Saturday, February 15, 2014

பிப்ரவரி 16, 2014

பொதுக்காலம் 6-ம் ஞாயிறு

முதல் வாசகம்: சீராக்கின் ஞானம் 15:15-20
   நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப் பத்தைப் பொறுத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக் கப்படும். ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல்மிக்கவர்; அனைத்தையும் அவர் காண்கிறார். ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்; மனிதரின் செயல்கள் அனைத்தையும் அவர் அறிவார். இறைப் பற்றின்றி இருக்க யாருக்கும் ஆண் டவர் கட்டளையிட்டதில்லை; பாவம் செய்ய எவருக்கும் அவர் அனுமதி கொடுத்தது மில்லை.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 119:1-2.4-5.17-18.33-34
பல்லவி:
ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
   மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறு பெற்றோர். அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்; முழு மனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். (பல்லவி)
   ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர். உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்! (பல்லவி)
   உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன். உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண் களைத் திறந்தருளும். (பல்லவி)
   ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன். உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய் யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 2:6-10
   சகோதர சகோதரிகளே, முதிர்ச்சி பெற்றவர்களோடு நாங்கள் ஞானத்தைப் பற்றிப் பேசு கிறோம். ஆனால் இது உலக ஞானம் அல்ல; உலகத் தலைவர்களின் ஞானமும் அல்ல. அவர்கள் அழிவுக்குரியவர்கள். வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப் பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெறவேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது. இவ்வுலகத் தலைவர்கள் எவரும் அதை அறிந்துகொள்ளவில்லை. அறிந்திருந்தால், அவர்கள் மாட்சிக் குரிய ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள். ஆனால் மறைநூலில் எழுதியுள்ளவாறு, "தம்மிடம் அன்புகொள்ளுகிறவர்களுக்கு என்று கடவுள் ஏற்பாடு செய் தவை கண்ணுக்குப் புலப்படவில்லை; செவிக்கு எட்டவில்லை; மனித உள்ளமும் அதை அறியவில்லை.'' இதைக் கடவுள் தூய ஆவியாரின் வழியாக நமக்கு வெளிப்படுத்தினார். தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார்.

வாழ்த்தொலி: மத்தேயு 11:25
     அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா! 

நற்செய்தி வாசகம்: மத்தேயு 5:17-37
   அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "திருச்சட்டத்தையோ இறைவாக்கு களையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற் கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச் சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணர சில் பெரியவர் எனக் கருதப்படுவார். மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியை விட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன். 'கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: 'தம் சகோதரர் சகோ தரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ 'முட்டாளே' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; 'அறிவி லியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.' ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற் படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்கு கூட்டிச் செல்லும்போது வழியிலேயே அவருடன் விரை வாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 'விபசாரம் செய்யாதே' எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்பு களில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. 'தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்' எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: 'எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய் கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.' மேலும், 'பொய் யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்துகொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்க ளுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம். உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது. ஆகவே நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத் திலிருந்து வருகிறது.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, February 13, 2014

பிப்ரவரி 16, 2014

பொதுக்காலம் 6-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கொலை, விபசாரம், பொய்யாணை போன்ற திருச்சட்டத்துக்கு எதிரான தீமைகளில் இருந்து விலகி வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக் கிறது. தம் சகோதரரையோ சகோதரியையோ 'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளா வார் என்று இயேசு எச்சரிக்கை விடுக்கிறார். உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதை விட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது என கடுமையான அறி வுரையை அவர் நமக்கு வழங்குகிறார். எதன் மீதும் ஆணையிட வேண்டாம் என்றும் நாம் அறிவுறுத்தப்படுகிறோம். 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும், 'இல்லை' என்றால் 'இல்லை' என வும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடன் வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலி யில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து தூய வாழ்வு வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுள் நம்முன் வைத்துள்ளவற்றில் இருந்து நமக்கு விருப் பமானதை தேர்வுசெய்ய அவர் நம்மை அனுமதிக்கிறார் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். வாழ்வையா, அழிவையா எதை தேர்வு செய்கிறோம் என்பதில் விழிப்போடு இருக்குமாறு நாம் எச்சரிக்கப்படுகிறோம். மனிதரின் செயல்கள் அனைத்தையும் ஆய்ந்தறியும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்போராய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், இறை ஞானத்தை பெற்றுக்கொள் வதில் ஆர்வம் காட்டுமாறு அழைப்பு விடுக்கிறார். உலக ஞானம் அழிவுக்குரியது என்பதை உணர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். தம்மிடம் அன்பு கொள்கிறவர்களுக்காக கடவுள் ஏற்பாடு செய்துள்ள மீட்புத் திட்டத்தில் முழு மனதோடு பங்கேற்க பவுல் நம்மை அழைக்கிறார். கடவுளின் திருவுளத்தை அறிந்து வாழ தூய ஆவியின் உதவி வேண்டி, இவ் வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஞானத்தின் நிறைவே இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இறை ஞானத்துடன், உமது மீட்புத் திட்டத்தை உலக மக்களிடையே கொண்டு சேர்க்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நன்மையின் ஊற்றே இறைவா, 
   உலகில் வாழும் மக்கள் அனைவரும் நல்லவற்றை விரும்பித் தேடவும், தீயவற்றை துணிவோடு எதிர்த்துப் போராடவும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மையின் உறைவிடமே இறைவா,
   உலக ஞானத்தின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு
அழிவுக்குரிய நெறிகளைப் பின்பற்றி வாழும் எம் நாட்டவர் அனைவரும், உம்மிடம் மனந்திரும்பி வர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வின் வழியே இறைவா,
   கொலை, விபசாரம் போன்ற தீமைகளின் பிடியில் சிக்கி உமது திட்டத்துக்கு எதிராக செயல்படுவோர் அனைவருக்கும், தூய வாழ்வுக்கான வழியைக் காட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மகிமையின் அரசரே இறைவா,
   உமது கட்டளைகளுக்கு எதிரான தீமைகளில் இருந்து விலகி புனித வாழ்வு வாழும் வரத்தை, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.