Saturday, June 28, 2014

ஜூன் 29, 2014

புனித பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழா

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 12:1-11
   அந்நாள்களில் ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்ப விழா நாள்களில் நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப் பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரிக்க லாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது. ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, "உடனே எழுந்திடும்" என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன. வானதூதர் அவரிடம், "இடைக்கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக்கொள்ளும்'' என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர் அவரிடம், "உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்" என்றார். பேதுரு வானதூதரைப் பின்தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரை விட்டு அகன்றார். பேதுரு தன் னுணர்வு பெற்றபோது, "ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்" என்றார்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 34:1-2.3-4.5-6.7-8
பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.
   ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். (பல்லவி)
   என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன் மைப்படுத்துவோம். துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறு மொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். (பல்லவி)
   அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத் திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். (பல்லவி)
   ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர். ஆண்ட வர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 2 திமோத்தேயு 4:6-8,17-18
   அன்பிற்குரியவரே, நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண் டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். நான் அறிவித்த செய்தி நிறை வுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

வாழ்த்தொலி: மத்தேயு 16:18
   அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லே லூயா!

நற்செய்தி வாசகம்: மத்தேயு 16:13-19
   அக்காலத்தில் இயேசு பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, "மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரே மியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்" என்றார்கள். "ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுல கில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப் பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, June 26, 2014

ஜூன் 29, 2014

புனித பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   திருத்தூதர்களான பேதுரு, பவுல் ஆகியோரின் பெருவிழா திருப்பலிக்கு உங்களை அன் போடு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். திருச்சபையின் இரு தூண்களாக விளங் கும் இந்த திருத்தூதர்கள், யூதர்களிடையிலும் பிற இனத்தார் நடுவிலும் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தவர்கள். நம் ஆண்டவர் மீது இவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையே தொடக் கத் திருச்சபையின் வளர்ச்சிக்கு உரமூட்டியது. தடைசெய்யவும் அனுமதிக்கவும் இயேசு கிறிஸ்து வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில், திருச்சபையின் முதல் தலைவராக செயல்பட்டவர் புனித பேதுரு. ஆண்டவரால் தடுதாட்கொள்ளப்பட்டு, பிற இனத்தாரின் திருத்தூதராக விளங்கியவர் புனித பவுல். கிறிஸ்துவுக்காக உயிரையே இழக்கத் துணிந்த இந்த திருத்தூதர்களைப் பின்பற்றி, இயேசுவின் சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, இத் திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே, 
     இன்றைய முதல் வாசகம், சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருத்தூதர் பேதுருவை ஆண்டவரின் தூதர் விடுவித்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. திருத்தூதர் யாக்கோபு கொலை செய்யப்பட்டது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்ட ஏரோது அரசன், திருத் தூதர் பேதுருவையும் கைது செய்கிறான். காவலில் வைக்கப்பட்டிருந்த பேதுருவுக்காக திருச்சபையின் மக்கள் கடவுளிடம் உருக்கமாக வேண்டுவதைக் காண்கிறோம். அதன் கார ணமாக, வானதூதர் ஒருவர் திருத்தூதர் பேதுருவை சிறையில் இருந்து விடுவிக்கிறார். செபத்தின் வலிமையை இங்கு காண்கிறோம். நாமும் திருச்சபையின் மேய்ப்பர்களுக்காக தொடர்ந்து செபிக்கும் வரம் வேண்டி இவ்வாசகத்துக்கு கவனமுடன் செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவருக்காக தமது வாழ்வை அர்ப்பணித்தது குறித்து எடுத்துரைக்கிறார். விசுவாசத்தைக் காத்து நிற்கும் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தமது நேரிய வாழ்வுக்காக ஆண்டவர் வெற்றி வாகை யைத் தருவார் என்றும் அவர் குறிப்பிடுகிறார். பிற இனத்தாரிடையே நற்செய்தி அறிவிக்க தமக்கு வலுவூட்டியவர் ஆண்டவரே என்பதை அவர் அறிக்கையிடுகிறார். தீங்கு அனைத் திலும் இருந்து தம்மைக் காத்து ஓட்டத்தை முடிக்க உதவிய கடவுள், மீட்பை பரிசாக அளிப்பார் என்ற உறுதியை வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவின் ஆட்சி மலர நம்மையே பலியாக்கும் வரம் வேண்டி இவ்வாசகத்துக்கு கவனமுடன் செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. துணிவைத் தருபவரே இறைவா,
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உலகின் எதிர்ப்புக ளுக்கு அஞ்சாமல் உமது நசெய்தியின் வழியை வாழ்வாக்கவும், மக்கள் முன்னிலையில் சான்று பகரவும் துணிவை
அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. ஆற்றல் அளிப்பவரே இறைவா,
   திருத்தூதர்களான பேதுரு, பவுல் ஆகியோரைப் போன்று, கிறிஸ்தவர்கள் அனைவரும் உ
ம் மீதான நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், இவ்வுலக மக்களிடையே கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழவும் ஆற்றல் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. மாற்றம் தருபவரே இறைவா,
   உலகம் முழுவதும் உம் திருமகனின் திருச்சபையைத் துன்புறுத்தி அழிக்க நினைக்கும் தீயோர் அனைவரையும் மனந்திருப்பி, புனித பவுலைப் போன்று திருச்சபையின் வளர்ச்சிக் கான கருவிகளாக மாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. ஒற்றுமை அளிப்பவரே இறைவா,
   சிறுசிறு சபைகளாக பிளவுபட்டு நிற்கும் கிறிஸ்தவ சமூகங்கள் அனைத்தும், புனித பேதுரு என்ற பாறை மீது எங்கள் ஆண்டவர் இயேசு கட்டியெழுப்பிய ஒரே திருச்சபைக் குள் விரைவில் ஒன்றிணைய
உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. உண்மையின் ஊற்றே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், திருத்தூதர்களின் முன்மாதிரியான விசுவாச வாழ்வைப் பின்பற்றி உம் திருமகன் இயேசுவின் உண்மை யான சாட்சிகளாகத் திகழ
வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.