Wednesday, September 12, 2012

செப்டம்பர் 16, 2012

பொதுக்காலம் 24-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
மீட்புக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்துநான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு நமது சிலுவையை சுமந்து கொண்டு ஆண்டவரைப் பின்பற்ற நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்தவ வாழ்வென் பது ஒரு சீடருக்குரிய வாழ்வு. அற்புதங்களையும், அதிசயங்களையும் எதிர்பார்க்காமல், இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பயணத்தைப் பின்தொடர நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அரச அதிகாரத்தோடு கூடிய மெசியாவை அல்ல, சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவை நாம் பின்பற்ற வேண்டும் என்பதே கடவுளின் திருவுளம் என்பதை நினை வில் கொண்டு வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இறையாட்சியின் இலட்சியங்களுக்காக நம்மை முழுவதும் இழந்து கடவுளின் அரசை இவ்வுலகில் நிலைநாட்டும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
மீட்புக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, ஆண்டவருக்காக துன்புறு வதைப் பற்றி எடுத்துரைக்கிறார். நாம் குற்றமற்றவர்கள் என்று கடவுள் தீர்ப்பு வழங்கும் வகையில் வாழ்ந்தால், இவ்வுலகின் துன்புறுத்தல்களுக்கு பயப்படத் தேவையில்லை என்ற செய்தியை அவர் வழங்குகிறார். அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங் குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ் வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை என்ற வார்த்தைகள் இயேசுவின் திருப்பாடு களை நமக்கு நினைவூட்டுகின்றன. கடவுளின் துணையை முழுமையாக நம்பி வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
மீட்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, கிறிஸ்தவ நம்பிக்கையை செயலில் காட்டுமாறு அழைப்பு விடுக்கிறார். தேவையில் இருப்பவருக்கு தேவையான வற்றைக் கொடுக்காமல், "நலமே சென்று வாருங்கள், குளிர் காய்ந்து கொள்ளுங்கள், பசியாற்றிக் கொள்ளுங்கள்" என்று கூறுவதால் எந்த பயனும் விளையப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் அனைவரும், நமது நம்பிக்கையை செயலில் வெளிப்படுத்தி மீட்படையும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மீட்பு அளிப்பவராம் இறைவா, 
   உம் திருமகனின் சிலுவைப்பாதையைப் பின்பற்றி உலகில் நீதியையும், அமைதியை யும் நிலைநாட்டுபவர்களாக வாழும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் அளித்து, உமது திருச்சபையை மீட்பின் பாதையில் வழி நடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நம்பிக்கை தருபவராம் இறைவா,
  உலக மக்கள் அனைவரும் உம் திருமகனின் சிலுவை மரணத்தின் முக்கியத்துவத்தை உணரவும், அவரது சிலுவையின் வழியாக நீர் செயல்படுத்திய மீட்புத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவும் தேவையான மனதை அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நன்மை செய்பவராம் இறைவா,
  எங்கள் நாட்டை வழிநடத்தும் தலைவர்கள் அனைவரும், கிறிஸ்துவைப் பின்பற்றி தன்னலமற்ற சேவை செய்பவர்களாக திகழவும், மக்களின் நலனுக்காக துன்பங்களை ஏற்றுக்கொள்பவர்களாக வாழவும் தேவையான வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வை வழங்குபவராம் இறைவா,
   உமது மக்களாகவும், உம் திருமகனின் சீடர்களாகவும் வாழ அழைக்கப்பட்டுள்ள கிறிஸ் தவர்கள் அனைவரும், பசி, நோய், துன்பம் போன்றவற்றால் வேனையுறும் மக்களுக்கு பணியாற்றி, புதுவாழ்வு அளிக்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. துன்புற அழைப்பவராம் இறைவா,
   உம் திருமகன் இயேசுவின் சிலுவைப் பயணத்தைப் பின்பற்றி, இறையாட்சியின் இலட்சியங்களுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் நல்ல உள்ளத்தை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தந்தருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.