Wednesday, December 24, 2014

டிசம்பர் 25, 2014

கிறிஸ்து பிறப்பு பெருவிழா
பொது மொழிபெயர்ப்பு விவிலியம்
முதல் வாசகம்: எசாயா 9:2-4,6-7
   காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொரு ளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளை புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர். ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ 'வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்' என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலை நாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 96:1-2.2-3.11-12.13
பல்லவி: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.
   ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவ ரைப் போற்றிப் பாடுங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங் கள். (பல்லவி)
   அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். (பல்லவி)
   விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ள னவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொ ழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். (பல்லவி)
   ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: தீத்து 2:11-14
   மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப் பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்து, கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப் பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறு கிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப் போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வ முள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

வாழ்த்தொலி: லூக்கா 2:10-11
   அல்லேலூயா, அல்லேலூயா! பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறி விக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் நமக்காகப் பிறந்திருக்கிறார். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: லூக்கா 2:1-14
   அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடு மாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப் பும் தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென் றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. மரியா தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இர வெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்ட வருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், "அஞ்சா தீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தி யிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்'' என்றார். உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!'' என்று கடவுளைப் புகழ்ந்தது.

Saturday, December 20, 2014

டிசம்பர் 21, 2014

திருவருகைக்காலம் 4-ம் ஞாயிறு
பொது மொழிபெயர்ப்பு விவிலியம்
முதல் வாசகம்: 2 சாமுவேல் 7:1-5,8-12,14-16
   தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, "பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது'' என்று கூறினார். அதற்கு நாத்தான், "நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்று அரசரிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: "நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப் போகிறாயா? என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள் களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!''
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 89:1-2.3-4.26,28
பல்லவி:
ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்.
   ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். உமது பேரன்பு என்றென்றும் நிலைத் துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. (பல்லவி)
   நீர் உரைத்தது: 'நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: உன் வழிமரபை என்றென்றும் நிலைக் கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.' (பல்லவி)
  
'நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான். அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: உரோமையர் 16:25-27
   சகோதர சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவைப்பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இறைவாக்கினர் வாயி லாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

வாழ்த்தொலி: லூக்கா 1:38
    அல்லேலூயா, அல்லேலூயா! நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: லூக்கா 1:26-38
   ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத் தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்ட வர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு மரியா கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப் பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரிய ணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார். வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறை மகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார். பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். அப்பொழுது வான தூதர் அவரை விட்டு அகன்றார்.