Wednesday, June 6, 2012

ஜூன் 10, 2012

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
  கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் உள்ளன்புடன் வரவேற்கிறோம். கோதுமை அப்பத்திலும், திராட்சைப்பழ இரசத்திலும் இருக்கின்ற மறைவான பிரசன்னத்தை திருச்சபை இன்று கொண்டாடி மகிழ்கிறது. நம் ஆண்டவரின் திருஉடலையும் திருஇரத்தத்தையும் உணவாகவும் பானமாகவும் பெறப் பேறுபெற்றவர்கள் நாம். இறுதி இரவுணவு வேளையில் கிறிஸ்து ஏற்படுத்திய இந்த நற்கருணைப் பலியே, நம் கத்தோலிக்க வழிபாட்டின் மையமாக விளங்குகிறது. நற்க ருணை நாதருக்கு உண்மையுள்ள சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் ஆர்வத்துடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே, 
     இன்றைய முதல் வாசகம், மோசே வழியாக கடவுள் ஏற்படுத்திக்கொண்ட பழைய உடன்படிக்கையைப் பற்றி எடுத்துரைக்கிறது. மோசே இஸ்ரயேல் மக்கள் சார்பாக ஆண்டவருக்கு நல்லுறவுப் பலி செலுத்துவதையும், அவர்கள்மீது உடன்படிக்கையின் இரத்தத்தைத் தெளித்ததையும் இதில் காண்கிறோம். கடவுள் நம்மோடு செய்துள்ள உடன்படிக்கைக்கு உண்மை உள்ளவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு கவனமாக செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், தலைமை குருவான கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையைப் பற்றி பேசுகிறது. இயேசு கிறிஸ்து தம்மையே மாசற்ற பலியாக ஒப்புக்கொடுத்து, நமக்கு மீட்பு கிடைக்கச் செய்தார் என்பதை எடுத்துரைக்கிறது. கிறிஸ்து வுக்கு உகந்த புதிய உடன்படிக்கையின் மக்களாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத் துக்கு கவனமாக செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எங்கும் இருப்பவராம் இறைவா,
   உலகெங்கும் நற்கருணைப் பலியை நிறைவேற்றும்
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக் கள் அனைவரும், கிறிஸ்துவின் மறைபொருளான பிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் வாழவும், இறைமக்களை விசுவாச வாழ்வில் வளரச்செய்யவும் அருள்புரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. ஒற்றுமையை அருள்பவராம் இறைவா,
   உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், நற்கருணைப் பலியின் மேன்மை யையும் உண்மைத்தன்மையையும் உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபையில் ஒன்றிணை யும் மனம் தர வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
3. தியாகத்தின் உருவாம் இறைவா,
   எம் நாட்டு மக்களுக்கு வழிகாட்டும் தலைவர்கள் தியாக உணர்வோடு செயல்பட்டு, உண்மை மற்றும் நீதியின் பாதையில் மக்களை வழிநடத்தவும், சமூகத்தில் அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும்
துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. பகிந்துவாழ அழைப்பவராம் இறைவா,
   உலகில் பல்வேறு தேவைகளாலும், துன்பங்களாலும் நொந்து வருந்தும் மனிதர் களோடு, உமது அன்பையும் இரக்கத்தையும் உதவியையும் பகிரும் கருவிகளாக வாழ, கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் துணைபுரிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. அன்பின் பிறப்பிடமாம் இறைவா,
   எங்கள் பங்கு சமூகத்தில் வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், நற்கருணை விசுவாசத்திலும், அன்பு வாழ்விலும், தியாக உணர்விலும் வளரத்
தேவையான வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, June 1, 2012

ஜூன் 3, 2012

மூவொரு இறைவன் பெருவிழா

முதல் வாசகம்: இணைச்சட்டம் 4:32-34,39-40
   மோசே மக்களை நோக்கிக் கூறியது: "உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல், வானத்தின் ஒரு முனைமுதல் மறு முனைவரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்ததுண்டோ? அல்லது இதுபோல் கேள்விப்பட்டது உண்டா? நெருப் பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர் வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல, சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக் கென உரிமையாக்கிக் கொள்ள முன்வரும் கடவுள் உண்டா? 'மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்' என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்."
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8:14-17
   சகோதர சகோதரிகளே, கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ள வில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண் டீர்கள். அதனால் நாம், "அப்பா, தந்தையே" என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக் கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப்பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப்பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்குபெற வேண்டும்; அப்போதுதான் அவ ரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 28:16-20
  அக்காலத்தில் பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவி லுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திரு முழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி