Friday, December 15, 2017

டிசம்பர் 17, 2017

திருவருகை காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
மகிழ்ச்சிக்குரியவர்களே,
   திருவருகை காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய நாளை நம் தாய் திருச்சபை மகிழ்ச்சி ஞாயிறாக சிறப்பிக்கிறது. ஒளியாம் இறைவனின் வருகைக்காக இஸ்ரயேல் மக்களைத் தயார் செய்த திருமுழுக்கு யோவானின் குரலுக்கு செவிகொடுக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் முன்னோடியாக வந்த யோவானின் தாழ்ச்சி நிறைந்த மனநிலையுடன் வாழ பழகிக் கொள்வோம். ஆண்டவரின் வருகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொணர, இந்த திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
மகிழ்ச்சிக்குரியவர்களே,
   இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் எசாயா வழங்கிய மகிழ்ச்சியின் செய்தியை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. உள்ளத்திற்கு மகிழ்ச்சி, விடுதலை வாழ்வு, அருள்தரும் ஆண்டு என்ற நற்செய்தியை எசாயா அறிவிக்கிறார். ஆண்டவரின் நற்செய்தி, நமக்கு உண்மையான பூரிப்பை வழங்குகிறது என்பதை அவர் நினைவூட்டுகிறார். ஆண்டவரில் எப்பொழுதும் புதுவாழ்வு வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
மகிழ்ச்சிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூர் பவுல், எல்லா சூழ்நிலையிலும் நாம் மகிழ்ந்திருக்க வேண்டுமென்று அறிவுறுத்துகிறார். தூய ஆவியாரின் செயல்பாட்டை நம்மில் அனுமதித்து, நல்லதை பற்றிக்கொள்ள அவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். நம் உடலையும் உள்ளத்தையும் ஆன்மாவையும் தூயதாக பாதுகாத்து, ஆண்டவரில் மகிழ்ந்திருக்க வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மகிழ்ச்சியின் மன்னரே இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு பணி செய்வதில் மகிழ்ந்திருக்கவும், உமது நற்செய்தியின் மகிழ்ச்சியை உலகோருக்கு பகிரவும் வரம் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. அக்களிப்பு தருபவரே இறைவா,
   பகை, வன்முறை,
தீவிரவாதம், போர் போன்றவற்றால் அமைதியின்றி தவிக்கும் இவ்வுலக மக்களை, உமது அன்பால் ஒன்றிணைத்து, அக்களிப்பின் தைலத்தால் திருநிலைப்படுத்துமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. மகிமையின் வேந்தரே இறைவா,
  
எம் நாட்டு மக்களிடையே பிரிவுகளையும் பிணக்குகளையும் தூண்டி, அமைதியை சீர்குலைப்போரை மனந்திருப்பி, உமது மேன்மையை இந்தியர்கள் அனைவரும் உணரச் செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. மனமாற்றம் அளிப்பவரே இறைவா,
   தீமைக்குரிய இருளின் பாதையில் நடக்கும் அனைவரும், ஒளியாகிய உம்மை கண்டுகொள்ளவும், அதன் வழியாக உடல், உள்ள, ஆன்ம நலன்களை பெற்று மகிழவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. அகமகிழ்வின் ஊற்றே இறைவா,
   உம் திருமகனின் வருகைக்காக காத்திருக்கும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவர் மீதும் உமது அருளை பொழிந்து, மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Thursday, November 30, 2017

டிசம்பர் 3, 2017

திருவருகை காலம் முதல் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
பேறுபெற்றவர்களே,
   திருவழிபாட்டு நாள்காட்டியின் புத்தாண்டு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம். திருவருகை காலத்தின் முதல் ஞாயிறாகிய இன்று, ஆண்டவரின் இரண்டாம் வருகையைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். வெளியூர் பயணம் சென்றிருக்கும் வீட்டுத் தலைவரின் வருகைக்காக காத்திருக்கும் பணியாளரைப் போன்று, நம் ஆண்டவர் இயேசுவை எதிர்கொள்ள விழிப்புடன் இருக்குமாறு இன்றையத் திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. ஆண்டவரின் வருகையின்போது பாராட்டு பெறும் வகையில் விழிப்புடன் வாழ வரம் கேட்டு, இந்த திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
பேறுபெற்றவர்களே,
   இன்றைய முதல் வாசகம், ஆண்டவரின் வருகையை எதிர்நோக்கும் இஸ்ரயேல் மக்களின் ஏக்கத்தை எடுத்துரைக்கிறது. பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு எருசலேமுக்கு வந்த இஸ்ரயேல் மக்கள், புதுவாழ்வு தரும் ஆண்டவரின் வருகைக்காக கூக்குரலிடுவதைக் காண்கிறோம். மலைகளையும் உருகச் செய்கின்ற மாட்சிமிகு ஆண்டவரின் வருகைக்காக நம்மைத் தயார் செய்ய வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
பேறுபெற்றவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூர் பவுல், ஆண்டவரின் நட்புறவில் பங்குபெற நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். கிறிஸ்து இயேசுவின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிற ஒவ்வொருவரும், இறையருளில் நிலைத்திருக்க வேண்டுமென்று அவர் அறிவுறுத்துகிறார். ஆண்டவர் தோன்றும் நாளில், குறைச் சொல்லுக்கு ஆளாகாதவர்களாய் அவர் முன் நிற்க வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவி மடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. விழித்திருக்க அழைப்பவரே இறைவா, 
   உமது திருமகனின் வருகைக்காக உலக மக்களைத் தயார் செய்யும் ஆர்வத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் நிறைவாய் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வல்லமை தருபவரே இறைவா,
   போர்களாலும், வன்முறைகளாலும் நிறைந்திருக்கும் இந்த உலகை, உமது வருகைக்கு ஏற்ற இடமாக மாற்றுகின்ற வரத்தை, உலக நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒன்று சேர்ப்பவரே இறைவா,
  
எம் நாட்டு மக்கள் தவறான சமய நம்பிக்கைகளில் இருந்து விலகவும், உண்மை இறைவனாகிய உம்மை அறிந்து உம்மைத் தேடி வரவும் அருள் புரிந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கம் காட்டுபவரே இறைவா,
   தீயோனின் வழியில் பயணிக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் இருளின் செயல்களைக் களைந்துவிட்டு, உமது அருளின் ஆட்சிக்குரிய இயல்பை பெற்றுக்கொள்ள உதவிவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. அனைத்துலக அரசரே இறைவா,
   இயேசுவின் வருகைக்காக விழிப்புடன் காத்திருப்பவர்களாய் வாழும் வரத்தை, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் வழங்கி பாதுகாத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.