Saturday, November 8, 2014

நவம்பர் 9, 2014

லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா

முதல் வாசகம்: எசேக்கியேல் 47:1-2,8-9,12
   அந்நாள்களில் ஒரு மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழி யாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென் றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது. அவர் என்னி டம் உரைத்தது: "இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயும் இடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும். பல வகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்."
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 46:1-2,3.4-5.7-8
பல்லவி: ஆற்றின் கால்வாய்கள் ஆண்டவரின் நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.
   கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. ஆகையால், நிலவுலகம் நிலை குலைந்தாலும், மலை கள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், எங்களுக்கு அச்சம் என்பதே இல்லை. (பல்லவி)
   ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒரு போதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. (பல்லவி)
   படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 3:9-11,16-17
   சகோதர சகோதரிகளே, நீங்கள் கடவுள் எழுப்பும் கட்டடம். கடவுள் எனக்கு அளித்த அருளின் படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன் மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது. நீங்கள் கடவுளு டைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்க ளுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்து விடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.

வாழ்த்தொலி: 2 குறிப்பேடு 7:16
   அல்லேலூயா, அல்லேலூயா! "எனது பெயர் என்றென்றும் போற்றப்படுமாறு இக் கோவிலை நான் தெரிந்தெடுத்துத் திருநிலைப்படுத்தியுள்ளேன்" என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: யோவான் 2:13-22
   அக்காலத்தில் யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருச லேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்தி ருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட் டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு, மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், "இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல் லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்'' என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள், "உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்து விடும்'' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவுகூர்ந்தார்கள். யூதர்கள் அவரைப் பார்த்து, "இவற் றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், "இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்'' என்றார். அப்போது யூதர்கள், "இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?'' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3