Saturday, April 26, 2014

ஏப்ரல் 27, 2014

உயிர்ப்பு காலம் 2-ம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 2:42-47
   அக்காலத்தில் திருமுழுக்குப் பெற்றவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனை வரிடமும் அச்சம் நிலவியது. திருத்தூதர் வழியாகப் பல அருஞ்செயல்களும் அடையா ளங்களும் நிகழ்ந்தன. நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாய் இருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலங்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கு ஏற்பப் பகிர்ந்த ளித்தனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந் தார்கள்; பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப் பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். அவர்கள் கடவுளைப் போற்றிவந்தார்கள்; எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்; ஆண்டவரும் தாம் மீட்டுக்கொண் டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டேயிருந்தார்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 118:118:2-4.13-15.22-24
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
   'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! (பல்லவி)
   அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. நீதிமான் களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. (பல்லவி)
   கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 பேதுரு 1:3-9
    நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப் பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம். அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப் பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமை யால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது. இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டி யிருப்பினும் அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும். நீங்கள் அவரைப் பார்த்ததில்லை; எனினும் அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை; எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்.

வாழ்த்தொலி: யோவான் 20:29
   அல்லேலூயா, அல்லேலூயா! "தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்,'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: யோவான் 20:19-31
  அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள் மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர் களோ, அவை மன்னிக்கப்படா" என்றார். பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்ட வரைக் கண்டோம்" என்றார்கள். தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணி களால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்க ளோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமா விடம், "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார். தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார். இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார்.  வேறு பல அரும் அடையா ளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந் நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற் காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, April 24, 2014

ஏப்ரல் 27, 2014

உயிர்ப்பு காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
நம்பிக்கை கொண்டோரே,
   பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருவழிபாட்டுக்கு நம் ஆண்டவர் பெயரால் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இறை இரக்கத்தின் ஞாயிறை சிறப் பிக்கும் இன்றைய நாளில், இறைமகன் இயேசு தம் திருத்தூதர்கள் வழியாக, பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை திருச்சபைக்கு வழங்கிய நிகழ்வு இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகிறது. நாம் கடவுள் மீது எந்த அளவுக்கு சந்தேகம் கொண்டிருந்தாலும், நமது ஐயங்களைப் போக்க கடவுள் இரக்கத்துடன் காத்திருக்கிறார் என்பதை உணர அழைக்கப் படுகிறோம். உயிர்த்த இயேசுவில் முழுமையான நம்பிக்கை வைக்கவும், மரணத்தை வென்ற அவருக்கு சான்று பகரவும் உறுதி ஏற்போம். திருத்தந்தையர்கள் இருபத்துமூன் றாம் யோவானும், இரண்டாம் யோவான் பவுலும் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் இந் நாளில், நாமும் புனிதத்தில் வளர வரம் வேண்டி, இந்த திருப்பலியில் விசுவாசத்துடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
நம்பிக்கை கொண்டோரே,
   இன்றைய முதல் வாசகம், தொடக்க கிறிஸ்தவர்களின் எடுத்துக்காட்டான வாழ்க்கை முறையை விவரிக்கிறது. அவர்கள் திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள் என்று வாசிக்க கேட் கிறோம். ஆண்டவரில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும், பிறரது தேவைகளை அறிந்து ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்களாய் வாழ்ந்தனர். எல்லா உடைமைகளை யும் பொதுவாய் வைத்திருந்ததுடன், கூடி செபிப்பதிலும் ஒரே மனதுடன் செயல்பட்டதைக் காண்கிறோம். நமது அன்பியம் மற்றும் பங்கு அளவில் ஒருவருக்கொருவர் உதவி வாழும் மனநிலை உருவாக வரம் வேண்டி, இந்த வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நம்பிக்கை கொண்டோரே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு, கிறிஸ்து இயேசுவின் உயிர்த் தெழுதல் வழியாக நாம் அடைந்துள்ள புதுப்பிறப்பைப் பற்றி எடுத்துரைக்கிறார். ஆண்டவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்பை பெற்றுள்ள நாம், விண்ணுலகில் அழி யாத உரிமைப்பேறு பெறுவோம் என்ற உறுதியை பேதுரு அளிக்கிறார். நாம் துன்பங்க ளால் புடமிடப்படும் வேளையில், கடவுள் மீதான நம்பிக்கையில் இருந்து தளர்ந்துவிடா மல் இருக்க நினைவூட்டுகிறார். உறுதியான நம்பிக்கையுடன் ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகரும் வரம் வேண்டி இந்த வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நம்பிக்கையின் நாயகரே இறைவா,
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவ ரும் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருந்து, உமது சாட்சிகளாக திகழ வரமருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் அரசரே இறைவா,
  
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், உம் திருமகனின் உயிர்ப்பில் முழுமையான நம்பிக்கை கொண்டு, இறையன்பிலும் பிறரன்பிலும் வளர துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மையின் நிறைவே இறைவா,
  ஆன்மீக இருளில் வாழும் எம் நாட்டு மக்கள் அனைவரும், உம் திருமகனின் உயிர்ப்பில் உள்ள உண்மையை அறியச் செய்து, அதன் வழியாக உமது மீட்பை வழங்க
வேண்டு மென்று  உம்மை மன்றாடுகிறோம்.
4. புதுவாழ்வின் ஊற்றே இறைவா,
  உலகெங்கும் உள்நாட்டில் அகதிகளாக துன்புறுவோரும், அச்சுறுத்தல்களால் இடம் பெயர்ந்தோரும் உமது உதவியால் உரிமை வாழ்வு பெற உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. நன்மைகளின் உறைவிடமே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தொடக்க கிறிஸ்தவர் களைப் போன்று ஒற்றுமையுடன் உமக்கு சான்று பகர்பவர்களாக வாழ
அருள்பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, April 19, 2014

ஏப்ரல் 20, 2014

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 10:34,37-43
   அந்நாள்களில் பேதுரு பேசத் தொடங்கி, "திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந் தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்த பின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவ ரும் அவரைக் குறித்துச் சான்று பகர்கின்றனர்'' என்றார்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 118:1-2.16-17.22-23
பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அக மகிழ்வோம். (அல்லது) அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
    ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்று வார்களாக! (பல்லவி)
  ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல் களை விரித்துரைப்பேன். (பல்லவி)
   கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! (பல்லவி)

இரண்டாம் வாசகம்: கொலோசையர் 3:1-4
   சகோதர சகோதரிகளே, நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

தொடர் பாடல்:
   பாஸ்காப் பலியின் புகழ்தனையே பாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே. மாசில் இளமறி மந் தையினை மாண்பாய் மீட்டுக் கொணர்ந்தாரே; மாசறு கிறிஸ்துவும் தந்தையுடன் மாசுறு நம்மை இணைத்தாரே.
   சாவும் உயிரும் தம்மிடையே புரிந்த வியத்தகு போரினிலே உயிரின் தலைவர் இறந்தா லும் உண்மையில் உயிரோடாளுகின்றார். வழியில் என்ன கண்டாய் நீ? மரியே, எமக்கு உரைப்பாயே.
   உயிரோடுள்ள கிறிஸ்து பிரான் கல்லறைதன்னைக் கண்டேனே; உயிர்த்து எழுந்த ஆண்டவரின் ஒப்பரும் மாட்சியும் கண்டேனே. சான்று பகர்ந்த தூதரையும் போர்த்திய பரி வட்டத்தினையும் அவர்தம் தூய துகிலினையும் நேராய்க் கண்ணால் கண்டேனே.
   கிறிஸ்து என்றன் நம்பிக்கை, கல்லறை நின்று உயிர்த்தாரே, இதோ, உமக்கு முன்னாலே செல்வர் கலிலேயாவிற்கே. மரித்தோர் நின்று உண்மையிலே கிறிஸ்து உயிர்த்தது யாமறி வோம். வெற்றிகொள் வேந்தே, எம்மீது நீரே இரக்கங் கொள்வீரே.

வாழ்த்தொலி: 1 கொரிந்தியர் 5:7-8
   அல்லேலூயா, அல்லேலூயா! நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக. அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: யோவான் 20:1-9
  வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, "ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!'' என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழைய வில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்ல றைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, April 17, 2014

ஏப்ரல் 20, 2014

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா

திருப்பலி முன்னுரை:
இறந்த இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார்!
உயிர்ப்புக்குரியவர்களே,
   நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரணத்தை வீழத்தி, வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த பெருவிழாவை நாம் இன்று கொண்டாடுகிறோம். உயிர்த்த இயேசுவுக்கு சாட்சிகளாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு வான தூதர்கள் சான்று பகர்ந்தனர். வெறுமையாக இருந்த கல்லறையும் இயேசுவின் உயிர்ப்பை பறைசாற்றியது. உயிர்த்த இயேசுவை முதலில் கண்டவர் மகதலா மரியா என்று விவி லியம் கூறுகிறது. இயேசுவின் உயிர்ப்பை முதலில் நம்பத் தயங்கிய திருத்தூதர்களும் மற்ற சீடர்களும், தங்கள் உயிரையும் கையளித்து அவரது உயிர்ப் புக்கு சான்று பகர்ந்தனர். என்றென்றும் வாழ்பவராம் இறைமகன் இயேசுவுக்கு உலக முடிவு வரை சான்று பகரும் உயிர்ப்பின் மக்களாக வாழும் வரம் வேண்டி, நாம் இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், இயேசுவின் உயிர்ப்பைப் பற்றி திருத்தூதர் பேதுரு மக்களிடம் சான்று பகர்ந்த நிகழ்வு இடம் பெறுகிறது. மக்களால் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசு, தந்தையாம் கடவுளின் வல்லமையால் மூன்றாம் நாளில் உயிர்த் தெழுந்து சீடர்களுக்கு காட்சி அளித்தார் என்பதை பேதுரு எடுத்துரைக்கிறார். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தோன்றிய உயிர்த்த இயேசுவோடு உண்டு, பரு கிய மகிழ்ச்சியுடன் பேதுரு சான்று பகர்கிறார். உயிர்த்த இயேசுவில் நம்பிக்கை கொண் டிருக்கும் நாம் அனைவரும் நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று புது வாழ்வு வாழ வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
  இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துக்குரிய வாழ்வு வாழு மாறு நாம் மேலுலகு சார்ந்தவற்றை நாட அழைப்பு விடுக்கிறார். தந்தையாம் இறை வனின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் இறைமகன் இயேசுவின் மாட்சியில் பங்குபெறு மாறு, அவரோடு நாம் சிலுவையில் இறந்துவிட்டோம் என்பதையும் அவர் நினைவூட்டு கிறார். வாழ்வு அளிப்பவராம் கிறிஸ்துவோடு இணைந்து நாம் புனிதத்தில் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.


இறைமக்கள் மன்றாட்டு:
1. உயிர் அளிப்பவரே இறைவா,
   உம் திருமகனின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு தோன்றி வளர்ந்த திருச்சபை உலக மக்கள் அனைவராலும் ஏற்கப்பட்டு, புனிதமான மக்களை உமக்காக உருவாக்க வரமருள வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

2. வெற்றி வேந்தரே இறைவா,
   திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் உம் திருமகனின் உயிர்ப்பை பறைசாற்றும் உன்னத தூதுவர்களாக செய லாற்ற உதவ வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

3. மாட்சியின் மன்னரே இறைவா,
   உடலின் உயிர்ப்பினால் மாட்சிபெற்ற உம் திருமகனைப் போன்று, உள்ளத்தின் உயிர்ப் பினால் உமது மாட்சியில் பங்குபெறும் தகுதி அடையுமாறு எம் நாட்டினர் அனைவரு டைய வாழ்வையும் புதுப்பிக்க வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கத்தின் நிறைவே இறைவா,
   பாவம், நோய், ஏழ்மை, வன்முறை, மதவெறி, தீவிரவாதம் போன்றவற்றால் வீழ்ந்து கிடக்கும் அனைவரும்,
மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த உம் திருமகனைப் போல, புது வாழ்வுக்கு உயிர்த்தெழ உதவிபுரிய வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
5. உயிர்ப்பின் நாயகரே இறைவா,
   உமது அன்பில் ஒரே குடும்பமாக ஒன்றித்து வாழும் எங்கள் பங்குத்தந்தை, அருட் சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் திருமகனது சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் மேன்மையை உணர்ந்து, கிறிஸ்துவின் உண்மையுள்ள சாட்சிகளாக வாழ வரம் தர வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, April 12, 2014

ஏப்ரல் 13, 2014

திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

திருப்பவனிக்கு முன்: மத்தேயு 21:1-11
   இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி, "நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட் டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், 'இவை ஆண்டவருக்குத் தேவை' எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பி விடுவார்" என்றார். "மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டி யாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்" என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது. சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக்கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், "தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!'' என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, "இவர் யார்?'' என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தி னர், "இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்'' என்று பதிலளித்தனர்.
முதல் வாசகம்: எசாயா 50:4-7
   நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார். நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 22:7-8.16-17.18-19.22-23
பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?
   என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலைய சைத்து, 'ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர். (பல்லவி)
   தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். (பல்லவி)
  என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடா தேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். (பல்லவி)
   உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவ ரைப் பணியுங்கள். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 2:6-11
   கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

வாழ்த்தொலி: பிலிப்பியர் 2:8-9
   கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 26:14-27:66
   பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, "இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட் டார்கள். இயேசு அவர்களிடம், "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், 'எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டா டப் போகிறேன்' எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்" என்றார். இயேசு தங்க ளுக்குப் பணித்தபடியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டு கொண்டிருந்த பொழுது அவர், "உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்த முற்றவர்களாய், "ஆண்டவரே, அது நானோ?" என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், "என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னை காட்டிக் கொடுப்பான். மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்" என்றார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் "ரபி, நானோ?" என அவரிடம் கேட்க இயேசு, "நீயே சொல்லிவிட்டாய்" என்றார்.
   அவர்கள் உணவருந்திக் கொண்டி ருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத் துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டு சீடருக்குக் கொடுத்து, "இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்" என் றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கட வுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்கு கொடுத்து, "இதில் உள்ளதை அனைவ ரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலரு டைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப் படும் இரத்தம். இனிமேல் என் தந்தை யின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இர சத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்க மாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். அவர்கள் புகழ்ப் பாடல் பாடி விட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள். அதன்பின்பு இயேசு அவர்களிடம், "இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில் 'ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்' என்று மறைநூலில் எழுதியுள்ளது. நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்" என்றார். அதற்குப் பேதுரு அவரிடம், "எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்" என்றார். இயேசு அவரிடம், "இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" என்றார். பேதுரு அவரிடம், "நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்" என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.
   பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், "நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்" என்று அவர்க ளிடம் கூறி, பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென் றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், "எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்" என்று அவர்களிடம் கூறினார். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, "என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று கூறி இறைவனிடம் வேண்டினார். அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங் கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், "ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்தி ருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண் டுங்கள்" என்றார். மீண்டும் சென்று, "என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக் கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்" என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். பிறகு சீடர்களிடம் வந்து, "இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான்" என்று கூறினார்.
   இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், "நான் ஒரு வரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள்" என்று அவர் களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் நேராக இயேசுவிடம் சென்று, "ரபி வாழ்க!" எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். இயேசு அவனிடம், "தோழா, எதற் காக வந்தாய்?" என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரை பற்றிப் பிடித்துக் கைதுசெய்தனர். உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், "உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர். நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப் பாரே. அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்?" என்றார். அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, "கள்வ னைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என் னைப் பிடிக்கவில்லையே; இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத் தும் நிகழ்கின்றன" என்றார்.அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்.
   இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார் கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள். பேதுரு தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந் திருந்தார். தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். அவர்கள், "இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டி யெழுப்ப என்னால் முடியும் என்றான்" என்று கூறினார்கள். அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், "இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட் டாயா?" என்று கேட்டார். ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவ ரிடம், "நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்" என்றார். அதற்கு இயேசு, "நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள் மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்" என் றார். உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, "இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இவன் சாக வேண்டியவன்" எனப் பதிலளித்தார்கள். பின்பு அவருடைய முகத் தில் துப்பி அவரை கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரை கன்னத்தில் அறைந்து, "இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்" என்று கேட்டனர்.
   பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, "நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே" என்றார். அவரோ, "நீர் சொல் வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை" என்று அவர்கள் அனைவர் முன்னிலையி லும் மறுதலித்தார். அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு, "இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்" என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். ஆனால் பேதுரு, "இம்மனிதனை எனக்குத் தெரியாது" என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, "உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது" என்று கூறினார்கள். அப்பொழுது அவர், "இந்த மனி தனை எனக்குத் தெரியாது" என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது, 'சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுத லிப்பாய்' என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.
   பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர். அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிட மும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து, "பழி பாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்றான். அதற்கு அவர்கள், "அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள்" என்றார்கள். அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான். தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, "இது இரத் தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல" என்று சொல்லி, கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற் றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். இதனால்தான் அந்நிலம் 'இரத்த நிலம்' என இன்றுவரை அழைக்கப்படுகிறது. 'இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவரு டைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.
   இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, "நீ யூதரின் அரசனா?" என்று கேட்டான். அதற்கு இயேசு, "அவ்வாறு நீர் சொல்கி றீர்" என்று கூறினார். மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீது குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. பின்பு பிலாத்து அவரிடம், "உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?" என்றான். அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான். மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக் காக, விழாவின் போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம். அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான். மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது பிலாத்து அவர்களிடம், "நான் யாரை விடுதலை செய்யவேண்டும் என விரும்புகிறீர்கள்? பரபா வையா? அல்லது மெசியா என்னும் இயேசுவையா?" என்று கேட்டான். ஏனெனில் அவர் கள் பொறாமையால்தான் இயேசுவைத் தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்பது அவ னுக்குத் தெரியும். பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, "அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்" என்று கூறினார். ஆனால் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள். ஆளுநன் அவர்களைப் பார்த்து, "இவ்விருவரில் யாரை விடுதலை செய்யவேண்டும்? உங்கள் விருப் பம் என்ன?" எனக் கேட்டான். அதற்கு அவர்கள் "பரபாவை" என்றார்கள். பிலாத்து அவர்க ளிடம், "அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். அனைவரும், "சிலுவையில் அறையும்" என்று பதிலளித்தனர். அதற்கு அவன், "இவன் செய்த குற்றம் என்ன?" என்று கேட்டான். அவர்களோ, "சிலுவையில் அறையும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னி லையில் தண்ணீரை எடுத்து, "இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறித் தன் கைகளைக் கழுவினான். அதற்கு மக்கள் அனைவரும், "இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட் டும்" என்று பதில் கூறினர். அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்பு வித்தான்.
   ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்கு கூட்டிச்சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவ ரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளரங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலை யின்மேல் வைத்து, அவருடைய வலக் கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, "யூத ரின் அரசரே, வாழ்க!" என்று சொல்லி ஏளனம் செய்தனர்; அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்; அவரை ஏள னம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றி விட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரை சிலுவை யில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர். அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். 'மண்டையோட்டு இடம்' என்று பொருள்படும் 'கொல் கொதா'வுக்கு வந்தார்கள்; இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவைபார்த்தபின் குடிக்க விரும்பவில்லை. அவர்கள் அவரை சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்; பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்; அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் 'இவன் யூதரின் அரசனாகிய இயேசு' என்று எழுதப்பட்டிருந்தது. அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, "கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடு வித்துக்கொள். நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா" என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். அவர்கள், "பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். கடவு ளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். 'நான் இறைமகன்' என்றானே!" என்று கூறினார்கள். அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.
   நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்று மணியளவில் இயேசு, "ஏலி, ஏலி லெமா சபக்தானி?" அதாவது, "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று உரத்த குரலில் கத்தி னார். அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, "இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்" என்றனர். உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். மற்றவர்களோ, "பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்" என்றார்கள். இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார். அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள். நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, "இவர் உண்மையா கவே இறைமகன்" என்றார்கள். கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந் தார்கள்.
   மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்து விடக் கட்டளையிட்டான். யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டு போய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார். அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர். மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். அவர்கள், "ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது 'மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன்' என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. ஆகையால் மூன்று நாள்வரை கல் லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, 'இறந்த அவர் உயிரு டன் எழுப்பப்பட்டார்' என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும்" என்றனர். அதற்குப் பிலாத்து அவர்களிடம், "உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள்" என்றார். அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

Thursday, April 10, 2014

ஏப்ரல் 13, 2014

திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

திருவழிபாட்டு முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
   நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு திருவழிபாட்டு நிகழ்வுகளுக்கு உங்களை வரவேற்கின்றோம். "தாவீதின் மகனுக்கு ஓசன்னா!" - "ஆண்ட வரே எங்களை விடுவித்தருளும்!" என்ற ஆர்ப்பரிப்போடு தொடங்கிய இயேசுவின் எருச லேம் பயணம், "பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை" என்ற ஏள னப் பேச்சோடு முடிவுக்கு வந்ததை இன்று நாம் தியானிக்க இருக்கிறோம். அமைதியின் அரசராய் கழுதை மீது பவனி வந்த இயேசு, கடவுளின் ஆட்டுக்குட்டியாய் கல்வாரியில் தம்மை பலியாக்குவதை காண்கிறோம். மரக்கிளைகளை வெட்டிப்போட்டு, தங்கள் மேலா டைகளை வழியில் விரித்து இயேசுவை வரவேற்ற அதே இஸ்ரயேல் மக்கள், அவரது ஆடைகளைக் களைந்து சிலுவை மரத்தில் தொங்கவிட்ட கொடூரக் காட்சியை நினைவுக்கு கொண்டு வருகிறோம். இறைத்தந்தையின் திட்டப்படி இறைவாக்கினர் உரைத்தது நிறை வேறுமாறு, நமது பாவங்களுக்காக இறைமகன் இயேசு மரணம் வரை கீழ்ப்படிந்தார். கடவுளின் திட்டத்தை செயல்படுத்த நம்மை முழு மனதோடு அர்ப்பணிக்கும் வரம் கேட்டு, இந்த திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா கிறிஸ்துவின் திருப்பாடுகளை முன்னறிவிப்பதை காண்கிறோம். கிறிஸ்துவின் தாழ்ச்சியும் பொறுமையும் இங்கு தெளி வாக எடுத்துரைக்கப்படுகிறது. அடிப்போருக்கு தன் முதுகையும், தாடியைப் பிடுங்குவோ ருக்கு தன் தாடையையும் அவர் ஒப்புவித்தார். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ் வோருக்கும் தன் முகத்தை மறைக்கவில்லை. தந்தையாம் இறைவனில் நம்பிக்கை கொண்டவராய் தன்னை சிலுவை மரணத்துக்கு கையளித்த இயேசுவை பின்பற்றி வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு நாம் செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
     இன்றைய இரண்டாம் வாசகமும், நம் ஆண்டவர் இயேசுவின் தாழ்ச்சியை பற்றி பேசு கிறது. கடவுள் வடிவில் விளங்கிய அவர், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார் என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகள் நம்மை சிந்திக்க தூண்டுகின்றன. சிலுவை மரணம் வரை இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றத் துணிந்த இயேசுவைப் பின்பற்ற நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் சிலுவை வழியை தொடர்ந்து சென்று, அவரது மாட்சியில் பங்குபெற வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மாட்சி அளிப்பவரே இறைவா,
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும்
உமது திருவு ளத்தை கீழ்ப்படிதலுடன் நிறைவேற்றி சான்றுபகரும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நிறைவு தருபவரே இறைவா,
   சிலுவையில் தம்மையே பலியாக்கிய கிறிஸ்து இயேசுவில் உமது திட்டத்தின் நிறை வினைக் கண்டுணர, உலக மக்கள் அனைவருக்கும் ஞானமருள
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மீட்பு வழங்குபவரே இறைவா,
   கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் வழியாக மனித குலத்துக்கு நீர் அளித்த மீட்பை சுவைத்து மகிழும் வரத்தை எம் நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கம் காட்டுபவரே இறைவா,
   எம்மை குணப்படுத்துவதற்காக காயப்பட்ட இயேசுவின் பாடுகள் வழியாக, எங்கள் உடல், உள்ள, ஆன்ம நோய்களை குணப்படுத்தி புது வாழ்வருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. அருள் பொழிபவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர் வதித்து, கிறிஸ்துவின் சிலுவை வழியைப் பின்பற்றி வாழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, April 5, 2014

ஏப்ரல் 6, 2014

தவக்காலம் 5-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசேக்கியேல் 37:12-14
   தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்ல றைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக் களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக் கொணர் கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடி யமர்த்துவேன். 'ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்' என அப் போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 130:1-2.3-4.5-6.7-8
பல்லவி: ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது.
   ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; ஆண் டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். (பல்லவி)
   ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். (பல்லவி)
  ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. (பல் லவி)
   பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லா தீவினை களினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! (பல்லவி)

இரண்டாம் வாசகம்: உரோமையர் 8:8-11
   சகோதர சகோதரிகளே, ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடைய வர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந் தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவி யினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.

வாழ்த்தொலி: யோவான் 11:25,26
   "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்,'' என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்: யோவான் 11:1-45
   அக்காலத்தில் பெத்தானியாவில் வாழ்ந்துவந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந் தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்து வந்த னர். இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத் தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர். இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆள் அனுப்பி, "ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்'' என்று தெரிவித்தார்கள். அவர் இதைக் கேட்டு, "இந்நோய் சாவில் போய் முடியாது. கடவு ளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்'' என்றார். மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார். இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். பின்னர் தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்'' என்று கூறினார். அவருடைய சீடர்கள் அவரிடம், "ரபி, இப்போதுதானே யூதர்கள் உம் மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, "பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது. ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப் போது ஒளி இல்லை'' என்றார். இவ்வாறு கூறியபின், "நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்'' என்றார். அவருடைய சீடர் அவரிடம், "ஆண் டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்'' என்றனர். இயேசு அவருடைய சாவைக் குறிப் பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம், "இலாசர் இறந்துவிட்டான்'' என்று வெளிப் படையாகச் சொல்லிவிட்டு, "நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்'' என்றார். திதிம் என்னும் தோமா தம் உடன்சீடரிடம், "நாமும் செல் வோம், அவரோடு இறப்போம்'' என்றார். இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறை யில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது. பெத்தானியா எருசலேமுக்கு அரு கில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது. சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென் றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். மார்த்தா இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கட வுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்'' என் றார். இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்'' என்றார். மார்த்தா அவரிடம், "இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்'' என்றார். இயேசு அவரிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம் பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?'' என்று கேட்டார். மார்த்தா அவரிடம், "ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்'' என்றார். இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், "போதகர் வந்துவிட்டார்; உன்னை அழைக்கிறார்'' என்று காதோடு காதாய்ச் சொன்னார். இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார். இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வர வில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார். வீட்டில் மரியா வுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல் வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள். இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்'' என்றார். மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, "அவனை எங்கே வைத்தீர்கள்?'' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "ஆண்டவரே, வந்து பாரும்'' என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். அதைக் கண்ட யூதர்கள், "பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!'' என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் அவர்களுள் சிலர், "பார்வையற்ற வருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?'' என்று கேட்டனர். இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென் றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. "கல்லை அகற்றிவிடுங்கள்'' என்றார் இயேசு. இறந்துபோனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், "ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!'' என்றார். இயேசு அவரிடம், "நீ நம்பினால் கடவுளின் மாட் சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?'' என்று கேட்டார். அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, "தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும்பொருட்டே இப்படிச் சொன்னேன்'' என்று கூறினார். இவ்வாறு சொன்னபின் இயேசு உரத்த குரலில், "இலாசரே, வெளியே வா'' என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்'' என்று இயேசு அவர்களிடம் கூறினார். மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.

Thursday, April 3, 2014

ஏப்ரல் 6, 2014

தவக்காலம் 5-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
   உயிரும் உயிர்ப்புமான ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன் புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறை சிறப்பிக்கிறோம்.
நம் ஆண்டவர் உயிர்த்தெழுதலும் வாழ்வுமாய் இருக்கிறார் என்ற உண்மையை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நண்பரின் இறப்புக்காக, ஆண்டவர் இயேசு கண்ணீர் விட்டு அழுததை இன்றைய நற்செய்தி சுட்டிக் காட்டுகிறது. பாவத்தினால் நாம் கடவுளின் அருள் உயிரை இழக்கும் போதெல்லாம் ஆண்டவர் நமக்காக கண்ணீர் வடிக்கிறார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இறந்த லாசரை, இயேசு மீண்டும் உயிர்த் தெழச் செய்ததையும் நாம் காண்கிறோம். நாம் பாவத்தினால் அருள் வாழ்வில் இறந்தா லும், நம்மை உயிர்ப்பிக்க ஆண்டவர் தயாராக இருக்கிறார் என்பதை உணர அழைக்கப்படு கிறோம். கிறிஸ்து இயேசுவின் வல்லமையால் பாவத்தில் இருந்து உயிர்த்தெழுந்து புது வாழ்வு வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக பேசும் ஆண்ட வர், உயிர்ப்பை பற்றிய நம்பிக்கையை கொடுக்கிறார். இஸ்ரயேலரின் கல்லறைகள் திறக் கப்பட்டு, அவர்கள் மேலே கொண்டுவரப்படுவார்கள் என்ற வாக்குறுதி வழங்கப்படுகிறது. தமது ஆவியைப் பொழிந்து உயிர் அளிப்பதாகவும், அவர்களது சொந்த நாட்டில் குடியமர்த் துவதாகவும் ஆண்டவர் உரைக்கிறார். ஆண்டவரின் உயிரளிக்கும் வல்லமையை உணர்ந் தவர்களாய், பாவத்தில் இருந்து மனமாற்றம் பெற வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவி கொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், இவ்வுலகு சார்ந்த ஊனியல்பின் இச்சைகளில் இருந்து விடுபட அழைப்பு விடுக்கிறார். கடவுளின் ஆவியைக் கொண்டிருக் கும் நாம், ஊனியல்புக்கு எதிரான தூய வாழ்வு வாழ அறிவுறுத்துகிறார். தூய ஆவியின் வல்லமையினால் நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவின் உயிரைப் பெற்றுள்ள நாமும் உயிர்ப்பின் சாட்சிகளாக வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. உயிரளித்து காப்பவரே இறைவா,
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் விசுவாச வாழ்வில் புத்துயிர் பெற்று, உலக மக்கள் முன்னிலையில் உமது சாட்சிகளாகத் திகழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வளித்து வழிநடத்துபவரே இறைவா,
   உம் மீது நம்பிக்கை இல்லாமலும், உம்மைப் பற்றிய தவறான எண்ணங்களாலும், ஆன் மீக வாழ்வில் இறந்தவர்களாய் வாழும் மக்களிடையே விசுவாசத்தின் ஒளியை ஏற்ற உத வுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. கல்லறையைத் திறப்பவரே இறைவா,
   உண்மை கடவுளாகிய உம்மைப் புறக்கணித்து நடைபிணங்களாய் வாழும் எம் நாட்டு மக்கள் அனைவரும், தங்கள் மீது கட்டி எழுப்பியுள்ள கல்லறைகளில் இருந்து வெளியேறி உமது மாட்சியைக் காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆவியைப் பொழிபவரே இறைவா,
   சிந்தனை, சொல், செயல் அனைத்தாலும் பாவங்கள் செய்து, உமது அருளுயிரை இழந்து தவிக்கும் மக்கள் அனைவருக்கும் உமது தூய ஆவியால் புத்துயிர் அளித்து உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. புதுவாழ்வு தருபவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், பாவத்தின் கல்லறை யில் இருந்து வெளியேறவும், நீர் வழங்கும் புத்துயிரைப் பெற்று உயிர்ப்பின் சாட்சிகளாக வாழவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.