Thursday, February 26, 2015

மார்ச் 1, 2015

தவக்காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை: 
அழைக்கப்பெற்றவர்களே,
   மாட்சிமிகு கடவுளின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய திருவழிபாடு நாம் கடவுளுக்கு உரியவர்களாக உருமாற நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருச்சட்டமும் இறைவாக்குகளும் இயேசுவில் நிறைவேறின. அவருடைய இறை மாட்சியில் நாமும் பங்குபெற வேண்டுமென்றால், இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிசாய்த்து வாழ வேண்டும் என்பதை நாம் உணர்வோம். உருமாற்றம் பெற்று இயேசு வின் சாட்சிகளாய் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பெற்றவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், ஈசாக்கை பலியிடுமாறு கடவுள் ஆபிரகாமை பணித்த நிகழ்வை வாசிக்க கேட்கிறோம். வயது முதிர்ந்த காலத்தில் பெற்ற ஒரே மகனையும் கடவுளுக்காக கையளிக்கத் துணிகிறார் ஆபிரகாம். ஆண்டவர் அப்பலியைத் தடுத்து, "உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக் கொள்வர்" என்று தனது மீட்புத் திட்டத்தை அவருக்கு முன்னறிவிக்கிறார். ஆபிரகாமைப் போல கடவுளின் திட்டத்திற்கு கீழ்ப்படிந்து வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பெற்றவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுள் தம் ஒரே மகனான இயேசுவை நமக்காக கையளித்ததை திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார். கடவுளின் அரவணைப்பில் உள்ள நாம் இயேசுவின் பரிந்துரைக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து, அவருக்கு உகந்தவர்களாய் வாழும் வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மாட்சி மிகுந்தவரா இறைவா,
   உமது மீட்பின் கருவியாம் திருச்சபை, உமக்கு ஏற்ற விதத்தில் உருமாற்றம் அடைய திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோர் பொதுநிலையினருக்கு முன் மாதிரியாக வாழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மகத்துவம் மிக்கவரா இறைவா,
   உமது திருமகனின் மீட்புச் செயல் வழியாக, உலக மக்கள் அனைவரையும் உம்மோடு ஒப்புரவாக்க நீர் கொண்ட திருவுளம் நிறைவு காண உழைக்கும் ஆற்றலை கிறிஸ்தவர் களுக்கு வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மீட்பு அளிப்பவரான இறைவா,
   எம் நாட்டில் உள்ள தவறான சமய நெறிகள், வன்முறைக் கலாச்சாரங்கள், சாதிப் பிரிவினைகள், பயங்கரவாதக் குழுக்கள் அனைத்தும் மறைந்து, மக்கள் உமது மாட்சிமிகு மீட்பைக் கண்டுணர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நிறைவு தருபவரா இறைவா,
   இவ்வுலகின் வாழ்க்கைப் போராட்ங்களால் மன அமைதியின்றி தவிக்கும் மக்கள் அனைவரும் உமது வார்த்தைகளுக்கு செவிசாய்த்து, உமது மீட்பில் நிறைவு காண்பவர் களாய் வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உருமாற அழைப்பவரா இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் உமது இறை மாட்சிக்கேற்ப உருமாற்றம் பெற்று, உமக்கு என்றும் சாட்சிகளாக வாழும் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, February 21, 2015

பிப்ரவரி 22, 2015

தவக்காலம் முதல் ஞாயிறு
பொது மொழிபெயர்ப்பு விவிலியம்
முதல் வாசகம்: தொடக்கநூல் 9:8-15
   கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: "இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும் பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது." அப்பொழுது கடவுள், "எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லா வற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். எனக் கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும். மண்ணுலகின்மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது, எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்ப தற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது" என்றார்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 25:4-5.6-7.8-9
பல்லவி: ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மை யானவை.
   ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். (பல்லவி)
   ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். (பல்லவி)
   ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 பேதுரு 3:18-22
   அன்பிற்குரியவர்களே, கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார். அந்நிலையில் அவர் காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார். நோவா பேழையைச் செய்து கொண்டிருந்த நாள்களில், பொறுமையோடு காத்துக்கொண்டிருந்த கடவுளை அந்த ஆவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர், அதாவது எட்டுப் பேர் மட்டும் அந்தப் பேழை யில், தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர். அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்து வின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பு அளிக்கிறது. அவர் வான தூதர்களையும் அதிகாரங்களையும் வல்லமைகளையும் தமக்குப் பணிய வைத்து, விண் ணுலகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்.

வாழ்த்தொலிமத்தேயு 4:4
     மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 1:12-15
  அக்காலத்தில் தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பாலைநிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர். யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்'' என்று அவர் கூறினார்.