Friday, August 12, 2011

ஆகஸ்ட் 14, 2011

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 56:1,6-7
   ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள்; நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்துவருவேன்: இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு.
இரண்டாம் வாசகம்: உரோமையர் 11:13-15,29-32
   சகோதர சகோதரிகளே,  பிற இனத்தாராகிய உங்களுக்குச் சொல்கிறேன்: உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமை கொள்கிறேன். இதன் வழியாய், என் இனத்தாருள் பொறாமையைத் தூண்டிவிட்டு அவர்களுள் சிலரையேனும் மீட்கமுடியும் என நம்புகிறேன். யூதர்கள் தள்ளப்பட்டபோதே உலகம் கடவுளோடு ஒப்புரவாகியது என்றால், அவர்கள் அவரால் ஏற்றுக்கொள்ளப்படும்போது எப்படி இருக்கும்! இறந்தோர் உயிர்பெற்று எழுவர் என்று சொல்லலாம் அல்லவா? ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை. ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். அதுபோல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்குரியவர்களாக இருக்கிறீர்கள்; அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்: ஆனால் அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக் கொள்வார்கள்: அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது. ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 15:21-28
   அக்காலத்தில், இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, 'ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்' எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, 'நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்' என வேண்டினர். அவரோ மறுமொழியாக, 'இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்' என்றார். ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, 'ஐயா, எனக்கு உதவியருளும்' என்றார். அவர் மறுமொழியாக, 'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல' என்றார். உடனே அப்பெண், 'ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே' என்றார். இயேசு மறுமொழியாக, 'அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்' என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.