Saturday, September 27, 2014

செப்டம்பர் 28, 2014

பொதுக்காலம் 26-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசேக்கியேல் 18:25-28
   ஆண்டவர் கூறுவது: 'தலைவரின் வழி செம்மையானதாக இல்லை' என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை! நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 25:4-5.6-7.8-9
பல்லவி: ஆண்டவரே, உம் இரக்கத்தையும், பேரன்பையும் நினைந்தருளும்.
   ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுவதும் நம்பியிருக் கின்றேன். (பல்லவி)
   ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். (பல்லவி)
   ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 2:1-11
   சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பி னால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள் ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மை யோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்க ளைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டி ருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடி மையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

வாழ்த்தொலி: யோவான் 10:27
   அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக் கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: மத்தேயு 21:28-32
   அக்காலத்தில் இயேசு கூறியது: "இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கி றீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், 'மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்' என்றார். அவர் மறுமொழியாக, 'நான் போக விரும்பவில்லை' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, 'நான் போகிறேன் ஐயா!' என்றார்; ஆனால் போக வில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?'' என்று கேட் டார். அவர்கள் "மூத்தவரே'' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், "வரிதண்டு வோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங் களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமக ளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை; அவரை நம்பவும் இல்லை'' என்றார்.

Saturday, September 20, 2014

செப்டம்பர் 21, 2014

பொதுக்காலம் 25-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 55:6-9
   ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ள போதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மை யில் இருக்கும் போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையை யும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர்அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட் டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண் ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறை களைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 145:2-3.8-9.17-18
பல்லவி: தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
   நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறி வுக்கு எட்டாதது. (பல்லவி)
   ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத் தின் மீதும் இரக்கம் காட்டுபவர். (பல்லவி)
   ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 1:20-24,27
   சகோதர சகோதரிகளே, வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே என் எதிர்நோக்கு. ஏனெ னில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்து கொள்வதென எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி நிலையில் உள்ளேன். உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்கவேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம். - இதுவே மிகச் சிறந்தது. - ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம். - இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது. ஒன்றை மட் டும் மறந்து விடாதீர்கள்; கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுங்கள்.

வாழ்த்தொலி: திருத்தூதர் பணிகள் 16:14
   அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத் தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: மத்தேயு 20:1-16
   அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறிய உவமை: "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், 'நீங்க ளும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்' என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். ஏறக் குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், 'நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, 'எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை' என்றார்கள். அவர் அவர்களிடம், 'நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்' என்றார். மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், 'வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர் வரை அவர்களுக்குரிய கூலி கொடும்' என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்ட போது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, 'கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய் தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்க ளோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே' என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவ ரைப் பார்த்து, 'தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?' என்றார். இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்'' என்று இயேசு கூறினார்.

Saturday, September 13, 2014

செப்டம்பர் 14, 2014

திருச்சிலுவையின் மகிமை விழா

முதல் வாசகம்: எண்ணிக்கை 21:4-9
   அந்நாள்களில் ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து இஸ்ர யேல் மக்கள் 'செங்கடல் சாலை' வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமை இழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: "இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்து போய்விட்டது'' என்றனர். உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, "நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றிவிடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்ளும்'' என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், "கொள்ளிவாய்ப் பாம்பு ஒன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்'' என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத் தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 78:1-2.34-35.36-37.38
பல்லவி: இறைவனின் செயல்களை மறவாதிருங்கள்.
   என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; என் வாய்மொழிகளுக்குச் செவி கொடுங்கள். நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைச் செய்திகளை எடுத்துரைப்பேன். (பல்லவி)
   அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக் கருத் தாய் நாடினர். கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர். (பல்லவி)
   ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்; தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள். அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதி யாய் இல்லை; அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை. (பல்லவி)
   அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்; அவர்களை அழித்து விடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை. (பல்லவி)

இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 2: 6-11
   சகோதர சகோதரிகளே, கடவுள் வடிவில் விளங்கிய இயேசு, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

வாழ்த்தொலி:
   அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே, உம்மை ஆராதித்து வாழ்த்துகின்றோம்; ஏனெனில், உம் சிலுவையாலே உலகை மீட்டீரே. அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: யோவான் 3:13-17
   அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறு வர். தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.''

Saturday, September 6, 2014

செப்டம்பர் 7, 2014

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசேக்கியேல் 20:7-9 
   ஆண்டவர் கூறியது: மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும் போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்க வேண்டும். தீயோரிடம் நான், 'ஓ தீயோரே! நீங்கள் உறுதி யாகச் சாவீர்கள்' என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர் களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்; ஆனால், அவர்களது இரத் தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன். ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 95:1-2.6-7.8-9
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
   வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். (பல்லவி)
   வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! (பல்லவி)
   அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தை கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: உரோமையர் 13:8-10
   சகோதர சகோதரிகளே, நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொரு வர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரி டத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார். ஏனெனில், "விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும் பாதே'' என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், "உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக'' என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன. அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.

வாழ்த்தொலி: 2 கொரிந்தியர் 5:19
   அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் உலகினரைக் கிறிஸ்துவின் வாயிலாகத் தம் மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: மத்தேயு 18:15-20
   அக்காலத்தில் இயேசு சீடர்களிடம் கூறியது: "உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் 'இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்கு மூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்க ளோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்கா விடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்க ளுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும். மண்ணுல கில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண் ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.''

Wednesday, September 3, 2014

செப்டம்பர் 7, 2014

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன் போடு வரவேற்கிறோம். பிறரது குற்றங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களை நல்வழிப்படுத்த இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமக்கு எதிராக ஒருவர் குற்றம் செய்தால், அவருடன் தனியாக இருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுமாறு இயேசு கூறுகிறார். கிறிஸ்தவர்கள் இடையே எழும் பிரச்சனைகளை திருச்சபைக்குள்ளே தீர்த்துக்கொள்ள வேண்டுமென நமக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நற்காரி யத்துக்காக இருவர் மனமொத்து வேண்டினால், கடவுள் நமக்கு தருவார் என்ற உறுதியை இன்றைய நற்செய்தி தருகிறது. கிறிஸ்து இயேசுவின் பெயரால் ஒன்றிணைந்து ஆண்ட வரின் மாட்சியைக் காண வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், தீமை செய்வோரை எச்சரிக்கை செய்யுமாறு இறைவாக் கினர் எசேக்கியேலை ஆண்டவர் பணிக்கிறார். ஆண்டவரின் வாக்கை கேட்கும் போதெல் லாம் தீயோரை எச்சரிக்குமாறு அவருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. ஆண்டவரின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், தீயோரின் இரத்தப்பழி எசேக்கியேல் மீது விழும் எனவும் எச்சரிக்கப்படுவதை காண்கிறோம். தீயவர்களை ஆண்டவரின் பெயரால் எச்ச ரித்து திருத்தும் வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நன்மைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், தீமையை விடுத்து அன்பு செலுத் துவதில் கருத்தாய் இருக்குமாறு அழைப்பு விடுக்கிறார். "உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!" என்ற பிறரன்பு கட்டளையில் நிலைத் திருக்குமாறு அறிவுறுத்துகிறார். அன்பினால் நன்மைக்குரிய செயல்களை ஊக்குவிக்க நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் வழியில், தீமைக்குரிய சோதனைகளை வெற் றிகொள்ள வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நல்லாயராம் இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தீய வழியில் செல் லும் மக்களை எச்சரித்து நல்வழியில் நடத்துவர்களாய் திகழ வரம் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. நல்லரசராம் இறைவா,
   உலக நாடுகளை வழிநடத்தும் தலைவர்கள், மக்களிடையே ஒற்றுமையை உருவாக் கவும், பிறநாடுகளுடன் நல்லுறவை வளத்துக்கொள்ளவும் துணை புரியுமாறு
உம்மை மன்றாடுகிறோம்.
3. நற்றலைவராம் இறைவா,
   எம் நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்கள் சமய சுதந்திரத்தை மதிக்கவும், மக்களி டையே பிரிவினை மற்றும் கலவரம் ஏற்படாமல் தடுக்கவும் உதவி செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. நன்மருத்துவராம் இறைவா,
   உலகெங்கும் நிகழும் போர்கள், வன்முறைகள், அடக்குமுறைகள் போன்ற தீமைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும்
உமது பாதுகாப்பினை வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. தந்தையாம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தீமையை அகற்றி தூயவர்களாக வாழவும், உ
ம் திருமகனின் பெயரால் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.