Friday, December 23, 2011

டிசம்பர் 25, 2011

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு

முதல் வாசகம்: எசாயா 9:2-4,6-7
   காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர். ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ 'வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்' என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.
இரண்டாம் வாசகம்: தீத்து 2:11-14
   மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்து, கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப் பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 2:1-14
   அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும் தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. மரியா தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்'' என்றார். உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!'' என்று கடவுளைப் புகழ்ந்தது.

கிறிஸ்து பிறப்பு பெருவிழா

முதல் வாசகம்: எசாயா 52:7-10
   நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, 'உன் கடவுள் அரசாளுகின்றார்' என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். பிற இனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

இரண்டாம் வாசகம்: எபிரேயர் 1:1-6
   பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். இவ்வாறு இறைமகன் வானதூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களை விட இவர் மேன்மை அடைந்தார். ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது "நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்'' என்றும், "நான் அவருக்குத் தந்தையாய் இருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார்'' என்றும் எப்போதாவது கூறியதுண்டா? மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, "கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக'' என்றார்.

நற்செய்தி வாசகம்: யோவான் 1:1-18
   தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை. கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ள வில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள். வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார். யோவான் அவரைக் குறித்து, "எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்'' என உரத்த குரலில் சான்று பகர்ந்தார். இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

Friday, December 16, 2011

டிசம்பர் 18, 2011

 திருவருகைக்காலம் 4-ம் ஞாயிறு

முதல் வாசகம்: 2 சாமுவேல் 7:1-5,8-12,14-16
   தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, "பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது'' என்று கூறினார். அதற்கு நாத்தான், "நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்று அரசரிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: "நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்; நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப் போகிறாயா? என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!''   
இரண்டாம் வாசகம்: 1 உரோமையர் 16:25-27
   சகோதர சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவைப்பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 1:26-38
   ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத் தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு மரியா கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரிய வராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார். வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என் றார். பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Saturday, December 10, 2011

டிசம்பர் 11, 2011

 திருவருகைக்காலம் 3-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 61:1-2,10-11
   ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித் தார். நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.  
இரண்டாம் வாசகம்: 1 தெசலோனிக்கர் 5:16-24
   சகோதர சகோதரிகளே, எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவ னிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றிகூறுங்கள். உங்களுக்காக கிறிஸ்து இயேசு வழியாய் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. தூய ஆவியின் செயல் பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தை யும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமை களையும் விட்டு விலகுங்கள். அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களு டைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழமையாகக் காப்பாராக! உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார்.

நற்செய்தி வாசகம்: யோவான் 1:6-8,19-28
   கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, 'நீர் யார்?' என்று கேட்டபோது அவர், 'நான் மெசியா அல்ல' என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, 'அப்படி யானால் நீர் யார்? நீர் எலியாவா?' என்று அவர்கள் கேட்க, அவர், 'நானல்ல' என்றார். 'நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?' என்று கேட்டபோதும், அவர், 'இல்லை' என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், 'நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், '"ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது″ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே' என்றார். பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், 'நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?' என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், 'நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை' என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Saturday, December 3, 2011

டிசம்பர் 4, 2011

திருவருகைக்காலம் 2-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 40:1-5,9-11
   "ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்'' என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்: "அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்று விட்டாள்." குரலொலி ஒன்று முழங்குகின்றது: "பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்." சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! 'இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.   
இரண்டாம் வாசகம்: 2 பேதுரு 3:8-14
   அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிட வேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றன. ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந் தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால் அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவ தில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார். ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்; பஞ்ச பூதங்கள் வெந்துருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். இவை யாவும் அழிந்து போகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும்! கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்து ருகிப் போகும். அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர் களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 1:1-8
   கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்த மாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்'' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார். யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர். யோவான் ஒட்டக முடி ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் உண்டு வந்தார். அவர் தொடர்ந்து, "என்னைவிட வலிமைமிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதி இல்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்" எனப் பறைசாற்றினார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Saturday, November 26, 2011

நவம்பர் 27, 2011

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 63:16-17,64:1,3-8
   ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை; பண்டைய நாளிலிருந்து 'எம் மீட்பர்' என்பதே உம் பெயராம். ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வது ஏன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியது ஏன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய குலங்களை முன்னிட்டும் திரும்பி வாரும். நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே! நீர் இறங்கி வந்தீர்; மலைகள் உம் முன்னே உருகி ஓடின! தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை; செவியுற்றதும் இல்லை. கண்ணால் பார்த்ததுமில்லை. மகிழ்ச்சி யுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும், உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர். இதோ, நீர் சினமடைந்தீர்; நாங்கள் பாவம் செய்தோம்; நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்? நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்; எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின; நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம்; எங்கள் தீச்செயல்கள் காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன. உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை; உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை; நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்; எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர்.   
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 1:3-9
   சகோதர சகோதரிகளே, நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிட மிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக் கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள். மேலும் கிறிஸ்துவைப் பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவ ராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து வின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார். 

நற்செய்தி வாசகம்: மாற்கு 13:33-37
   அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும் பயணம் செல்ல இருக்கும் ஒருவர் தம் வீட்டை விட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப் பாளராக்கி, விழிப்பாய் இருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். அது போலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Friday, November 18, 2011

நவம்பர் 20, 2011

கிறிஸ்து அரசர் பெருவிழா

முதல் வாசகம்: எசேக்கியேல் 34:11-12,15-17
   தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வது போல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன். நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப் போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன். எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன்னைப் பொறுத்தவரை, என் மந்தையே, நான் ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக் கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையேயும் நீதி வழங்குவேன்.   
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 15:20-26,28
   சகோதர சகோதரிகளே, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர். அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார். எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும். அனைத்துமே மகனுக்கு அடிபணியும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.  

நற்செய்தி வாசகம்: மத்தேயு 25:31-46
   அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப் பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, 'என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார். அதற்கு நேர்மையாளர்கள் 'ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?' என்று கேட்பார்கள். அதற்கு அரசர், 'மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார். பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, 'சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை' என்பார். அதற்கு அவர்கள், 'ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், 'மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.'' 

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Saturday, November 12, 2011

நவம்பர் 13, 2011

பொதுக்காலம் 33-ம் ஞாயிறு

முதல் வாசகம்: நீதிமொழிகள் 31:10-13,19-20,30-31
 திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தை விடப் பெருமதிப்புள்ளவள். அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒருநாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள். இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள். எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.  
இரண்டாம் வாசகம்: 1 தெசலோனிக்கர் 5:1-6
   சகோதர சகோதரிகளே, காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. ஏனெனில் திருடன் இரவில் வருவது போல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள். `எங்கும் அமைதி, ஆபத்து இல்லை' என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவது போல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக்கொள்ள இயலாது. ஆனால் அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. ஆகவே மற்றவர்களைப் போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம். 

நற்செய்தி வாசகம்: மத்தேயு 25:14-30
   அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய உவமை: விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்; நெடும் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார். நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, 'ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், 'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன், உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, 'ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார். அவருடைய தலைவர் அவரிடம், 'நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, 'ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது' என்றார். அதற்கு அவருடைய தலைவர், 'சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்' என்று கூறினார். 'எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்து பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்று அவர் கூறினார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Friday, November 4, 2011

நவம்பர் 6, 2011

பொதுக்காலம் 32-ம் ஞாயிறு

முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 6:12-16
  ஞானம் ஒளிமிக்கது; மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டு கொள்வர்; அதைத் தேடுவோர் கண்டடைவர். தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும். வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடைய மாட்டார்கள்; ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள். அதன்மீது மனத்தைச் செலுத்துவதே ஞானத்தின் நிறைவு. அதன் பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர். தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது; அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டுகிறது; அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர்களை எதிர்கொள்கிறது. 
இரண்டாம் வாசகம்: 1 தெசலோனிக்கர் 4:13-18
   சகோதர சகோதரிகளே, இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படி யானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்க ளுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம். கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக்கொண்டுபோகப்பட்டு, வான் வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.  

நற்செய்தி வாசகம்: மத்தேயு 25:1-13
   அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குச் சொன்ன உவமையாவது: "விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன் மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். நள்ளிரவில், 'இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்' என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, 'எங்கள் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்' என்றார்கள். முன் மதியுடையவர்கள் மறுமொழியாக, 'உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வது தான் நல்லது' என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக் குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, 'ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்றார்கள். அவர் மறுமொழியாக, 'உறுதி யாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது' என்றார். எனவே விழிப் பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.''

சிந்தனை: வத்திக்கான் வானொலி 

Sunday, October 30, 2011

அக்டோபர் 30, 2011

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு

முதல் வாசகம்: மலாக்கி 1:14-2:1-2,8-10
   "நானே மாவேந்தர்" என்கிறார் படைகளின் ஆண்டவர். "இப்பொழுது, குருக்களே! உங்களுக்கு நான் தரும் கட்டளை இதுவே: என் பெயருக்கு மாட்சி அளிக்க வேண்டும் என்பதை உங்கள் இதயத்தில் பதித்துக்கொள்ளுங்கள். எனக்கு நீங்கள் செவிகொடுக்கா விடில் உங்கள் மேல் சாபத்தை அனுப்புவேன். உங்களுக்குரிய நல்லாசிகளைச் சாபமாக மாற்றுவேன். ஆம், இக்கட்டளைக்கு உங்கள் இதயத்தில் இடமளிக்காததால் ஏற்கெனவே அவற்றைச் சாபமாக மாற்றிவிட்டேன்'' என்று படைகளின் ஆண்டவர் சொல்கிறார். "நீங்களோ நெறி தவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறி விழச் செய்தீர்கள். லேவியோடு நான் செய்த உடன்படிக்கையைப் பாழாக்கி விட்டீர்கள்'' என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர். "ஆதலால் நானும் உங்களை மக்கள் அனைவர் முன்னிலையில் இழிவுக்கும் தாழ்வுக்கும் ஆளாக்குவேன்; ஏனெனில், நீங்கள் என் வழி களைப் பின்பற்றி ஒழுகவில்லை; உங்கள் போதனையில் ஓரவஞ்சனை காட்டினீர்கள்.'' நம் அனைவர்க்கும் தந்தை ஒருவரன்றோ? நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ? பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றோம்? நம் மூதாதையரின் உடன்படிக்கையை ஏன் களங்கப்படுத்துகிறோம்?
இரண்டாம் வாசகம்: 1 தெசலோனிக்கர் 2:7,9-13
   சகோதர சகோதரிகளே, நாங்கள் உங்களிடையே இருந்த பொழுது, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பது போல், கனிவுடன் நடந்து கொண்டோம். இவ்வாறு உங்கள்மீது ஏக்கமுள்ளவர்களாய், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்க ளையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்; ஏனெனில் நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள். அன்பர்களே! நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத் தோம் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, எங்கள் பிழைப்புக்காக இராப் பகலாய் வேலை செய்து கொண்டே, கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம். கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தை யாகவே ஏற்றுக் கொண்டீர்கள். இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தைதான்; அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது.  

நற்செய்தி வாசகம்: மத்தேயு 23:1-12
   அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: "மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றை யெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வர மாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங் களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்பு கிறார்கள். ஆனால் நீங்கள் `ரபி' என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப் பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.''

Saturday, October 22, 2011

அக்டோபர் 23, 2011

பொதுக்காலம் 30-ம் ஞாயிறு

முதல் வாசகம்: விடுதலைப்  பயணம் 22:21-27
   ஆண்டவர் கூறியது: அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப் படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன். மேலும் என் சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர். உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர் மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே. பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்து உறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில் நான் இரக்கமுடையவர்.
இரண்டாம் வாசகம்: 1 தெசலோனிக்கர் 1:5-10
   சகோதர சகோதரிகளே, உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே எவ்வாறு நடந்து கொண்டோம் என்பது உங்களுக்குத் தெரியும். மிகுந்த வேதனை நடுவிலும் நீங்கள் தூய ஆவி அருளும் மகிழ்வோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள். இவ்வாறு எங்களைப் போலவும் ஆண்டவரைப் போலவும் நடப்பவரானீர்கள். மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் உள்ள, நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் முன்மாதிரியானீர்கள். எப்படியெனில், ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நடுவிலிருந்தே பரவியது. கடவுள் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பது மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் தெரிய வந்துள்ளது. எனவே இதைப் பற்றி நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. நாங்கள் உங்களிடம் வந்தபோது எவ்வாறு நீங்கள் எங்களை வரவேற்றீர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான வாழும் கடவுளுக்கு ஊழியம்புரிய கடவுளிடம் திரும்பி வந்தீர்கள் என்றும் கூறிவருகிறார்கள். இவ்வாறு நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப்போகும் சினத்தி லிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.   

நற்செய்தி வாசகம்: மத்தேயு 22:34-40
   அக்காலத்தில் இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், "போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்று கேட்டார். அவர், "'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.' இதுவே தலை சிறந்த முதன்மையான கட்டளை. 'உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப் பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன'' என்று பதிலளித்தார்.

Friday, October 14, 2011

அக்டோபர் 16, 2011

பொதுக்காலம் 29-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 45:1,4-6
   சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்; கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்; அவரது வலக் கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்; அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன். நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை; நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன். கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை.
இரண்டாம் வாசகம்: 1 தெசலோனிக்கர் 1:1-5
   தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற தெசலோனிக்க சபைக்கு, பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! நாங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள உங்கள் மனவுறுதியையும் நம் தந்தையாம் கடவுள்முன் நினைவுகூருகிறோம். கடவுளின் அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே! நீங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனெனில் நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி, தூய ஆவி தரும் வல்லமை யோடும் மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டு வந்தோம்.  

நற்செய்தி வாசகம்: மத்தேயு 22:15-21
   அக்காலத்தில் பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாம் எனச் சூழ்ச்சி செய்தார்கள். தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, "போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக் கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்" என்று அவர்கள் கேட்டார்கள். இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்துகொண்டு, "வெளி வேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்" என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், "இதில் பொறிக்கப் பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்று கேட்டார். அவர்கள், "சீசருடை யவை" என்றார்கள். அதற்கு அவர், "ஆகவே சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்று அவர்களிடம் கூறினார்.

Friday, October 7, 2011

அக்டோபர் 9, 2011

பொதுக்காலம் 28-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 25:6-10
   படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து விடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம் மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: "இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.'' ஆண்டவரின் ஆற்றல் இம்மலையில் தங்கியிருக்கும்.
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 4:12-14,19-20
   சகோதர சகோதரிகளே, எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. ஆயினும் நான் பட்ட துன்பத்தில் நீங்கள் பங்கு கொண்டது உங்கள் நன்மனத்தைக் காட்டுகிறது. என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார். நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 22:1-14
   அக்காலத்தில் இயேசு மீண்டும் தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது: "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை. மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், 'நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராய் உள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்' என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார். பின்னர் தம் பணியாளர்களிடம், 'திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்' என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்தபோது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். அரசர் அவனைப் பார்த்து, 'தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?' என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், 'அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்றார். இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்."

Saturday, October 1, 2011

அக்டோபர் 2, 2011

பொதுக்காலம் 27-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 5:1-7
  என் நண்பரைக் குறித்துக் கவி பாடுவேன்; என் அன்பரின் திராட்சைத் தோட்டத்தைப் பற்றிக் காதல் பாட்டொன்று பாடுவேன். செழுமைமிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. அவர் அதை நன்றாகக் கொத்திக் கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்; நல்ல இனத் திராட்சைக் கொடிகளை அதில் நட்டுவைத்தார்; அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்; திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்; நல்ல திராட்சைக் குலைகள் கிட்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார்; மாறாக, காட்டுப் பழங்களையே அது தந்தது. இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்; எருசலேமில் குடியிருப்போரே, யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள். என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப் பழங்களை அது தந்ததென்ன? என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யப் போவதை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன், கேளுங்கள்: ``நானே அதன் வேலியைப் பிடுங்கி எறிவேன்; அது தீக்கிரையாகும்; அதன் சுற்றுச் சுவரைத் தகர்த்தெறிவேன்; அது மிதியுண்டு போகும். நான் அதைப் பாழாக்கி விடுவேன்; அதன் கிளைகள் நறுக்கப்படுவதில்லை; களையை அகற்ற மண் கொத்தப் படுவதுமில்லை; நெருஞ்சியும், முட்புதர்களுமே அதில் முளைக்கும்; அதன்மீது மழை பொழியாதிருக்க மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.'' படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே; அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே; நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்; ஆனால் விளைந்ததோ இரத்தப்பழி; நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்; ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 4:6-9
   சகோதர சகோதரிகளே, எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும். இறுதியாக, சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்கு உரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக் கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 21:33-43
   அக்காலத்தில் இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: "மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து, அதில் பிழிவுக் குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டு விட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்தபோது அவர் தமக்குச் சேரவேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியா ளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களை விட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்டபோது தோட்டத் தொழிலாளர்கள், 'இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள். எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?'' என இயேசு கேட்டார். அவர்கள் அவரிடம், "அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்குச் சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்'' என்றார்கள். இயேசு அவர்களிடம், "கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

Saturday, September 24, 2011

செப்டம்பர் 25, 2011

பொதுக்காலம் 26-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசேக்கியேல் 18:25-28
  ஆண்டவர் கூறுவது: 'தலைவரின் வழி செம்மையானதாக இல்லை' என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை! நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 2:1-11
   சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறைகொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 21:28-32
   அக்காலத்தில் இயேசு கூறியது: "இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், `மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்' என்றார். அவர் மறுமொழியாக, `நான் போக விரும்பவில்லை' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, `நான் போகிறேன் ஐயா!' என்றார்; ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?'' என்று கேட்டார். அவர்கள் ``மூத்தவரே'' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், ``வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை; அவரை நம்பவும் இல்லை'' என்றார்.

Friday, September 16, 2011

செப்டம்பர் 18, 2011

பொதுக்காலம் 25-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 55:6-9
   ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ள போதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும் போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர்அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறை களைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 1:20-24,27
   சகோதர சகோதரிகளே, வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே என் எதிர் நோக்கு. ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்து கொள்வதென எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி நிலையில் உள்ளேன். உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்கவேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம். - இதுவே மிகச் சிறந்தது. - ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம். - இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது. ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்; கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுங்கள்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 20:1-16
   அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறிய உவமை: "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், `நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்' என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், `நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, `எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை' என்றார்கள். அவர் அவர்களிடம், `நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்' என்றார். மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், `வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர் வரை அவர்களுக்குரிய கூலி கொடும்' என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்ட போது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, `கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே' என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, `தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ள வில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?' என்றார். இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்'' என்று இயேசு கூறினார்.

Friday, September 9, 2011

செப்டம்பர் 11, 2011

பொதுக்காலம் 24-ம் ஞாயிறு

முதல் வாசகம்: சீராக்கின் ஞானம் 27:30-28:7
   வெகுளி, சினம் ஆகிய இரண்டும் வெறுப்புக்குரியவை; பாவிகள் இவற்றைப் பற்றிக் கொள்கின்றார்கள். பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப் பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார். உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும். மனிதர் மனிதர்மீது சினங்கொள்கின்றனர்; அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? மனிதர் தம் போன்ற மனிதருக்கு இரக்கம் காட்டுவதில்லை; அப்போது அவர்கள் தம் பாவ மன்னிப்புக்காக எப்படி மன்றாட முடியும்? அழியும் தன்மை கொண்ட மனிதர் வெகுளியை வளர்க்கின்றனர். அவ்வாறாயின், யார் அவர்களுடைய பாவங்களுக்குக் கழுவாய் தேட முடியும்? உன் முடிவை நினைத்துப் பார்; பகைமையை அகற்று; அழிவையும் சாவையும் நினைத்துப் பார்; கட்டளைகளில் நிலைத்திரு. கட்டளைகளை நினைவில் கொள்; அடுத்தவர் மீது சினங்கொள்ளாதே; உன்னத இறைவனின் உடன்படிக்கையைக் கருத்தில் வை; குற்றங்களைப் பொருட்படுத்தாதே.
இரண்டாம் வாசகம்: உரோமையர் 14:7-9
   சகோதர சகோதரிகளே, நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை. வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே, வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவ ருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சி செலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 18:21-35
   அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?" எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: "ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன். விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கிய பொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, 'என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்' என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, 'நீ பட்ட கடனைத் திருப்பித் தா' எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்' என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையில் அடைத்தான். அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, 'பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?' என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார். உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்."

Friday, September 2, 2011

செப்டம்பர் 4, 2011

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசேக்கியேல் 33:7-9
   ஆண்டவர் கூறியது: மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும் போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்க வேண்டும். தீயோரிடம் நான், 'ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்' என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்; ஆனால், அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன். ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.
இரண்டாம் வாசகம்: உரோமையர் 13:8-10
   சகோதர சகோதரிகளே, நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார். ஏனெனில், "விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே'' என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், "உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக'' என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன. அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 18:15-20
   அக்காலத்தில் இயேசு சீடர்களிடம் கூறியது: "உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் 'இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவி சாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும். மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."

Friday, August 26, 2011

ஆகஸ்ட் 28, 2011

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எரேமியா 20:7-9
   ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன்; நீர் என்னைவிட வல்லமையுடையவர்; என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்; நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். நான் பேசும்போதெல்லாம் `வன்முறை அழிவு' என்றே கத்த வேண்டியுள்ளது; ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது. "அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்'' என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.
இரண்டாம் வாசகம்: உரோமையர் 12:1-2
   சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
நற்செய்தி வாசகம்: மத்தேயு 16:21-27
   அக்காலத்தில், இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டு, "ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்றார். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவைபற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்றார். பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக் கேற்பக் கைம்மாறு அளிப்பார்'' என்றார்.

Friday, August 19, 2011

ஆகஸ்ட் 21, 2011

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 22:19-23
   ஆண்டவர் கூறுவது இதுவே: உன்னை உன் பதவியிலிருந்து இறக்கிவிடுவேன்; உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன். அந்நாளில் இலக்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான். அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின் மேல் வைப்பேன். அவன் திறப்பான்: எவனும் பூட்டமாட்டான். அவன் பூட்டுவான்: எவனும் திறக்கமாட்டான். உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்: அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்.
இரண்டாம் வாசகம்: உரோமையர் 11:33-36
   சகோதர சகோதரிகளே, கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்? அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 16:13-20
 
   அக்காலத்தில், இயேசு பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, 'மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' என்று கேட்டார். அதற்கு அவர்கள், 'சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்' என்றார்கள். 'ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என்று உரைத்தார். அதற்கு இயேசு, 'யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்த வில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்' என்றார். பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.