழ்த்தொலி: லூக்கா 7:16
     அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா! 

நற்செய்தி வாசகம்: மாற்கு 1:40-45
   ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர் மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்பு கிறேன், உமது நோய் நீங்குக!" என்றார். உடனே தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார். ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களி லிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.

Thursday, February 12, 2015

பிப்ரவரி 15, 2015

பொதுக்காலம் 6-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே,
   நம் ஆண்டவர் பெயரால்
பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய திருவழிபாடு கடவுளின் விருப்பத்திற்கு நம்மையே கையளிக்க அழைப்பு விடுக்கிறது. 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்ற தாழ்ச்சி யுள்ள வேண்டுதலை ஆண்டவர் முன் சமர்ப்பிக்க இன்று நாம் கற்றுக்கொள்வோம். அப்பொழுது இறைவன் நம்மீது கருணை கூர்ந்து, நமக்கு நிறைவான நலன்களைக் கட்டளையிடுவார். நமக்கு வருகின்ற துன்பங்கள், நோய்கள், இடையூறுகளில் கடவுளின் அருட்கரம் நம்மை வழிநடத்த வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், தொழுநோயாளர் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் வழங்குவதை நாம் காண்கி றோம். மற்றவர்களுக்கு பரவக்கூடிய ஒரு தொற்றுநோயாக தொழுநோய் இருந்ததால், தொழுநோயாளர்கள் சமூகத்தில் இருந்து விலகி இருக்குமாறு ஆண்டவர் அறிவுறுத் துகிறார். நமது தீட்டான தீய குணங்களை மற்றவர்களும் கற்றுக்கொள்ளாத வகையில், நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாய், இந்த வாசகத் திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில், நமது செயல்கள் அனைத்தும் கடவுளின் மாட்சிக் காகவே செய்யப்பட வேண்டும் என்று திருத்தூதர் பவுல் அறிவுரை வழங்குகிறார். எப்பொழுதும் நான், எனது என்றே இறைவனிடம் கேட்டு பழகிவிட்ட நாம், அவருக்காக என்ன செய்தோம் என்பதை சிந்திக்க அழைக்கப்படுகிறோம். நாம் கடவுளுக்கு விருப்ப மானவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாய், இந்த வாசகத் திற்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மன்னிப்பு அளிப்பவரே இறைவா,
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனை வரும் உமக்கு உகந்த வழியில் வாழ்ந்து, இறைமக்களை பாவம் என்ற தொற்றுநோயி லிருந்து விடுவிக்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மனமாற்றம் அளிப்பவரே இறைவா,
   உலகெங்கும் தொற்றுநோயாக பரவி இருக்கும் தீவிரவாதம், மதவாதம், வன்முறை, லஞ்சம், ஊழல், அடக்குமுறை போன்றவை, உமது அருளால் அழிந்து ஒழிய உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நலன்கள் அளிப்பவரே இறைவா,
   எங்கள் நாட்டை வழிநடத்தும் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள், அடக்குமுறை களால் ஆதிக்கம் செலுத்த விரும்பாமல், மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாய் வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நல்வாழ்வு அளிப்பவரே இறைவா,
   உடல் நோய்கள், மன வேதனைகள், கடன் தொல்லைகள், தனிமை, முதுமை போன்ற பல்வேறு துன்பங்களால் வருந்தும் எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு முழுமையாக நலம் அளித்து உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மகிழ்ச்சி அளிப்பவரே இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் உமக்குரியவர்களாக வாழவும், துன்ப வேளைகளில் உமது அரவ ணைப்பால் மகிழவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, February 7, 2015

பிப்ரவரி 8, 2015

பொதுக்காலம் 5-ம் ஞாயிறு
பொது மொழிபெயர்ப்பு விவிலியம்
முதல் வாசகம்: யோபு 7:1-4,6-7
   யோபு கூறியது: மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூர்வீர்; என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 147:1-2.3-4.5-6
பல்லவி: உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்.

   நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது. ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார். (பல்லவி)
   உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின் றார். விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். (பல்லவி)
   நம் தலைவர் மாண்பு மிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது. ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 9:16-19,22-23
   சகோதர சகோதரிகளே, நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம்கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவ னானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெற வேண்டி, நற்செய்திக்காக எல்லா வற்றையும் செய்கிறேன்.

வாழ்த்தொலி: மத்தேயு 8:17
     அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா! 

நற்செய்தி வாசகம்: மாற்கு 1:29-39
   அக்காலத்தில் இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப்பற்றி இயேசு விடம் சொன்னார்கள். இயேசு அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கி னார். காய்ச்சல் அவரைவிட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில் முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக்கொண் டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், "எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்கள். அதற்கு அவர், "நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்" என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடு முழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.

Sunday, February 1, 2015

பிப்ரவரி 1, 2015

பொதுக்காலம் 4-ம் ஞாயிறு
பொது மொழிபெயர்ப்பு விவிலியம்
முதல் வாசகம்: இணைச்சட்டம் 18:15-20
   அந்நாள்களில் மோசே மக்களிடம் கூறியது: உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப் போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, 'நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக' என்று விண்ணப்பித்தபோது, ஆண்டவர் என்னை நோக்கி, 'அவர்கள் சொன்னதெல்லாம் சரி' என்றார். உன்னைப் போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என் பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன். ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக் கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 95:1-2.6-7.8-9
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்.

   வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். (பல்லவி)
   வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! (பல்லவி)
   அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத் தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்த னர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 7:32-35
   சகோதர சகோதரிகளே, நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். மணமாகாதவர் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் மணமானவர் உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது. மணமாகாத பெண்ணும் கன்னிப் பெண்ணும் ஆண்டவருக்கு உரிய வற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோர் ஆகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழு மனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.

வாழ்த்தொலி: மாற்கு 4:16
     அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லே லூயா! 

நற்செய்தி வாசகம்: மாற்கு 1:21-28
   அக்காலத்தில், இயேசுவும் அவரது சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' என்று கத்தியது. "வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ'' என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங் கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிக ளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" என்று தங்க ளிடையே பேசிக்கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புற மெங்கும் பரவியது.