Friday, August 26, 2011

ஆகஸ்ட் 28, 2011

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எரேமியா 20:7-9
   ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன்; நீர் என்னைவிட வல்லமையுடையவர்; என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்; நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். நான் பேசும்போதெல்லாம் `வன்முறை அழிவு' என்றே கத்த வேண்டியுள்ளது; ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது. "அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்'' என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.
இரண்டாம் வாசகம்: உரோமையர் 12:1-2
   சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
நற்செய்தி வாசகம்: மத்தேயு 16:21-27
   அக்காலத்தில், இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டு, "ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்றார். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவைபற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்றார். பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக் கேற்பக் கைம்மாறு அளிப்பார்'' என்றார்.

Friday, August 19, 2011

ஆகஸ்ட் 21, 2011

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 22:19-23
   ஆண்டவர் கூறுவது இதுவே: உன்னை உன் பதவியிலிருந்து இறக்கிவிடுவேன்; உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன். அந்நாளில் இலக்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான். அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின் மேல் வைப்பேன். அவன் திறப்பான்: எவனும் பூட்டமாட்டான். அவன் பூட்டுவான்: எவனும் திறக்கமாட்டான். உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்: அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்.
இரண்டாம் வாசகம்: உரோமையர் 11:33-36
   சகோதர சகோதரிகளே, கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்? அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 16:13-20
 
   அக்காலத்தில், இயேசு பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, 'மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' என்று கேட்டார். அதற்கு அவர்கள், 'சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்' என்றார்கள். 'ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என்று உரைத்தார். அதற்கு இயேசு, 'யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்த வில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்' என்றார். பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.

Friday, August 12, 2011

ஆகஸ்ட் 14, 2011

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 56:1,6-7
   ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள்; நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்துவருவேன்: இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு.
இரண்டாம் வாசகம்: உரோமையர் 11:13-15,29-32
   சகோதர சகோதரிகளே,  பிற இனத்தாராகிய உங்களுக்குச் சொல்கிறேன்: உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமை கொள்கிறேன். இதன் வழியாய், என் இனத்தாருள் பொறாமையைத் தூண்டிவிட்டு அவர்களுள் சிலரையேனும் மீட்கமுடியும் என நம்புகிறேன். யூதர்கள் தள்ளப்பட்டபோதே உலகம் கடவுளோடு ஒப்புரவாகியது என்றால், அவர்கள் அவரால் ஏற்றுக்கொள்ளப்படும்போது எப்படி இருக்கும்! இறந்தோர் உயிர்பெற்று எழுவர் என்று சொல்லலாம் அல்லவா? ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை. ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். அதுபோல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்குரியவர்களாக இருக்கிறீர்கள்; அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்: ஆனால் அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக் கொள்வார்கள்: அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது. ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 15:21-28
   அக்காலத்தில், இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, 'ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்' எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, 'நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்' என வேண்டினர். அவரோ மறுமொழியாக, 'இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்' என்றார். ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, 'ஐயா, எனக்கு உதவியருளும்' என்றார். அவர் மறுமொழியாக, 'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல' என்றார். உடனே அப்பெண், 'ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே' என்றார். இயேசு மறுமொழியாக, 'அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்' என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

Saturday, August 6, 2011

ஆகஸ்ட் 7, 2011

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு

முதல் வாசகம்: 1 அரசர்கள் 19:9,11-13
   அந்நாட்களில் எலியா ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தபின், அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவர், வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கிறேன் என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்? என்று ஒரு குரல் கேட்டது.
இரண்டாம் வாசகம்: உரோமையர் 9:1-5
   சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவைச் சார்ந்த நான் சொல்வது உண்மை, பொய்யல்ல. தூய ஆவியால் தூண்டப்படும் என் மனச்சான்றே நான் சொல்வதற்குச் சாட்சி. உள்ளத்தில் உனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு. என் சொந்த இனத்தைச் சேர்ந்த என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன். அவர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்: அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. குலமுதல்வர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்: மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். இவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள்; என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 14:22-33
   அக்காலத்தில், இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார். மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது. இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, 'ஐயோ, பேய்' என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். 'துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்' என்றார். பேதுரு அவருக்கு மறுமொழியாக, 'ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்' என்றார். அவர், 'வா' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்' என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, 'நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?' என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, 'உண்மையாகவே நீர் இறைமகன்' என்றனர்.