Saturday, June 28, 2014

ஜூன் 29, 2014

புனித பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழா

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 12:1-11
   அந்நாள்களில் ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்ப விழா நாள்களில் நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப் பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரிக்க லாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது. ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, "உடனே எழுந்திடும்" என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன. வானதூதர் அவரிடம், "இடைக்கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக்கொள்ளும்'' என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர் அவரிடம், "உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்" என்றார். பேதுரு வானதூதரைப் பின்தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரை விட்டு அகன்றார். பேதுரு தன் னுணர்வு பெற்றபோது, "ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்" என்றார்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 34:1-2.3-4.5-6.7-8
பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.
   ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். (பல்லவி)
   என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன் மைப்படுத்துவோம். துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறு மொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். (பல்லவி)
   அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத் திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். (பல்லவி)
   ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர். ஆண்ட வர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 2 திமோத்தேயு 4:6-8,17-18
   அன்பிற்குரியவரே, நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண் டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். நான் அறிவித்த செய்தி நிறை வுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

வாழ்த்தொலி: மத்தேயு 16:18
   அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லே லூயா!

நற்செய்தி வாசகம்: மத்தேயு 16:13-19
   அக்காலத்தில் இயேசு பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, "மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரே மியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்" என்றார்கள். "ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுல கில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப் பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, June 26, 2014

ஜூன் 29, 2014

புனித பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   திருத்தூதர்களான பேதுரு, பவுல் ஆகியோரின் பெருவிழா திருப்பலிக்கு உங்களை அன் போடு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். திருச்சபையின் இரு தூண்களாக விளங் கும் இந்த திருத்தூதர்கள், யூதர்களிடையிலும் பிற இனத்தார் நடுவிலும் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தவர்கள். நம் ஆண்டவர் மீது இவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையே தொடக் கத் திருச்சபையின் வளர்ச்சிக்கு உரமூட்டியது. தடைசெய்யவும் அனுமதிக்கவும் இயேசு கிறிஸ்து வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில், திருச்சபையின் முதல் தலைவராக செயல்பட்டவர் புனித பேதுரு. ஆண்டவரால் தடுதாட்கொள்ளப்பட்டு, பிற இனத்தாரின் திருத்தூதராக விளங்கியவர் புனித பவுல். கிறிஸ்துவுக்காக உயிரையே இழக்கத் துணிந்த இந்த திருத்தூதர்களைப் பின்பற்றி, இயேசுவின் சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, இத் திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே, 
     இன்றைய முதல் வாசகம், சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருத்தூதர் பேதுருவை ஆண்டவரின் தூதர் விடுவித்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. திருத்தூதர் யாக்கோபு கொலை செய்யப்பட்டது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்ட ஏரோது அரசன், திருத் தூதர் பேதுருவையும் கைது செய்கிறான். காவலில் வைக்கப்பட்டிருந்த பேதுருவுக்காக திருச்சபையின் மக்கள் கடவுளிடம் உருக்கமாக வேண்டுவதைக் காண்கிறோம். அதன் கார ணமாக, வானதூதர் ஒருவர் திருத்தூதர் பேதுருவை சிறையில் இருந்து விடுவிக்கிறார். செபத்தின் வலிமையை இங்கு காண்கிறோம். நாமும் திருச்சபையின் மேய்ப்பர்களுக்காக தொடர்ந்து செபிக்கும் வரம் வேண்டி இவ்வாசகத்துக்கு கவனமுடன் செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவருக்காக தமது வாழ்வை அர்ப்பணித்தது குறித்து எடுத்துரைக்கிறார். விசுவாசத்தைக் காத்து நிற்கும் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தமது நேரிய வாழ்வுக்காக ஆண்டவர் வெற்றி வாகை யைத் தருவார் என்றும் அவர் குறிப்பிடுகிறார். பிற இனத்தாரிடையே நற்செய்தி அறிவிக்க தமக்கு வலுவூட்டியவர் ஆண்டவரே என்பதை அவர் அறிக்கையிடுகிறார். தீங்கு அனைத் திலும் இருந்து தம்மைக் காத்து ஓட்டத்தை முடிக்க உதவிய கடவுள், மீட்பை பரிசாக அளிப்பார் என்ற உறுதியை வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவின் ஆட்சி மலர நம்மையே பலியாக்கும் வரம் வேண்டி இவ்வாசகத்துக்கு கவனமுடன் செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. துணிவைத் தருபவரே இறைவா,
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உலகின் எதிர்ப்புக ளுக்கு அஞ்சாமல் உமது நசெய்தியின் வழியை வாழ்வாக்கவும், மக்கள் முன்னிலையில் சான்று பகரவும் துணிவை
அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. ஆற்றல் அளிப்பவரே இறைவா,
   திருத்தூதர்களான பேதுரு, பவுல் ஆகியோரைப் போன்று, கிறிஸ்தவர்கள் அனைவரும் உ
ம் மீதான நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், இவ்வுலக மக்களிடையே கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழவும் ஆற்றல் அளிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. மாற்றம் தருபவரே இறைவா,
   உலகம் முழுவதும் உம் திருமகனின் திருச்சபையைத் துன்புறுத்தி அழிக்க நினைக்கும் தீயோர் அனைவரையும் மனந்திருப்பி, புனித பவுலைப் போன்று திருச்சபையின் வளர்ச்சிக் கான கருவிகளாக மாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. ஒற்றுமை அளிப்பவரே இறைவா,
   சிறுசிறு சபைகளாக பிளவுபட்டு நிற்கும் கிறிஸ்தவ சமூகங்கள் அனைத்தும், புனித பேதுரு என்ற பாறை மீது எங்கள் ஆண்டவர் இயேசு கட்டியெழுப்பிய ஒரே திருச்சபைக் குள் விரைவில் ஒன்றிணைய
உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. உண்மையின் ஊற்றே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், திருத்தூதர்களின் முன்மாதிரியான விசுவாச வாழ்வைப் பின்பற்றி உம் திருமகன் இயேசுவின் உண்மை யான சாட்சிகளாகத் திகழ
வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, June 21, 2014

ஜூன் 22, 2014

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா

முதல் வாசகம்: இணைச்சட்டம் 8:2-3,14-16
   மோசே மக்களை நோக்கிக் கூறியது: "உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன் மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப் பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார். அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதை யரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார். அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந் துவிட வேண்டாம். அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்."
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 147:12-13.14-15.19-20
பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
   எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள் ளைக்கு ஆசி வழங்குகின்றார். (பல்லவி)
  அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. (பல்லவி)
   யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறி களையும் அறிவிக்கின்றார். அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவ ருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 10:16-17
   சகோதர சகோதரிகளே, கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகு கிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனை வரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.

தொடர் பாடல்:
   சீயோனே, உன் மீட்பரைப் புகழ்வாய், கீதமும் பாடலும் இசைத்தே உந்தன் ஆயரை, தலைவரைப் புகழ்வாயே. எல்லாப் புகழும் கடந்தவர் அவரே; இயலாது உன்னால் அவ ரைப் புகழ, இயன்ற மட்டும் துணிந்திடுவாயே.
   உயிர்மிகு அப்பம் உயிர்தரும் உணவாம் போற்றுதற்குரிய இப்பேருண்மை இன்று சிந்தனைக்கு ஏற்ற பொருளே. தூய விருந்தின் பந்தியில் அன்று பன்னிரு சோதரர் கூட்ட மதற்கே கிடைத்த உணவிது; ஐயமே யில்லை.
   ஆர்ப்பரிப் புடனே இனிமையும் கலந்த நிறைபுகழ்க் கீதம் ஒலிப்பதோ டன்றி மகிழ்வும் மனதில் பெருகிடல் தகுமே. பெருஞ் சிறப்பான திருவிழா இன்றே இத்திரு விருந்தை முதன் முதலாக நிறுவிய நாளை நினைவுகூர்கின்றோம்.
   புதிய பேரரசரின் இத்திருப் பந்தியில் புதிய ஏற்பாட்டின் புதுத்தனிப் பாஸ்கா பழைய பாஸ்காவை முடிவுறச் செய்யும். புதுமை பழமையைப் போக்குதல் காணீர், உண்மை நிழலை ஓட்டுதல் காணீர் ஒளியோ இரவை ஒழித்தல் காணீர்.
   திருவிருந்ததனில் நிறைவேற்றியதைத் தம் நினைவாகச் சீடரும் செய்யக் கட்டளை தந்தார் கிறிஸ்து பெருமான். திருக் கட்டளையால் அறிவுரை பெற்று அப்பமும் இரசமும் மீட்புக்குரிய பலிப் பொருளாக அர்ச்சிக்கின்றோம்.
  அப்பம் மாறி அவர் ஊன் ஆவதும், இரசமது மாறி இரத்தமாவதும் கிறிஸ்துவர்க் கருளிய உண்மையாமே. புலனையும் அறிவையும் முற்றும் கடந்து, இயற்கை முறைமைக் கப்பால், உள்ளத்தை உறுதியோ டேற்கும் உயிர்விசு வாசம்.
  அப்பமும் இரசமும் குணங்களில் வேறாய் அவற்றின் தோற்றம் மட்டுமே யிருக்க அற்புத உட்பொருள் மறைவாய் உள்ளதே. ஊனே உணவு, இரத்தமே பானம் இருவித குணங்கள் ஒவ்வொன் றுள்ளும் கிறிஸ்து முழுவதும் உண்டெனக் கொள்வீர்.
   உண்பவர் அவரைப் பிய்ப்பதுமில்லை. உடைப்பதுமில்லை, பிரிப்பதுமில்லை. அவரை முழுதாய் உண்கின் றனரே. உண்பவர் ஒருவரோ, ஆயிரம் பேரோ, ஒருவர் உண்பதையே அனைவரும் உண்பர்; உண்பதால் என்றுமே தீர்வதுமில்லை.
   நல்லவர் உண்பர், தீயரும் உண்பர் அதனால் அவர் பெறும் பயன் வெவ்வேறாம் முன்னவர் வாழ்வார், பின்னவர் அழிவார். நல்லோர் வாழ்வார், தீயோர் அழிவார்: உணவொன்றாயினும் எத்துணை வேறாம் பயன்விளைத் திடுமெனப் பகுத்துணர் வாயே.
  அப்ப மதனைப் பிட்ட பின்னரும் முழுமையில் எதுவோ அதுவே பகுதியில் உளதாம், அறிந்திடு, ஐயமே வேண்டா. உட்பொருள் பிளவு படுவதே யில்லை; குணத்தில் மட்டும் பிடப்படுமே அவரது நிலையும் உருவும் குறையா.
   வானவர் உணவிதோ வழிநடப் போர்க்கும் உணவா யிற்றே; மக்களின் உணவை நாய்கட் கெறிதல் நலமா காதே. ஈசாக் பலியிலும் பாஸ்கா மறியிலும் நம் முன்னோர்க்குத் தந்த மன்னாவிலும் இந்தப் பலியின் முன்குறி காண்பீர்.
   நல்ல ஆயனே, உண்மை உணவே, யேசுவே, எம்மேல் இரங்கிடு வீரே, எமக்குநல் அமுதே ஊட்டிடுவீரே. நும்திரு மந்தை எம்மைக் காத்து, நித்திய வாழ்வினர் வாழும் நாட்டில் நலன்கள் அனைத்தும் காணச் செய்வீர்.
   அனைத்தும் அறிவோய், அனைத்தும் வல்லோய், மாந்தர்க் கிங்கு உணவினைத் தரு வோய், அங்கும் பந்தியில் அமரச் செய்வாய். அமர்ந்து நும்முடன் பங்கினைக் கொள்ளவும், வான்திருக் கூட்டத்தின் நட்பினராகவும், அருள்வீர். ஆமென். அல்லேலூயா
!

வாழ்த்தொலி: யோவான் 6:51-52
   அல்லேலூயா, அல்லேலூயா! "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: யோவான் 6:51-58
   அக்காலத்தில் இயேசு யூதர்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற் காகவே கொடுக்கிறேன்.'' "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இய லும்?'' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத் தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மை யான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந் திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என் றும் வாழ்வர்.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, June 19, 2014

ஜூன் 22, 2014

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
"எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன்."
நற்கருணைக்குரியவர்களே,
   கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் உள்ளன்புடன் வரவேற்கிறோம். "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறிய நம் ஆண்டவர் இயேசு, நற்கருணை வடிவில் எப்போதும் நம் மோடு இருக்கிறார். "
எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வை கொண்டுள்ளார்" என்ற இயேசுவின் வாக்குறுதி, நற்கருணையின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. கல்வாரி பலியின் நிகழ்வாகிய இந்த திருப்பலி கொண்டாட்டம், வாழ்வு தரும் உணவாகிய இயேசுவை நமக்கு விருந்தாக்குகிறது. இயேசுவின் சதையை உண்டு, அவரது இரத்தத்தைக் குடிக்கும் பேறுபெற்றுள்ள நாம், அவரோடு என்றென்றும் இணைந்தி ருக்கும் வரம் வேண்டி இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
நற்கருணைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில் மோசே, கடவுளின் வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் மனிதர் உயிர் வாழ்கின்றர் என்பதை சுட்டிக்காட்டுகிறார். நற்கருணையின் முன்னடை யாளமாக விளங்கும் மன்னாவால், இஸ்ரயேலர் உண்பிக்கப்பட்டதை நினைவூட்டுகிறார். கடவுளின் கட்டளைகளை நாம் கடைபிடிக்கிறோமா என்பதை ஆண்டவர் சோதித்து அறி கிறார் என்பதையும் எடுத்துரைக்கிறார். ஆன்மீக வறட்சி நிலவும் பாலைநிலத்திலும், வாழ் வளிக்கும் உணவாக நம்மிடம் வரும் நற்கருணை நாதருக்கு உகந்தவர்களாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை கவனமாக செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நற்கருணைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நற்கருணை பற்றிய தொடக்கத் திருச்சபையின் விசுவாசத்தை அறிக்கையிடுகிறார்.
அப்பத்தை பிட்டு உண்ணுதல், கிறிஸ் துவின் உடலில் பங்குகொள்வது என்பதையும், கிண்ணத்திலிருந்து பருகுதல், கிறிஸ்து வின் இரத்தத்தில் பங்குகொள்வது என்பதையும் தெளிவாக எடுத்துரைக்கிறார். ஒரே நற்க ருணை விருந்தில் பங்குபெறும் நாம் அனைவரும், கிறிஸ்துவுக்குள் ஒற்றுமையாக வாழ அழைப்பு விடுக்கிறார். இயேசுவின் மறையுடல் உறுப்புகளாக ஒன்றித்து வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்தை கவனமாக செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எங்கும் இருப்பவரே இறைவா,
  
ம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும், நற்கருணையில் கிறிஸ்துவின் மறைபொருளான உடனிருப்பை உணர்ந்து வாழவும், இறைமக்களை நற்கருணை விசுவா சத்தில் வளர்க்கவும் அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. ஒற்றுமையை அருள்பவரே இறைவா,
   உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், நற்கருணைப் பலியின் மேன்மை யையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபையில் ஒன்றிணையும் தூண்டுதல் பெற உத
விபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. தியாகத்தின் உருவே இறைவா,
   எம் நாட்டு தலைவர்கள் தியாக உணர்வோடு செயல்பட்டு, உண்மை மற்றும் நீதியின் பாதையில் மக்களை வழிநடத்தவும், சமூகத்தில் அன்பையும் ஒற்றுமையையும் வளர்க் கவும்
துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆறுதல் அளிப்பவரே இறைவா,
   உலகில் பல்வேறு அச்சுறுத்தல்களாலும், துன்புறுத்தல்களாலும் வாழ்வின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி நிற்கும் மக்களுக்கு, தேவையான ஆறுதலும் உதவியும்
கிடைக்குமாறு அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. அன்பின் பிறப்பிடமே இறைவா,
   எங்கள் பங்கு சமூகத்தில் வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், நற்கருணை விசுவாசத்திலும், அன்பு வாழ்விலும், தியாக உணர்விலும் வளர
உதவிபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, June 14, 2014

ஜூன் 15, 2014

மூவொரு இறைவன் பெருவிழா

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 34:4-6,8-9
   அந்நாள்களில் ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடி மோசே அதிகாலையில் எழுந்து சீனாய் மலைமேல் ஏறிச் சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும் கொண்டு போனார். ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்று கொண்டு, 'ஆண்டவர்' என்ற பெயரை அறிவித்தார். அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், "ஆண்டவர்! ஆண்டவர்; இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்" என அறிவித்தார். உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, "என் தலைவரே! நான் உண்மையி லேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக் கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங் கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்" என்றார்.
பதிலுரைப் பாடல்: தானியேல் (இணைப்பு) 1:29.30,31.32,33
பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.
   எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக; மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. (பல்லவி)
   உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக; கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. (பல்லவி)
   உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக; உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 2 கொரிந்தியர் 13:11-13
   சகோதர சகோதரிகளே, இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது: மகிழ்ச்சியாய் இருங் கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார். தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார் கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட் புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

வாழ்த்தொலி: திருவெளிப்பாடு 1:8
   அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக! அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: யோவான் 3:16-18
   அக்காலத்தில் இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: "தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள் ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர் மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.''

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, June 12, 2014

ஜூன் 15, 2014

மூவொரு இறைவன் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   மூவொரு இறைவன் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மனித அறிவுக்கு எட்டாத மறைபொருளாகிய இறைவனின் இயல்புக்கு திருச்சபை இன்று விழா எடுக்கிறது. நித்திய வாக்கான இறைமகன் வழியாக இந்த உலகைப் படைத்த தந்தையாம் கடவுள், அவர் வழியாகவே இதை மீட்கத் திருவுள மானார். இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுமாறு, தூய ஆவியாரின் வல்ல மையால் இறைமகன் இயேசு மனிதரானார் என்ற மீட்பு செயல்பாட்டிலேயே இறைவனின் மூன்று ஆட்களை நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம். தந்தையுடையவை யாவும் மகனுடையவை; அவர்களது முழு உண்மையை நோக்கி தூய ஆவியார் நம்மை வழி நடத்துகிறார். மூவொரு இறைவனாகிய தந்தை, மகன் தூய ஆவியாரிடம் உலக மக்கள் அனைவரும் நம்பிக்கை கொள்ள வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் சீனாய் மலை மேல் தமது மாட்சியை மோசேக்கு வெளிப்படுத்தியதைக் காண்கிறோம். ஆண்டவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன், சினம் கொள்ளத் தயங்குபவர், பேரன்புமிக்கவர், நம்பிக்கைக்குரியவர் என்ற உண்மை அறிவிக்கப்படுகிறது. கடவுளின் முன்னிலையில், மோசே தரைமட்டும் தாழ்ந்து வணங்கி இஸ்ரயேல் மக்களுக்காகப் பரிந்து பேசிய நிகழ்வு இங்கு எடுத்துரைக் கப்படுகிறது. நமது பாவங்களை மன்னித்து, நம்மை அவரது உரிமைச் சொத்தாக்கிக்கொள் ளுமாறு ஆண்டவரிடம் வேண்டி இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். நமது நடத்தை யைச் சீர்படுத்தி, திருச்சபையின் மக்களுடன் மன ஒற்றுமையுடன் வாழ அறிவுறுத்து கிறார். கிறிஸ்து இயேசு வழியாக கடவுளிடம் நம்பிக்கை கொண்டிருக்கும் நாம், தூய இறைவனின் மக்களாக வாழ அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் நம் அனைவரோடும் இருக்க வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அப்பா, தந்தையே இறைவா,
   திருச்சபையின் மக்களை வழிநடத்தும்
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மறைபொருளாகிய உமது உடனிருப்பை உணர்ந்து வாழவும், உலக மக் களை ம்மிடம் ஈர்க்கவும் அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. விண்ண தந்தையே இறைவா,
   இவ்வுலகில் வாழும் மாந்தர் அனைவரும், மூவொரு இறைவனாகிய நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்துகொள்ளவும், உமது பிள்ளைகளாக அன்பிலும் நீதியிலும் ஒற்று மையிலும் வாழவும் உதவுமாறு உம்மை
மன்றாடுகிறோம்.
3. வானக அரசரே இறைவா,
   உமது உண்மையின் அரசைப் புறக்கணித்து, உலகைச் சார்ந்த தங்கள் சொந்த விருப்பங் களி
ல் நாட்களை செலவிடும் எம் நாட்டு மக்கள் அனைவரும், நிலை வாழ்வைப் பற்றிய உண்மைகளை விரும்பித் தேதுணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. ஒற்றுமை அருள்பவரே இறைவா,
   உலகெங்கும் மதம், இனம், மொழி, பண்பாடு என பல்வேறு காரணங்களால் பிரிந்து வாழும் மக்கள் அனைவரும், ஒரே கடவுளாகிய உமது பிள்ளைகள் என்ற உண்மையை உணர்ந்து ஒற்றுமையில் வளர
உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. மூவொரு இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் மீதான விசுவா சத்தி
லும் அன்பிலும் வளரவும், உமக்கு விருப்பமான பிள்ளைகளாக வாழவும் தேவை யான வரங்களைப் பொழியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, June 7, 2014

ஜூன் 8, 2014

தூய ஆவியாரின் வருகை பெருவிழா

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 2:1-11
   பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடி யிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலி ருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண் டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கி னார்கள். அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், "இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர் கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?" என வியந்தனர். "பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசபொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரை யடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கி யிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!" என்றனர்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 104:1,24.29-30.31,34
பல்லவி: ஆண்டவரே உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
   என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. (பல்லவி)
  நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். (பல்லவி)
   ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 12:3-7,12-13
   சகோதர சகோதரிகளே, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும் 'இயேசுவே ஆண்டவர்' எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண் டும். அருள் கொடைகள் பலவகை உண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண் டுகளும் பலவகை உண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகை உண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படு கிறது. உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றா யிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பான மாகவும் பெற்றோம்.

தொடர் பாடல்:
   தூய ஆவியே, எழுந்தருள்வீர், வானினின்றுமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப் பிடுவீர். எளியவர் தந்தாய், வந்தருள்வீர், நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர், இதய ஒளியே, வந்தருள்வீர்.
    உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தண்மையும் தருபவரே. உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே.

   உன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர். உமதருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை, நல்லது அவனியில் ஏதுமில்லை.
    மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர், காயப்பட்டதை ஆற் றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர், குளிரானதைக் குளிர் போக்கிடுவீர், தவறிப் போனதை ஆண்டருள்வீர்.
   இறைவா உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர். புண்ணிய பலன்களை வழங்கிடுவீர், இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர், அழிவிலா இன்பம் அருள்வீரே.

வாழ்த்தொலி:
   அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: யோவான் 20:19-23
  அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்'' என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன் னிக்கப்படா'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, June 5, 2014

ஜூன் 8, 2014

தூய ஆவியாரின் வருகை பெருவிழா

திருப்பலி முன்னுரை:
"தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்."
இறை ஆவிக்குரியவர்களே,
   தூய ஆவியாரின் வருகை பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விண்ணகம் செல்லும் முன்பு, சீடர்கள் மேல் ஊதி, தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுமாறு பணித்தார். இயேசு விண்ணேற்றம் அடைந்த பத்தாம் நாளில் கொடுங்காற்றைப் போன்றதோர் இரைச்சலின் நடுவே, தூய ஆவியார் பிளவுற்ற நெருப்பு நாவுகளின் வடிவில் சீடர்கள் மீது இறங்கினார். தூய ஆவி யாரின் ஆற்றலால் மனவுறுதி பெற்ற திருத்தூதர்கள் பறைசாற்றிய நற்செய்தியால் முதல் கிறிஸ்தவ சமூகம் திருமுழுக்கு பெற்ற நாளை இன்று நாம் கொண்டாடுகிறோம். திருச் சபையின் பிறந்த நாளான இன்று, கிறிஸ்துவுக்கு சான்று பகரும் வரத்துக்காக தூய ஆவி யாரின் ஆற்றலை வேண்டி, இத்திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
ஆவிக்குரியவர்களே, 
     இன்றைய முதல் வாசகம், அன்னை மரியா மேலும், திருத்தூதர்கள் மீதும் தூய ஆவி இறங்கிவந்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட சீடர்கள், திருத்தூதர் பேதுருவின் தலைமையில் நற்செய்தியைப் பறைசாற்றுவதையும், அவர்கள் பல்வேறு மொழிகளில் பேசுவதைக் கேட்டு மக்கள் வியப்படைவதையும் இங்கு காண் கிறோம். திருத்தூதர்களின் வார்த்தைகளால் உள்ளம் குத்தப்பட்டு, மூவாயிரம் பேர் அன்று திருமுழுக்கு பெற்றார்கள் என அறிகிறோம். தூய ஆவியாரின் ஆலயங்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம், ஆவிக்குரிய வல்லமையுடன் கிறிஸ்துவுக்கு சான்று பகர வரம் வேண்டி இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆவிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், தூய ஆவியாரின் தூண்டுதலின்றி யாரும் இயேசுவை ஆண்டவர் என அறிக்கையிட முடியாது என்பதை எடுத்துரைக்கிறார். இவ்வாறு ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்விலும், தூய ஆவியாரின் செயல்பாடு இருப் பதை அவர் விளக்குகிறார். திருமுழுக்கின் வழியாக நாம் பெற்ற தூய ஆவியார், நம்மை கிறிஸ்துவின் ஒரே உடலாய் ஒன்றிணைக்கிறார் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். தூய ஆவி என்னும் ஊற்று நீரை பானமாக பருகியுள்ள நாம் அனைவரும், பிளவுபடா உள்ளத்தோடு வாழ வரம் வேண்டி இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஆவியைப் பொழிபவரே இறைவா,
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உம் தூய
ஆவி யால் நிரப்பி, உம் திருமகனின் திருச்சபையை அருள் வாழ்வில் செழித்தோங்கச் செய்யும் அருளாற்றலைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. புதுவாழ்வு அளிப்பவரே இறைவா,
   இவ்வுலகப் பொருட்களில் நாட்டம் கொண்டு, உண்மை வடிவாகிய உம்மைப் புறக்க ணித்து வாழும் உலக மக்கள் அனைவர் மீதும்
உமது ஆவியைப் பொழிந்து, அருள் வாழ் வின் ஆர்வத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மை ஒளியே இறைவா,
   எம் நாட்டு மக்கள் மீதும், தலைவர்கள் மீதும் உமது ஆவியைப் பொழிந்து, உமது மீட்பின் பாதையில் பயணம் செய்யும் ஒளியின் மக்களாக செயல்படத் தேவையான மனமாற் றத்தை உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. பிரிந்ததை இணைப்பவரே இறைவா,
   கிறிஸ்துவின் பெயரால் பல்வேறு சபைகளாக வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், தூய ஆவியா
ரின் வல்லமையால் ஒன்றிணைந்து, ஒரே திருச்சபையாக கிறிஸ்துவுக்கு சான்று பகர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எம்மில் செயலாற்றுபவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தூய ஆவியாரின் ஆலயங்களாக வாழ்ந்து, எங்கள் சொற்களாலும் செயல்களாலும் கிறிஸ்து இயேசுவுக்கு சான்று பகரும்
வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Sunday, June 1, 2014

ஜூன் 1, 2014

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 1:1-11
   தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித் தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண் பித்தார். அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள் என்று கூறினார். பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ? என்று கேட்டார்கள். அதற்கு அவர், என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்க ளுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடை யெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார். இவற்றைச் சொன்ன பின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண் டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் என்றனர்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 47:1-2.5-6.7-8
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
   மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தை யும் ஆளும் மாவேந்தர் அவரே. (பல்லவி)
   ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரச ருக்குப் புகழ் பாடுங்கள். (பல்லவி)
   ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திருஅரியணையில் வீற்றிருக் கின்றார். (பல்லவி)

இரண்டாம் வாசகம்: எபேசியர் 1:17-23
    சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்ப வர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வு அற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்: இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோயிருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தி னார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங் கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.

வாழ்த்தொலிமத்தேயு 28:19
   அல்லேலூயா, அல்லேலூயா! "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங் கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா!

நற்செய்தி வாசகம்: மத்தேயு 28:16-20
   அக்காலத்தில் பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவி லுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐய முற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தா ரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங் கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பி யுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' என்று கூறினார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3