Saturday, July 27, 2013

ஜூலை 28, 2013

பொதுக்காலம் 17-ம் ஞாயிறு

முதல் வாசகம்: தொடக்க நூல் 18:20-32
   அந்நாள்களில் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, "சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெரும் கண்டனக் குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. என்னை வந்தடைந்த கண்டனக் குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்துகொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்'' என்றார். அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திரு முன் நின்று கொண்டிருந்தார். ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: "தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்க ளாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டா வது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ? தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்த தன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?'' என்றார். அதற்கு ஆண்டவர், "நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்'' என்றார். அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, "தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்து விட்டேன்; ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக் கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?'' என்றார். அதற்கு அவர், "நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்'' என்றார். மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, "ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?'' என்று கேட்க, ஆண்டவர், "நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்'' என்றார். அப்பொழுது ஆபிரகாம்: "என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்?'' என, அவரும் "முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்'' என்று பதிலளித்தார். அவர், "என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத் துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?'' என, அதற்கு அவர், "இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்'' என்றார். அதற்கு அவர், "என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேச விடும். ஒருவேளை அங்கு பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?'' என, அவர், "அந்த பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்'' என்றார்.
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 2:12-14
   சகோதர சகோதரிகளே, நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப் பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர் பெற்று எழுந்துள்ளீர்கள். உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர் பெறச் செய்தார். நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். நமக்கு எதிரான ஒப் பந்த விதிகள் பல கொண்ட கடன் பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவை யில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்துவிட்டார்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 11:1-13
   அக்காலத்தில் இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, "ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக் கொடும்'' என்றார். அவர் அவர்களிடம், "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ் வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதி ராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களை யும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங் களை விடுவித்தருளும்'' என்று கற்பித்தார். மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வரு மாறு கூறினார்: "உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, 'நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், 'எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத் திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது' என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக் குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங் கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல் லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக் கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர் களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப் பது எத்துணை உறுதி!''

Friday, July 26, 2013

ஜூலை 28, 2013

பொதுக்காலம் 17-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இறைவேண்டலின் வல்லமையை உணர்ந்து வாழ இன்றைய திருவழி பாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் இயேசு, தந்தையாம் இறைவனிடம் தனி மையாக வேண்டிக் கொண்டிருந்த பல நிகழ்வுகள் நற்செய்திகளில் சொல்லப்பட்டிருக்கின் றன. இன்று தங்களுக்கும் இறைவேண்டல் செய்யக் கற்றுத்தருமாறு, சீடர்கள் இயேசுவி டம் கோரிக்கை வைக்கின்றனர். அவர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுக் கும் இயேசு, அதன் பயனையும் சுட்டிக்காட்டுகிறார். தொடர்ந்து இறைவேண்டல் செய் வோரின் உள்ளுணர்வுகளை ஆண்டவர் புறக்கணிக்க மாட்டார் என்ற பாடத்தை மனதில் இருத்த நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசுவைப் போன்று இறைவனின் திரு வுளம் நம்மில் நிறைவேற வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், சோதோம் கொமோரா நகரங்களை அழிவில் இருந்து காப் பாற்ற ஆபிரகாம் இறைவேண்டல் செய்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. கொடிய பாவங்க ளுக்காக அழிக்கப்பட இருந்த அந்த நகரங்களை, நீதிமான்களை முன்னிறுத்தி அவர் காப் பாற்ற முயல்வதைக் காண்கிறோம். ஐம்பது, நாற்பது, முப்பது என நீதிமான்களின் எண் ணிக்கையை குறைத்து ஆபிரகாம் பேரம் பேசுவதைக் காண்கிறோம். பத்து பேர் இருந்தால் கூட அந்நகரங்களை அழிக்க மாட்டேன் கடவுள் வாக்களிக்கிறார். நமது வேண்டலுக்கு கனிவோடு பதிலளிக்கும் ஆண்டவருக்கு உண்மை உள்ளவர்களாய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்து வழியாக நமக்கு வழங் கப்பட்ட பாவ மன்னிப்பைப் பற்றி எடுத்துரைக்கிறார். திருமுழுக்கின் வழியாக நாம் கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப்பட்டு, அவர் மீதான நம்பிக்கையால் பாவத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளதை பவுல் நினைவூட்டுகிறார். நமது பாவங்களின் கடன் பத்திரம் ஆண்டவர் இயேசுவின் சிலுவை மரணத்தால் அழிக்கப்பட்டுவிட்டதை உணர அழைக்கப் படுகிறோம். நம் பாவங்களை மன்னித்த கிறிஸ்துவின் அருளில் வளர வரம் வேண்டி, இவ் வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வேண்டலை கேட்பவராம் இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமக்கு உகந்தவர்க ளாக வாழவும், உமது திருச்சபையின் புதுவாழ்வுக்காக உழைக்கவும் வரமருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மாற்றங்களை தருபவராம் இறைவா,
   உலக நாடுகளில் நிலவும் வன்முறைகளும், கலவரங்களும், உள்நாட்டுப் போர்களும், ஒழுக்கக் கேடுகளும் மறைந்து, உமக்கு உகந்த வாழ்க்கை முறைகள் செழித்தோங்க வர மருள
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அருள்மழை பொழிபவராம் இறைவா,
   எமது நாட்டில் பெருகி வரும் பிரிவினை எண்ணங்களும், வன்முறை கலாச்சாரங்களும், முறைதவறிய ஆசைகளும் அழிந்து, அமைதியை விரும்பும் புதிய சமூகம் உருவாக வர மருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. கருணை காட்டுபவராம் இறைவா,
   உலகின் பல்வேறு சூழ்நிலைகளால் அமைதி இழந்து தவிக்கும் உள்ளங்கள் உமது உதவியைப் பெற்று, இறை இரக்கத்தின் அமைதியை சுவைக்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. நன்மை அளிப்பவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும்
உம் திருவுளம் எம் மில் நிறைவேற அனுமதிக்கவும், அதன் மூலம் பாவத்தின் கட்டுகளில் இருந்து விடுதலை பெற்று புதுவாழ்வு வாழவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.