Friday, September 9, 2011

செப்டம்பர் 11, 2011

பொதுக்காலம் 24-ம் ஞாயிறு

முதல் வாசகம்: சீராக்கின் ஞானம் 27:30-28:7
   வெகுளி, சினம் ஆகிய இரண்டும் வெறுப்புக்குரியவை; பாவிகள் இவற்றைப் பற்றிக் கொள்கின்றார்கள். பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப் பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார். உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும். மனிதர் மனிதர்மீது சினங்கொள்கின்றனர்; அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? மனிதர் தம் போன்ற மனிதருக்கு இரக்கம் காட்டுவதில்லை; அப்போது அவர்கள் தம் பாவ மன்னிப்புக்காக எப்படி மன்றாட முடியும்? அழியும் தன்மை கொண்ட மனிதர் வெகுளியை வளர்க்கின்றனர். அவ்வாறாயின், யார் அவர்களுடைய பாவங்களுக்குக் கழுவாய் தேட முடியும்? உன் முடிவை நினைத்துப் பார்; பகைமையை அகற்று; அழிவையும் சாவையும் நினைத்துப் பார்; கட்டளைகளில் நிலைத்திரு. கட்டளைகளை நினைவில் கொள்; அடுத்தவர் மீது சினங்கொள்ளாதே; உன்னத இறைவனின் உடன்படிக்கையைக் கருத்தில் வை; குற்றங்களைப் பொருட்படுத்தாதே.
இரண்டாம் வாசகம்: உரோமையர் 14:7-9
   சகோதர சகோதரிகளே, நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை. வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே, வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவ ருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சி செலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 18:21-35
   அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?" எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: "ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன். விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கிய பொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, 'என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்' என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, 'நீ பட்ட கடனைத் திருப்பித் தா' எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்' என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையில் அடைத்தான். அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, 'பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?' என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார். உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்."

Friday, September 2, 2011

செப்டம்பர் 4, 2011

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசேக்கியேல் 33:7-9
   ஆண்டவர் கூறியது: மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும் போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்க வேண்டும். தீயோரிடம் நான், 'ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்' என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்; ஆனால், அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன். ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.
இரண்டாம் வாசகம்: உரோமையர் 13:8-10
   சகோதர சகோதரிகளே, நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார். ஏனெனில், "விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே'' என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், "உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக'' என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன. அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 18:15-20
   அக்காலத்தில் இயேசு சீடர்களிடம் கூறியது: "உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் 'இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவி சாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும். மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."