Wednesday, November 28, 2012

டிசம்பர் 2, 2012

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
மேன்மைக்குரியவர்களே,
   திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்பு டன் அழைக்கிறோம். புதிய திருவழிபாட்டு ஆண்டின் முதல் நாளாகிய இன்று, ஆண்டவ ரின் இரண்டாம் வருகையைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். மண்ணுலகில் நிலவும் குழப்பமும், விண்வெளியில் தோன்றும் அடையாளங்களும் ஆண்டவரின் வரு கையை முன்னறிவிக்கும் என இயேசு முன்னறிவித்துள்ளார். நமது மீட்புக்காக நாம் எப் பொழுதும் தயாராக இருக்க வேண்டுமென இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழித்தி ருந்து மன்றாடுபவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
மேன்மைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம் தாவீதின் குலத்தில் தோன்றும் நீதியின் தளிரைப் பற்றிய அறிவிப்பைத் தருகிறது. இறைவாக்கினர் எரேமியா முன்னறிவிக்கும் இந்த நீதியின் தளிர் இயேசு கிறிஸ்துவே. அனைத்துலக அரசரான அவர், உலகில் நீதியையும் அமைதியை யும் நிலைநாட்டுவார் என்று எரேமியா வழியாக ஆண்டவர் எடுத்துரைக்கிறார். வாழும் ஆண்டவரிடமே நாம் பாதுகாப்பு தேட வேண்டும் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவுக்கு உகந்த வகையில் நீதியுள்ளவர்களாய் வாழ வரம் கேட்டு, இந்த வாசகத் துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
மேன்மைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம் கிறிஸ்துவின் அன்பில் நாம் வளர வேண்டும் என்ற திருத்தூர் பவுலின் ஆவலை வெளிப்படுத்துகிறது. நம் ஆண்டவர் மீண்டும் வரும்போது, அவர் முன்னிலையில் குற்றமற்றவர்களாக நிற்கும் பொருட்டு தூய உள்ளம் கொண்டவர் களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். திருத்தூதர்களிடம் இருந்து திருச்சபை கற்றுக் கொண்ட புனிதம் நிறைந்த வாழ்க்கை முறையில் முன்னேற பவுல் நம்மை அழைக்கி றார். கிறிஸ்துவின் வருகைக்கு நம்மைத் தயார் செய்பவர்களாய் வாழ வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. புனிதம் நிறைந்தவராம் இறைவா, 
   உமது திருமகனின் வருகைக்காக இந்த உலகைத் தயார் செய்பவர்களாக திகழும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் நிறை வாகப் பொழிந்து, புனிதத்தில் வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வல்லமை நிறைந்தவராம் இறைவா,
   நீரே படைப்புகள் அனைத்தின் உண்மையான அரசர் என்பதை உணர்ந்தவர்களாய், உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும், மக்களுக்கு தொண்டு செய்பவர்களாக தூய வாழ்வு வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மகிமை நிறைந்தவராம் இறைவா,
 
உமது மாட்சிக்கு எதிரான சிலை வழிபாடுகள் அனைத்தும் எம் நாட்டு மக்கள் நடுவில் இருந்து ஒழியவும், உண்மை இறைவனாகிய உம்மை அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வம் கொள்ளவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கம் நிறைந்தவராம் இறைவா,
    அன்பு, அமைதி, நீதி, உண்மை, உடல்நலம் ஆகியவற்றுக்காக ஏங்கித் தவிக்கும் உள் ளங்களில், உமது இரக்கத்தால் ஆறுதல் அளித்து, மகிழ்ச்சி நிறைந்த வாழ்வைக் காணச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மேன்மை நிறைந்தவராம் இறைவா,
   உம் திருமகனின் வருகைக்காக எப்பொழுதும் விழித்திருந்து மன்றாடுபவர்களாய் வாழும் வரத்தை, எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவ ருக்கும் வழங்கி, உடல், உள்ள, ஆன்ம சுகத்தோடு பாதுகாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, November 23, 2012

நவம்பர் 25, 2012

கிறிஸ்து அரசர் பெருவிழா

முதல் வாசகம்: தானியேல் 7:13-14
   அந்நாள்களில் இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றும் உளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது.
இரண்டாம் வாசகம்: திருவெளிப்பாடு 1:5-8
   கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயி லாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதா வது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத் தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென். இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தி யோரும் காண்பர்; அவர் பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்! "அகரமும் னகரமும் நானே'' என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.

நற்செய்தி வாசகம்: யோவான் 18:33-37
   அக்காலத்தில் பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப் பிட்டு அவரிடம், "நீ யூதரின் அரசனா?'' என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, "நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?'' என்று கேட்டார். அதற்குப் பிலாத்து, "நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும்தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?'' என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர் களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல'' என்றார். பிலாத்து அவரிடம், "அப்படியா னால் நீ அரசன்தானோ?'' என்று கேட்டான். அதற்கு இயேசு, "அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க் கின்றனர்'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, November 21, 2012

நவம்பர் 25, 2012

கிறிஸ்து அரசர் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
இறையரசுக்குரியவர்களே,
   கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரையும் அன் புடன் அழைக்கிறோம். என்றென்றும் ஆட்சி செய்பவரான நம் ஆண்டவர் இயேசுவின் அரசத் தன்மையைப் பற்றி சிந்திக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. அனைத்துலகின் அரசரான நம் ஆண்டவர், ஆளுநன் பிலாத்து முன்னிலையில் ஒரு கைதியாக நிற்பதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. உண்மையை வெளிப்படுத் தவே இறைமகனாகிய இயேசு, மானிடமகன் ஆனார். அவருடைய வருகைக்காக இந்த உலகைத் தயாரிக்கும் பணி ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் உண்டு என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். நம் ஆண்டவரும் அரசருமான இயேசுவைப் பற்றிய உண்மைக்கு சான்று பகர்பவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறையரசுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம் நமக்காக மனித உடலேற்ற இறைமகனின் விண்ணக மகிமை யைப் பற்றி எடுத்துரைக்கிறது. தந்தையாம் இறைவன் அவருக்கு ஆட்சியுரிமையும் அர சும் மாட்சியும் வழங்கி இருக்கிறார். உலகின் எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழி யினரும் அவரைப் பணிந்து வணங்க வேண்டும் என்பதே தந்தையாம் இறைவனின் திரு வுளம். என்றுமுள கிறிஸ்துவின் முடிவற்ற அரசில் பங்குபெற வரம் கேட்டு, இந்த வாச கத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறையரசுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம் கிறிஸ்து அரசரின் வருகையைப் பற்றி எடுத்துரைக் கிறது. நம் ஆண்டவர் இயேசு மண்ணுலக அரசர்களுக்கெல்லாம் மேலான அரசர் என்பது இங்கு தெளிவாக கூறப்படுகிறது. இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரு மான அவரே அனைத்துக்கும் தொடக்கமும் முடிவுமாக இருக்கிறார். நமது அரசராம் கிறிஸ்துவில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாக வாழ வரம் கேட்டு, இந்த வாச கத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. திருச்சபையின் அரசராம் இறைவா, 
   உமது முடிவில்லா அரசை உலகெங்கும் நிறுவும் உள்ளார்வத்தோடு, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், நற்செய்தியின் தூதுவர்களாக வாழும்  வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அரசர்களின் அரசராம் இறைவா,
   நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் அனைவரும், உமது அரசை உலகில் கட்டி யெழுப்பவும், மக்கள் அன்பிலும் ஒற்றுமையிலும் வளர்க்கவும் உழைக்க
த் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மாட்சியின் மன்னராம் இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும் உம் திருமகனின் மேலான ஆட்சியை விரும்பித் தேட வும், உண்மையின் நற்செய்தியை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மகிழ்ச்சியின் மன்னராம் இறைவா,
   உலகத்தின் மாயச் சூழலில் சிக்கி, பொய்மையை வாழ்வின் ஆதாரமாக கொண்டு வாழும் மக்கள் அனைவரும், உமது உண்மையின் அரசை விரும்பித் தேடி முடிவில்லா மகிழ்ச்சியில் நிலைத்திருக்க
உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வெற்றி வேந்தராம் இறைவா,
   தொடக்கமும் முடிவுமாக இருக்கும் உமது அரசத் திருவிருந்தில் பங்குபெற்று என் றென்றும் மகிழ்ந்திருக்குமாறு எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனை வருக்கும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, November 16, 2012

நவம்பர் 18, 2012

பொதுக்காலம் 33-ம் ஞாயிறு

முதல் வாசகம்: தானியேல் 12:1-3
   "அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக் காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள் ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்கு கிற அனைவருள் பலர் விழித்தெழுவர்; அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத் தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.''
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 10:11-14,18
   சகோதர சகோதரிகளே,  ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒரு போதும் போக்க இயலாதவை. ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென் றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்துள்ளார். அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார். தாம் தூயவராக்கிய வர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார். எனவே பாவ மன்னிப்பு கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமே இல்லை.

நற்செய்தி வாசகம்: மாற்கு 13:24-32
   அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்; நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமை யோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுல கில் மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட் டிச் சேர்ப்பார். அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக் காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிட மகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். இவை யனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக் குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழி யவேமாட்டா. ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது."

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, November 14, 2012

நவம்பர் 18, 2012

பொதுக்காலம் 33-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
தூய்மைக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் முப்பத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நம்மைத் தயார் செய்ய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவர் அரசருக்குரிய மாட்சியுடன் நமக்கு தீர்ப்பிட வரும் நாளில் நிகழப்போகின் றவை பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் வருகைக்காக நாம் எப்பொழும் தயாராக இருக்க வேண்டுமென இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன. கிறிஸ்து இயேசுவின் பலியால் தூயவர்களாக மாற்றப்பட்டிருக்கும் நாம், தொடர்ந்து அவருக்கு உகந்தவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
தூய்மைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம் ஆண்டவரின் இரண்டாம் வருகை நாளைப் பற்றிய அறிவிப் பைத் தருகிறது. வருகைக்கு முந்திய நாட்கள் துன்ப காலமாக இருக்கும். அந்நாட்களில், இறந்துபோய் மண்புழுதியில் உறங்குவோர் விழித்தெழுவர் என்ற உண்மை தெளிவுபடுத் தப்படுகிறது. அதன் பிறகு நமது செயல்களுக்கு ஏற்ப, முடிவில்லா வாழ்வுக்கோ, நிலை யான இழிவுக்கோ நாம் தீர்ப்பிடப்படுவோம் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். தூய வாழ்வு வாழ்ந்து, முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ வரம் கேட்டு, இந்த வாச கத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
தூய்மைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம் நாம் பாவ வாழ்வில் இருந்து விடுபடுமாறு, கிறிஸ்து இயேசு தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தார். தந்தையாம் கடவுளின் வலது பக்கத்தில் வீற்றிருக்கும் அவர், தமது பகைவர்களை கால்மணை ஆக்கும் நாளுக்காக காத்திருக் கிறார். தூயவரான கிறிஸ்துவின் ஒரே பலியால் நாம் என்றென்றும் நிறைவுள்ளவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம் என்பது எடுத்துரைக்கப்படுகிறது. நாம் தூயவர்களாக மாறும் வகையில், நமது பாவங்களுக்காக மனம் வருந்தும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. தூயவராம் இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது திருமகனின் இரண்டாம் வருகைக்கு மக்களைத் தயார் செய்பவர்களாகவும், உமக்கு உகந்த தூய வாழ்வு வாழ்பவர்களாகவும் திகழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மாட்சி மிகுந்தவராம் இறைவா,
   உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் ஒவ்வொருவரும், உமது மேலான ஆட் சியை நாடவும், உமது நீதியின் தீர்ப்புக்கு ஆளாக வேண்டியவர்கள் என்பதை உணர்ந்து வாழவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மேன்மை நிறைந்தவராம் இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும் உம் திருமகனைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள் ளவும், அனைத்துக்கும் மேலாக உமது நீதியின் அரசை விரும்பித் தேடவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மகிழ்ச்சி தருபவராம் இறைவா,
   பாவம் என்னும் நோயால் 
உலகில் நிலவும் அன்பின்மை, ஆதரவின்மை, நம்பிக்கை யின்மை, உதவியின்மை போன்றவை அகன்று, மக்கள் அனைவரும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வைக் காணச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வாழ்வு அளிப்பவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமக்கு உண்மை உள்ளவர்களாக வாழ்ந்து நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள வரம் தர வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, November 9, 2012

நவம்பர் 11, 2012

பொதுக்காலம் 32-ம் ஞாயிறு

முதல் வாசகம்: 1 அரசர்கள் 17:10-16 
   அந்நாள்களில் எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்தபொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, "ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா" என்றார். அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, "எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?" என்றார். அவர், "வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன்பின் சாகத்தான் வேண்டும்" என்றார். எலியா அவரிடம், "அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது" என்று சொன்னார். அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர். எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை; கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 9:24-28
   சகோதர சகோதரிகளே,  கிறிஸ்து, மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பார் என்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்க வேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார். மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 12:38-44
   அக்காலத்தில் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, "மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்; தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே'' என்று கூறினார். இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்து கொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, ``இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்'' என்று அவர்களிடம் கூறினார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Friday, November 2, 2012

நவம்பர் 4, 2012

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு

முதல் வாசகம்: இணைச்சட்டம் 6:2-6 
   மோசே மக்களை நோக்கிக் கூறியது: "நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ்நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள். இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்து வழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய். இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்."
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 7:23-28
   சகோதர சகோதரிகளே,  லேவியர் குலத்தைச் சார்ந்த குருக்கள் சாவுக்கு ஆளானவர்களாய் இருந்ததால் தம் பணியில் நிலைத்திருக்க முடியவில்லை. வேறு பலர் தொடர்ந்து குருக்களாயினர். இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார். ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராய் இருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார். இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர். ஏனைய தலைமைக் குருக்கள் செய்வதுபோல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும், பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒரு முறைக்குள் செய்து முடித்தார். திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப் படுகிறார்கள். ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 12:28-34
   அக்காலத்தில் மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?'' என்று கேட்டார். அதற்கு இயேசு, "'இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக' என்பது முதன்மையான கட்டளை. 'உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை'' என்றார். அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், "நன்று போதகரே, 'கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை' என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடமும் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது'' என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், "நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை'' என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3