Saturday, April 6, 2013

ஏப்ரல் 7, 2013

பாஸ்கா காலம் 2-ம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 5:12-16
   அந்நாள்களில் மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத் தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவ ராய் கூடி வந்தனர். மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை. ஆயினும் மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர். ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள். பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோ ரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டு வந்து வீதிகளில் வைத் தார்கள்; எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர் கள் அனைவரும் நலம் பெற்றனர்.
இரண்டாம் வாசகம்: திருவெளிப்பாடு 1:9-13,17-19
    உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தூயஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும்குரல் ஒன்று எக்காளம்போல முழங்கக் கேட்டேன். நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி, ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை என்று அக்குரல் கூறியது. என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன். அப் பொழுது ஏழு பொன் விளக்குத்தண்டுகளைக் கண்டேன். அவற்றின் நடுவே மானிடமக னைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார். நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என் மீது வைத்துச் சொன்னது: "அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு. எனவே நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழவிருப்பவற்றை யும் எழுதிவை."

நற்செய்தி வாசகம்: யோவான் 20:19-31
  அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள் மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர் களோ, அவை மன்னிக்கப்படா" என்றார். பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்ட வரைக் கண்டோம்" என்றார்கள். தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணி களால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்க ளோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமா விடம், "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார். தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார். இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார்.  வேறு பல அரும் அடையா ளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந் நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற் காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, April 4, 2013

ஏப்ரல் 7, 2013

பாஸ்கா காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
அன்புக்குரியவர்களே,
   பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருவழிபாட்டுக்கு நம் ஆண்டவர் பெயரால் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். நாம் இன்று இறை இரக்கத்தின் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இறைமகன் இயேசு இந்த நாளில்தான் திருத்தூதர்கள் வழி யாக, திருச்சபைக்கு பாவமன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை வழங்கினார். இறைவனின் இருப்பை கேள்வி கேட்கும் அளவுக்கு சந்தேகம் கொண்டிருந்தாலும், அவர் நம் மீது இரக்கம் கொண்டு அவரது உடனிருப்பை உணர்த்துகிறார் என்பதை புரிந்துகொள்ள இன் றைய நற்செய்தி அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பை காணாமலே நம்பவும், அவருக்கு சான்று பகரவும் அழைக்கப்பட்டுள்ள நாம் விசுவாசத்தில் வளர வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய முதல் வாசகம், கிறிஸ்துவின் திருத்தூதர்கள் வழியாக நிகழ்ந்த அருஞ் செயல்களைப் பற்றி எடுத்துரைக்கிறது. திருத்தூதர்கள் செய்த அற்புதங்களால் ஏராளமான ஆண்களும் பெண்களும் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு, இயேசுவின் சீடர்களானதை நாம் காண்கிறோம். திருத்தூதர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையால், பேதுருவின் நிழல் பட்டவர்கள் கூட நலமடைந்த நிகழ்வு, நாம் கடவுள் மீதும் அவரது பணியாளர்கள் மீதும் எந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க அழைக்கிறது. நாமும் ஆண்டவரில் முழு நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், மானிட மகனின் மாட்சியைப் பற்றிய யோவானின் சான்றை எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவின் ஆட்சியுரிமையில் பங்குபெறும் பொருட்டு அவரது வேதனைகளில் பங்கு பெற்றவராக யோவான் தன்னை சுட்டிக்காட்டுகிறார். நாமும் கிறிஸ்துவோடு இணைந்து வாழ அழைப்பு விடுக்கிறார். எப்பொழுதும் வாழ்பவ ரும், சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரம் கொண்டிருப்பவருமான ஆண்டவரில் நம்பிக்கை கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். என்றென்றும் வாழும் கிறிஸ்து இயேசு வுக்கு சான்று பகரும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நம்பிக்கையின் நாயகராம் இறைவா,
   உம் திருமகன் இயேசுவின் உயிர்ப்பு மறைபொருளின் மீது கட்டி எழுப்பப்பட்டுள்ள திருச் சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலை யினர் அனைவரும் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருந்து, உலகின் முன்னிலையில் உமது சாட்சிகளாக திகழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் அரசராம் இறைவா,
  
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், உலகப் போக்கில் இறுதி விலகி நிறை உண்மை யாக விளங்கும் உம்மை நாடித் தேடவும், உம் திருமகனின் உயிர்ப்பில் முழுமையான நம்பிக்கை கொண்டவர்களாக, இறையன்பிலும் பிறரன்பிலும் வளர துணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மையின் நிறைவாம் இறைவா,
  உண்மையின் ஒளியை ஏற்க மனமின்றி, இருளில் வாழும் எம் நாட்டு மக்கள் அனைவ ரும், உம் திருமகனின் உயிர்ப்பில் உள்ள உண்மையை அறிந்துணர்ந்து, அதன் வழியாக நீர் மக்களுக்கு ஏற்பாடு செய்துள்ள மீட்பை பெற்றுக்கொள்ளவும் தேவையான அகத்தூண் டுதலை அளிக்க
வேண்டுமென்று  உம்மை மன்றாடுகிறோம்.
4. புதுவாழ்வின் ஊற்றாம் இறைவா,
  இலங்கையில் வாழும் எம் தமிழ் சொந்தங்கள் அனுபவிக்கும் வேதனைகளை பரிவுடன் கண்ணோக்கி, அவர்கள் துன்பங்கள் நீங்கவும், உரிமை வாழ்வு பெறவும், உமது மீட்ப ளிக்கும் அருளைக் கண்டுணரவும் உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. நன்மைகளின் உறைவிடமாம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது அருஞ்செயல் களால் நிறைவு பெறவும், காணாமல் விசுவசித்து உமக்கு சான்று பகர்வதன் பலனாக மகிழ்ச்சி நிறைந்த விண்ணக வாழ்வைப் பெற்றுக்கொள்ளவும்
அருள்பொழிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.