Saturday, January 24, 2015

ஜனவரி 25, 2015

பொதுக்காலம் 3-ம் ஞாயிறு
பொது மொழிபெயர்ப்பு விவிலியம்
முதல் வாசகம்: யோனா 3:1-5,10
   அந்நாள்களில், இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப் பட்டது. அவர், நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவ ரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்றுநாள் ஆகும். யோனா நகருக்குள் சென்ற, ஒரு நாள் முழுதும் நடந்தபின், உரத்த குரலில், இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும் என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர்.  கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லி யிருந்த தண்டனையை அனுப்பவில்லை.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 25:4-5.6-7.8-9
பல்லவி: ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்.

   ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். (பல்லவி)
   ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில் ஆண்டவரே நீரே நல்லவர். (பல்லவி)
   ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 7:29-31
   அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.

வாழ்த்தொலி: மாற்கு 1:15
     அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற் செய்தியை நம்புங்கள். அல்லேலூயா! 

நற்செய்தி வாசகம்: மாற்கு 1:14-20
   யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார். அவர் கலிலேயக் கடலோரமாய் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயா வையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Saturday, January 17, 2015

ஜனவரி 18, 2015

பொதுக்காலம் 2-ம் ஞாயிறு
பொது மொழிபெயர்ப்பு விவிலியம்
முதல் வாசகம்: 1 சாமுவேல் 3:3-10,19
   அந்நாள்களில் கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தான். அப்போது ஆண்டவர், "சாமுவேல்" என்று அழைத்தார். அதற்கு அவன், "இதோ! அடியேன்" என்று சொல்லி, ஏலியிடம் ஓடி, "இதோ! அடியேன் என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான். அதற்கு அவர், நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள் என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான். ஆண்டவர் மீண்டும் "சாமுவேல்" என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, "இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான். அவரோ, "நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள்" என்றார். சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறிய வில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. மூன் றாம் முறையாக ஆண்டவர் "சாமுவேல்" என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று, "இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டார். பின்பு ஏலி சாமுவேலை நோக்கி, "சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ ஆண்டவரே பேசும் உம் அடியேன் கேட்கிறேன் என்று பதில் சொல்" என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான். அப்போது ஆண்டவர் வந்து நின்று, "சாமுவேல் சாமுவேல்" என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல், "பேசும், உம் அடியேன் கேட்கிறேன்" என்று மறுமொழி கூறினான். சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 40:2,3.6-7.7-8.9
பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.

   அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக் கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத் தினின்று தூக்கி எடுத்தார்; கற்பாறையின் மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். (பல்லவி)
   பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். எனவே, இதோ வருகின்றேன். (பல்லவி)
   என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; என் கடவுளே! உமது திரு வுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள் ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். (பல்லவி)
   என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 6:13-15,17-20
   சகோதர சகோதரிகளே, உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர். ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார். உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார். எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர். உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.

வாழ்த்தொலி: யோவான் 1:41,17
     அல்லேலூயா, அல்லேலூயா! மெசியாவை, அதாவது அருள்பொழிவு பெற்றவரைக் கண்டோம். அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. அல்லே லூயா! 

நற்செய்தி வாசகம்: யோவான் 1:35-42
   அக்காலத்தில் யோவான் தம் சீடர் இருவருடன் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, "இதோ! கடவுளின் செம்மறி" என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, "என்ன தேடுகிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், "வந்து பாருங்கள்" என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, "மெசியாவைக் கண்டோம்" என்றார். 'மெசியா' என்றால் அருள் பொழிவு பெற்றவர் என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, "நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா' எனப்படுவாய்'' என்றார். 'கேபா' என்றால் 'பாறை' என்பது பொருள்.