Saturday, March 30, 2013

மார்ச் 31, 2013

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 10:34,37-43
   அந்நாள்களில் பேதுரு பேசத் தொடங்கி, "திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந் தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்த பின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவ ரும் அவரைக் குறித்துச் சான்று பகர்கின்றனர்'' என்றார்.
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 3:1-4
   சகோதர சகோதரிகளே, நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

நற்செய்தி வாசகம்: யோவான் 20:1-9
  வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, "ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!'' என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழைய வில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்ல றைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, March 28, 2013

மார்ச் 31, 2013

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா

திருப்பலி முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
   நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரணத்தை வீழத்தி, வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த பெருவிழாவை நாம் இன்று கொண்டாடுகிறோம். உயிர்த்த இயேசுவுக்கு சாட்சிகளாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு வானதூதர்கள் சான்று பகர்ந்தனர். வெறுமையாக இருந்த கல்லறையும் இயேசுவின் உயிர்ப்பை பறைசாற்றியது. உயிர்த்த இயேசுவை முதலில் கண்டவர் மகதலா மரியா என்று விவிலியம் கூறுகிறது. இயேசுவின் உயிர்ப்பை முதலில் நம்பத் தயங்கிய திருத் தூதர்களும் மற்ற சீடர்களும், தங்கள் உயிரையும் கையளித்து அவரது உயிர்ப் புக்கு சான்று பகர்ந்தனர். என்றென்றும் வாழ்பவராம் இறைமகன் இயேசுவுக்கு உலக முடிவு வரை சான்று பகரும் உயிர்ப்பின் மக்களாக வாழும் வரம் வேண்டி, நாம் இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், இயேசுவின் உயிர்ப்பைப் பற்றி திருத்தூதர் பேதுரு மக்களிடம் சான்று பகர்ந்த நிகழ்வு இடம் பெறுகிறது. மக்களால் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசு, தந்தையாம் கடவுளின் வல்லமையால் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து சீடர்களுக்கு காட்சி அளித்தார் என்பதை பேதுரு எடுத்துரைக்கிறார். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தோன்றிய உயிர்த்த இயேசுவோடு உண்டு, குடித்த மகிழ்ச்சியுடன் பேதுரு சான்று பகர்கிறார். உயிர்த்த இயேசுவில் நம் பிக்கை கொண்டிருக்கும் நாம் அனைவரும் நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று புது வாழ்வு வாழ வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
உயிர்ப்புக்குரியவர்களே,
  இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துக்குரிய வாழ்வு வாழு மாறு நாம் மேலுலகு சார்ந்தவற்றை நாட அழைப்பு விடுக்கிறார். தந்தையாம் இறை வனின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் இறைமகன் இயேசுவின் மாட்சியில் பங்குபெறு மாறு, அவரோடு நாம் சிலுவையில் இறந்துவிட்டோம் என்பதையும் அவர் நினைவூட்டு கிறார். வாழ்வு அளிப்பவராம் கிறிஸ்துவோடு இணைந்து நாம் புனிதத்தில் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.


இறைமக்கள் மன்றாட்டு:
1. உயிர் அளிப்பவராம் இறைவா,
   உம் திருமகனின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு தோன்றி வளர்ந்த திருச்சபை உலக மக்கள் அனைவராலும் ஏற்கப்பட்டு, புனிதமான மக்களை உமக்காக உருவாக்க வரமருள வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

2. வெற்றி வேந்தராம் இறைவா,
   திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் உம் திருமகனின் உயிர்ப்பை பறைசாற்றும் உன்னத தூதுவர்களாக செய லாற்ற உதவ வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

3. மாட்சியின் மன்னராம் இறைவா,
   உடலின் உயிர்ப்பினால் மாட்சிபெற்ற உம் திருமகனைப் போன்று, உள்ளத்தின் உயிர்ப் பினால் உமது மாட்சியில் பங்குபெறும் தகுதி அடையுமாறு எம் நாட்டினர் அனைவ ருடைய வாழ்வையும் புதுப்பிக்க வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கத்தின் நிறைவாம் இறைவா,
   பாவம், நோய், ஏழ்மை, வன்முறை, மதவெறி, தீவிரவாதம் போன்றவற்றால் வீழ்ந்து கிடக்கும் அனைவரும்,
மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த உம் திருமகனைப் போல, புது வாழ்வுக்கு உயிர்த்தெழ உதவிபுரிய வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
5. உயிர்ப்பின் நாயகராம் இறைவா,
   உமது அன்பில் ஒரே குடும்பமாக ஒன்றித்து வாழும் எங்கள் பங்குத்தந்தை, அருட் சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் திருமகனது சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் மேன்மையை உணர்ந்து, கிறிஸ்துவின் உண்மையுள்ள சாட்சிகளாக வாழ வரம் தர வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.