Thursday, November 23, 2017

நவம்பர் 26, 2017

கிறிஸ்து அரசர் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   கிறிஸ்து அரசர் பெருவிழா கொண்டாட்டத்துக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். ஆட்சி செய்வதற்கு தகுதியுள்ள ஒரே ஒருவரான நம் ஆண்டவர் இயேசுவின் அரசத்தன்மை குறித்து சிந்திக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. உலகின் முடிவில் நல்லோரையும் தீயோரையும் நம் ஆண்டவர் இயேசு பிரித்து தீர்ப்பு வழங்கும் வேளையில் எந்த பக்கம் நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்ய நாம் இன்று அழைக்கப்படுகிறோம். அனைத்துலகின் அரசரான நம் ஆண்டவர் இயேசுவின் இரக்கத்தைப் பயன்படுத்தி, அவரது வலப்பக்கத்தில் நிற்கத் தகுதி பெறுவதற்கு ஏற்ப வாழ வரம் கேட்டு, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களை ஓர் ஆயராக ஆட்சி செலுத்துவது குறித்த வாக்குறுதியை எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக நம் ஆண்டவர் வழங்குகிறார். இஸ்ரயேலின் ஆயராகிய கடவுள், தம் மந்தையாகிய இஸ்ரயேல் மக்களை நீதியுடன் வழிநடத்துவார் என்ற நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. ஆண்டவரின் நீதியுள்ள அரசாட்சியில் நம்பிக்கை கொண்டு, அவருக்கு உகந்த விதத்தில் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்து இயேசுவின் மேன்மை நிறைந்த அரசாட்சியைக் குறித்து எடுத்துரைக்கிறார். கிறிஸ்துவின் அரசில் சாவு முற்றிலும் இல்லாதவாறு ஒழிக்கப்படும் என்பதையும் அவர் நமக்கு நினைவூட்டுகிறார். அனைத்திலும் அனைத்துமாய் இருக்கின்ற கடவுளின் அரசில் பங்குபெறும் தகுதியுடன் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. திருச்சபையின் ஆயரே இறைவா, 
   உமது நிலையான அரசை உலகெங்கும் நிறுவும் ஆர்வத்துடன், திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், நற்செய்தி பணியாற்றிட வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அரசர்களின் அரசரே இறைவா,
   உமது அரசின் பரவலுக்கு எதிராக செயல்படும் நாடுகளின்
தலைவர்கள் அனைவரும் பதவி இழக்கவும், உலகெங்கும் உமது அரசு கட்டியெழுப்பப்படவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மாட்சியின் மன்னரே இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மையின் நற்செய்தியை விரும்பித் தேடவும், உம் திருமகனின் மேலான ஆட்சியை மனமுவந்து ஏற்கவும் துணை புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மகிழ்ச்சியின் தலைவரே இறைவா,
  
வாழ்வின் குறிக்கோளை அறியாமல் இவ்வுலகின் செயற்கைச் சூழலில் சிக்கி, தவறான இலக்கை நோக்கி பயணம் செய்து கொண்டிருப்போர் மனந்திரும்ப உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வெற்றி வேந்தரே இறைவா,
   உம் திருமகன் எங்களைத் தீர்ப்பிட வரும்போது, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், அவரது வலப்பக்கத்தில் நிற்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.