Saturday, February 8, 2014

பிப்ரவரி 9, 2014

பொதுக்காலம் 5-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 58:7-10
   ஆண்டவர் கூறுவது: பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் `இதோ! நான்' என மறுமொழி தருவார். உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக் காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித் திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயா னால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 112:4-5.6-7.8,9
பல்லவி:
ஆண்டவருக்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மிளிர்வர்.
   இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். (பல்லவி)
   எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வ தால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். (பல்லவி)
   அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 2:1-5
   சகோதர சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்க ளிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்க வில்லை. நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோ டும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமை யவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந் தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே.

வாழ்த்தொலி: யோவான் 8:12
     அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இரு ளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா! 

நற்செய்தி வாசகம்: மத்தேயு 5:13-16
   அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உத வாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவா யிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, February 6, 2014

பிப்ரவரி 9, 2014

பொதுக்காலம் 5-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அன்பர்களே,
   பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கிறிஸ்து இயேசுவின் சீடர்களான நாம் ஒவ்வொருவரும் உல கிற்கு உப்பாகவும் ஒளியாகவும் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக் கிறது. உப்பைப் போன்று நாமும் மற்றவர்களின் வாழ்வில் சுவையூட்டுபவர்களாக திகழ இயேசு நம்மை அழைக்கிறார். இருளின் பிடியில் சிக்கித் தவிப்போருக்கு ஒளியாக சுடர நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். பிறரது வாழ்வில் சுவை தரும் உப்பாகவும், சுடர் விடும் ஒளியாகவும் வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே,
     இன்றைய முதல் வாசகம் நமது ஒளியை மற்றவர்கள் முன் ஒளிரச் செய்வது எப்படி என்பதைக் கற்றுத் தருகிறது. பசித்தோருக்கு உணவளிக்கவும், வறியோருக்கு உதவி செய்யவும் இறைவாக்கினர் எசாயா வழியாக ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். பிறரை சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்த நாம் அழைக்கப்படுகிறோம். இவ்வாறு தீமைகளுக்கு பதிலாக நன்மைகளைச் செய்து, இருளின் நடுவே ஒளி வீசுபவர்களாக திகழ இறைவனின் உதவி வேண்டி, இவ்வாசகத்தை உள மேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம் திருத்தூதர் பவுல், இயேசுவின் நற்செய்திக்கு சான்று பகர்ந்தது குறித்து எடுத்துரைக்கிறது. கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்கும் அளவுக்கு தன்னிடம் சொல்வன்மையோ ஞானமோ இருந்ததில்லை என்று பவுல் கூறு கிறார். இருந்தாலும் அங்கு தூய ஆவியின் வல்லமை செயல்பட்டதை நினைவுறுத்து கிறார். நமது நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே என்பதை உணர்ந்து செயலாற்ற இறைவனின் அருள் வேண்டி, இவ்வாசகத்தை உளமேற் போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஞானத்தின் ஊற்றே இறைவா, 
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவ ரும், மனித ஞானத்தின் மீது ஆர்வம் காட்டாமல் உமது தூய ஆவியின் வல்லமையில் நம்பிக்கை வைத்து நற்செய்தி பணியாற்றத் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. வழிகாட்டும் ஒளியே இறைவா, 
   உலகெங்கும் வாழும் பிற சமய மக்களிடம் உமது நற்செய்தியின் ஒளியை எடுத்துச் செல்லும் தூதுவர்களாக செயல்படும் ஆவலை கிறிஸ்தவர்கள்  அனைவரது உள்ளத்தி லும் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. சுவையூட்டும் உப்பே இறைவா,
   எம் நாட்டில் உம்மைப் புறக்கணித்து சுவையற்ற வாழ்வு வாழும் மக்களிடையே
உமது நற்செய்தியை சுவையைப் பரப்பும் உப்பாக செயல்படும் ஆர்வத்தை கிறிஸ்தவர்களிடம் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வளிக்கும் சுடரே இறைவா,
   தீமைகளின் பிடியிலும், பாவ இருளிலும், துன்ப நோயிலும் சிக்கி, ஆறுதல் இழந்து தவிக் கும் மக்கள் அனைவருக்கும் ஒளியாக இருந்து வழிகாட்டி, உப்பாக இருந்து சுவையூட்டு மாறு 
உம்மை மன்றாடுகிறோம்.
5. மகிழ்வின் நிறைவே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது வல்லமையில் முழுமையான நம்பிக்கை வைத்து, தங்கள் சுற்றத்தாருக்கும் நண்பர்களுக்கும் உப்பாகவும் ஒளியாகவும் திகழச் செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.