கிறிஸ்துவின் வாழ்வு

இயேசுவின் பிறப்பு:
   உலக மக்களின் எதிர்பார்ப்புகளையும், இறைவாக்கினர்களின் முன்னறிவிப்புகளையும் நிறைவு செய்யும் வகையில், கடவுள் மனிதராக பிறக்கும் காலம் வந்தது. நாசரேத்தில் வாழ்ந்த கன்னி மரியாவுக்கு கபிரியேல் தூதர் தோன்றி, 'இறைமகன் தூய ஆவியின் வல்லமையால் மரியாவிடம் கருவாகி பிறக்க போகிறார்' என்ற நற்செய்தியை அறிவித்தார். மரியாவும் கடவுளின் விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்தார். மரியா யோசேப்பு என்பவருக்கு மண ஒப்பந்தம் ஆனவர். அவர் திருமணம் நடப்பதற்கு முன்பே, கருவுற்றிருப்பதை யோசேப்பு அறிந்தார். மரியாவை மறைவாகவிலக்கிவிட திட்டமிட்ட வேளையில், அது கடவுளின் சித்தம் என்பதை யோசேப்பு உணர்ந்து, மரியாவை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டார். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பெயரைப் பதிவு செய்ய இருவரும் தாவீதின் ஊரான பெத்லகேமுக்கு சென்றனர். அங்கு மரியாவுக்கு குழந்தை பிறந்தது. எட்டாம் நாளில் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்து, இயேசு என்று பெயரிட்டனர்.

ஞானிகளின் வருகை:
   நாற்பதாம் நாளில் தூய்மைச் சடங்கை நிறைவேற்றுவதற்காக எருசலேம் கோவிலுக்கு சென்றனர். அங்கு மோசேயின் சட்டப்படி இயேசுவை கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுத்து மீட்டுக் கொண்டனர். சிமியோனும் அன்னாவும் இயேசுவின் இறைத்தன்மையைப் பறைசாற்றினர். அதன்பின் இயேசுவைக் காண, கீழ்த்திசையில் இருந்து மூன்று ஞானிகள் பெத்லகேமுக்கு வந்து, அவரை வணங்கி பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் ஆகியவற்றை காணிக்கையாக அளித்தனர். ஏரோது இயேசுவைக் கொல்ல தேடியதால், யோசேப்பு மரியாவையும் இயேசுவையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பி ஓடினார். தனது திட்டம் நிறைவேற ஏரோது பெத்லகேமின் சுற்றுப் பகுதிகளில் இருந்த இரண்டு வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் கொன்றான்.

இயேசு வளர்கிறார்: 
   ஏரோதின் மரணத்துக்குப் பிறகு, அவர்கள் நாசரேத்துக்கு சென்று வாழ்ந்து வந்தனர். இயேசுவுக்கு 12 வயது ஆனபோது, வழக்கப்படி யோசேப்பு குடும்பத்தோடு எருசலேம் திருவிழாவுக்குசென்றார். இயேசுவோ விழா முடிந்த பிறகும், கோவிலிலேயே தங்கியிருந்து மறைநூல் அறிஞர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார். இதை அறியாத அவரது பெற்றோர், பல இடங்களிலும் அவரைத் தேடி அலைந்து இறுதியாக அவரைக் கண்டுபிடித்தனர். பின்னர் பெற்றோரோடுவீட்டுக்கு சென்று, உடல் வளர்ச்சியிலும் ஞானத்திலும் மிகுந்து வளர்ந்தார். அவரது பெற்றோருக்கு கீழ்படிந்து உதவிகளும் செய்து வந்தார். 30ஆம் வயதில் இயேசு, யோவானிடம் திருமுழுக்கு பெற்று தமது இறையரசு பணியைத் தொடங்கினார்.தமக்கு துணையாக பன்னிரு திருத்தூதர்களை நியமித்தார்.

இயேசுவின் பணி:
   இயேசு ஊர் ஊராய் சென்று கடவுளின் நற்செய்தியை அறிவித்தார். மக்கள் கடவுளிடமும், மற்ற மனிதர்களிடமும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்பித்தார். சமயத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மக்களை அடக்கி ஆண்டு வந்த தலைவர்களின் தவறான கொள்கைகளை கண்டித்தார். மக்களின் கடினமான மனப்போக்கையும் கண்டனம் செய்தார். தீய வழியில் இருந்து விலகி, தூய வாழ்வு வாழ அழைத்தார். கடவுளின் அரசைப் பற்றிய செய்தியை அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உவமைகள் வழியாக எடுத்துக் கூறினார். தன்னை நாடி வந்த மக்களுக்கு பல்வேறு அற்புதங்களைச் செய்தார். பாவிகளை மன்னித்து, அவர்கள் புது வாழ்வு வாழ உதவி செய்தார். பார்வையற்றோர், பேச்சற்றோர், கேட்கும் திறனற்றோர், உடல் ஊனமுற்றோர், தீய ஆவி பிடித்தோர், தொழுநோயாளர் என பலவித நோயாளிகளையும் குணப்படுத்தினார். இறந்தோரையும் உயிருடன் எழுப்பினார்.

சீர்திருத்தத்தில் இயேசு:
   இயேசு தன்னை இறைமகன் என்று கூறியதோடு, யூத சமயத் தலைவர்களின் போலித்தனமான வாழ்வையும் கண்டித்தார். பெண்களையும், குழந்தைகளையும் புறக்கணித்த யூத சமுதாயத்தில் இயேசு அவர்களை ஏற்று அரவணைத்தார். இழிவானவர்களாக கருதப்பட்ட ஏழைகள், பாவிகள், வரி வசூலிப்பவர்கள் ஆகியோரோடு உறவாடினார். மக்கள் பலரும் இயேசுவைப் பின்பற்றத் தொடங்கினர். சமயத் தலைவர்களின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. இவற்றால் கோபம் அடைந்த சமயத் தலைவர்கள் இயேசுவைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினர். பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவனான யூதாசுக்கு பணம் கொடுத்து, இயேசுவைக் காட்டிக் கொடுக்கும்படி ஒப்புதல் பெற்றனர். அவனும் இயேசுவைக் காட்டிக் கொடுக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தான். புனித வியாழனன்று பாஸ்கா விருந்து உண்ணும் முன், இயேசு தமது திருத்தூதர்களின் காலடிகளைக் கழுவினார்.

நற்கருணையை ஏற்படுத்துதல்:
   காலடிகளைக் கழுவி முடித்ததும் இயேசு பந்தியில் அமர்ந்தார். அவர் அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி கூறி சீடர்களுக்கு அளித்து, "இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்" என்றார். பின் இரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி கூறி சீடர்களுக்கு அளித்து, "இது உங்களுக்காகவும் எல்லோருக்காகவும் சிந்தப்படும் என் இரத்தம்" என்றார். இவ்வாறு தம் உடனிருப்பை நம்மோடு என்றும் நிலைக்கச் செய்ய நற்கருணையை நிறுவினார். அவர்களுக்கு அன்பு கட்டளையையும் கொடுத்தார். பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி தோட்டத்துக்கு சென்றார்கள். அங்கே தமது பாடுகளை நினைத்துதனிமையில் வேதனை அடைந்தார். அப்போது அந்த இடத்திற்கு வந்த சமயத் தலைவர்களின் ஆட்கள், இயேசுவை கைது செய்தனர். அவரது சீடர்களோ அவரை விட்டுவிட்டு தப்பி ஓடினர்.

சிலுவையில் மரணம்:
   இயேசு கைது செய்யப்பட்ட பிறகு, தலைமை குருக்களின் விசாரணைக்கும் ஏரோதின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார். இறுதியாக பிலாத்து அவரை விசாரித்தான். அவரிடம் குற்றம் எதையும் காணாத அவன், இயேசுவை விடுவிக்க விரும்பினான். இயேசுவுக்கு சாட்டை அடிகளும், முள்முடியும் கிடைத்தன. மக்களோ சமயத் தலைவர்களின் தூண்டுதலால், இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் என்று கூக்குரலிட்டனர். பிலாத்து தனது கரங்களை கழுவிவிட்டு இயேசுவுக்கு மரண தண்டனை விதித்தான். இயேசு தன் சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரி மலை நோக்கி பயணம் செய்தார். அங்கு அவர் இரண்டு கள்வர்களுக்கு நடுவில் சிலுவையில் அறையப்பட்டார். அருகில் இயேசுவின் தாய் மரியாவும், அன்பு சீடர் யோவானும் மற்றும் சில பெண்களும் இருந்தனர். மூன்று மணி நேரமாக சூரியன் ஒளி கொடுக்கவில்லை. இறுதியாக இயேசு, "தந்தையே எனது ஆவியை உமது கையில் ஒப்படைக்கிறேன்" என்று கூறி உயிர் துறந்தார்.

உயிர்ப்பும் விண்ணேற்றமும்:
   இயேசுவின் உடலைக் கல்லறையில் அடக்கம் செய்தனர். மூன்றாம் நாளில் இயேசு மீண்டும் உயிர்த்து எழுந்தார். அவர் தம்மை முதலில், மகதலா மரியாவுக்கு வெளிப்படுத்தினார். தாம் உயிரோடு இருப்பதை தமது சீடர்களுக்கு பலமுறை காண்பித்தார். திருத்தூதர் தோமா தனது சந்தேகத்தின் மூலம், இயேசு உடலோடு உயிர்த்து எழுந்ததை உறுதி செய்தார். ஒருநாள் பேதுருவும் மற்றும் சில சீடர்களும் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளையில், இயேசு அவர்களுக்கு தோன்றி தமது திருச்சபையின் தலைமையை பேதுருவிடம் வழங்கினார். நாற்பது நாட்களாக இயேசு சீடர்களுக்குதோன்றி, அவர்களைத் திடப்படுத்தினார். இறுதியாக இயேசு, உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்று சீடர்களுக்கு கட்டளைக் கொடுத்தார். உலகம் முடியும் வரை தாம் அவர்களோடு இருப்பதாகவும், அவர்களுக்கு ஒரு துணையாளரை அனுப்புவதாகவும் வாக்குறுதி கொடுத்துவிட்டு இயேசு விண்ணகம் சென்றார்.