Friday, October 19, 2012

அக்டோபர் 21, 2012

பொதுக்காலம் 29-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 53:10-11 
   அந்நாள்களில் ஆண்டவரின் துன்புறும் ஊழியரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளர் ஆக்குவார்; அவர்களின் தீச்செயல் களைத் தாமே சுமந்து கொள்வார்.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 4:14-16
   சகோதர சகோதரிகளே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கை இடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின் மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம் மைப் போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத் தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

நற்செய்தி வாசகம்: மாற்கு 10:35-45
   அக்காலத்தில் செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று அவரிடம், "போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்'' என்றார்கள். அவர் அவர்களிடம், "நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, "நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புற மும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்'' என்று வேண்டினர். இயேசுவோ அவர்களி டம், "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்க ளால் பெற இயலுமா?'' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "இயலும்'' என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, "நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத் திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்'' என்று கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், "பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களி டையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்ப தற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்'' என்று கூறினார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, October 17, 2012

அக்டோபர் 21, 2012

பொதுக்காலம் 29-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசுவின் துன்பக் கிண்ணத்தில் பங்குபெறுவதன் அவசியத்தை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனிதராய் பிறந்த அனைவரும் துன்பத்தை ஏற்பதன் வழியாக, இன்பத்தின் மேன்மையை உணர அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்து தனது சிலுவை மரணத்தின் வழியாக உயிர்ப்பின் மாட்சியை அடைந்தார். இறைத்தந்தையின் இரக்கத் தைப் பெற்று கிறிஸ்துவின் வலப்பக்கத்தில் அமருமாறு, தூய வாழ்வு வாழவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்த இறைமகன் இயேசுவைப் பின்பற்றி வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
     இன்றைய முதல் வாசகம் ஆண்டவரின் துன்புறும் ஊழியரைப் பற்றிய அறிவிப்பைத் தருகிறது. துன்புறும் ஊழியராம் இயேசு, மக்களின் பாவங்களைப் போக்குமாறு தன் உயி ரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார் என்ற உண்மை தெளிவுபடுத்தப்படுகிறது. இயேசுவின் துன்பம் பலருக்கும் மீட்பை அளிக்கும் என்பது முன்னறிவிக்கப்படுகிறது. இயேசுவைப் பின்பற்றி நேர்மையாளர்கள் ஆகும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம் இறைமகன் இயேசுவும் நமது துன்பங்களில் பங்கேற்றார் என்ற உண்மையை எடுத்துரைக்கிறது. நமது துன்ப வேளையில் நாம் அவரது உதவியைத் துணிவுடன் நாடுமாறு திருமுக ஆசிரியர் அழைப்பு விடுக்கிறார். எல்லா வகையிலும் சோதிக்கப்பட்டாலும், பாவம் செய்யாமல் வாழ்ந்த இயேசுவைப் பின்பற்றி வாழ நாம் அழைக்கப்படுகிறோம். நம் தலைமைக் குருவாம் இயேசுவின் உதவியைத் துணிவுடன் நாடும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. பணியாற்ற அழைப்பவராம் இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், அதிகாரம் செலுத்து பவர்களாய் இல்லாமல், மக்களுக்கு தொண்டு செய்பவர்களாய் வாழும் தூய உள்ளத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அதிகாரத்தை வழங்குபவராம் இறைவா,
  உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் அதிகாரத்தின் பொறுப்பை உணர்ந்தவர்களாய், மக்களுக்காக அமைதியான உலகத்தை உருவாக்க உழைப்பவர்களாய்
வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அருள்மழை பொழிபவராம் இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும் கிறிஸ்துவின் மேன்மையை  உணர்ந்து கொள்ளவும், தனது சிலுவை மரணத்தின் வழியாக அவர் பெற்றுத் தந்த மீட்பின் பலன்களை உரிமை யாக்கி கொள்ளவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆறுதல் தருபவராம் இறைவா,
   உலகில் வறுமை, நோய், தனிமை, முதுமை, இல்லாமை, இயலாமை போன்ற பல துன்பங்களால் வேதனையுறும் மக்கள் அனைவரும், உமது ஆறுதலைப் பெற்று மகிழச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மீட்பு அளிப்பவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமது திருமகனைப் பின்பற்றி, துன்பங்களின் நடுவிலும் தூய வாழ்வு வாழத் தேவையான அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.