Wednesday, June 27, 2012

ஜூலை 1, 2012

பொதுக்காலம் 13-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதிமூன்றாம் ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்களை அன்பு டன் அழைக்கிறோம். இறைவனில் நம்பிக்கை கொண்டு வாழ்வைப் பெற்றுக்கொள்ள இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. பன்னிரு ஆண்டுகளாக இரத்தப் போக்கால் அவதியுற்ற பெண்ணின் நம்பிக்கை அவளுக்கு நலமளித்தது. தொழுகைக் கூடத் தலைவரின் நம்பிக்கை அவரது மகளுக்கு உயிரளித்தது. நாமும் கடவுள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டோராய் வாழும்போது அற்புதங்களைக் காண்போம். நமது நம்பிக்கை நமக்கும் பிறருக்கும் வாழ்வளிக்கும் வகையில் அமைய வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், மனிதர் அழியாமைக்கென்று கடவுளால் படைக்கப்பட்டவர் கள் என்ற கருத்தை முன் வைக்கிறது. கடவுள் தமது சாயலில், அதாவது நன்மைக்குரிய வாழ்வு வாழ மனிதரை உருவாக்கினார். அலகையின் சூழ்ச்சியால் உலகில் நுழைந்த பாவம் மனிதரை சாவுக்கு ஆளாக்கியது என்றும் எடுத்துரைக்கின்றது. நாம் நிலைவாழ் வின் மக்களாக வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறது. செல்வராய் இருந்த இயேசு நம் பொருட்டு ஏழையானது போல, நாமும் பிறரது நன்மைக்காக நம்மை தாழ்த்திக்கொள்ள வேண்டு மென்று புனித பவுல் அழைப்பு விடுக்கிறார். நம்மிடம் மிகுதியாய் இருப்பதைக் கொண்டு பிறரது குறைகளை நீக்கும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நம்பிக்கை தருபவராம் இறைவா,
  
உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தங்கள் நம்பிக்கையால் நீர் அளிக்கும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளவும், திருச்சபையின் மக்கள் அனைவரும் வாழ்வுபெறச் செய்யவும் அருள்புரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வை வழங்குபவராம் இறைவா,
  
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் உம் மீது முழுமையாக நம்பிக்கை கொண்டு வாழவும், தங்கள் நம்பிக்கையால் உமக்கு சான்று பகர்ந்து பிறரும் நிலைவாழ்வைக் கண்டடைய உதவவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. படைத்து பராமரிப்பவராம் இறைவா,
  உம்மை அறியாத எம் நாட்டு மக்களும், தலைவர்களும் உம்மில் நம்பிக்கை கொள்ளவும், அதனால் எங்கள் நாடு வளமும் வாழ்வும் பெற்று செழிக்கவும் உதவிபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. நலம் அளிப்பவராம் இறைவா,
   பணம், பதவி, புகழ் போன்ற ஆசைகளில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும், தங் களிடம் மிகுதியாக இருப்பதைப் பிறரோடு பகிர்ந்து வாழும் நல்ல உள்ளத்தை அளிக்க
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உயிரின் ஊற்றாம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம்மில் முழு மையான நம்பிக்கை கொண்டு வாழவும், உடல், உள்ள நலன்களோடு அருள் வாழ்வின் உயிரையும் பெற்றுக்கொள்ளவும்
வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, June 22, 2012

ஜூன் 24, 2012

புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா

முதல் வாசகம்: எசாயா 49:1-6 
   தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனி யுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள் போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக் கொண்டார். அவர் என்னிடம், 'நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார். நானோ, 'வீணாக நான் உழைத்தேன்; வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது' என்றேன். யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார். ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட் டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.
இரண்டாம் வாசகம்: திருத்தூதர் பணிகள் 13:22-26
   அந்நாள்களில் பவுல் கூறியது: கடவுள் சவுலை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து 'ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்' என்று சான்று பகர்ந்தார். தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபி லிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். அவருடைய வருகைக்கு முன்பே யோவான், 'மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்' என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில், 'நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப் பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை' என்று கூறினார். சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.

நற்செய்தி வாசகம்: லூக்கா 1:57-66,80
   எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்'' என்றார். அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே'' என்று சொல்லி, "குழந் தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?'' என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந் தையின் பெயர் யோவான்'' என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, "இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'' என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந் தது. குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து மன வலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, June 20, 2012

ஜூன் 24, 2012

புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
  புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவ ரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். நமது ஆண்டவர் இயேசுவின் மீட்பு பணிக்காக உலக மக்களைத் தயாரித்த இறுதி இறைவாக்கினராக திருமுழுக்கு யோவான் இருந்தார். கிறிஸ்துவின் முன்னோடியாக இந்த உலகில் பிறந்த அவர், உலகின் பாவங்களைப் போக்கும் செம்மறியை மக்களுக்கு சுட்டிக்காட்டினார். கபிரியேல் வானதூதரால் முன்னறி விக்கப்பட்ட அவரது பிறப்பின் நிகழ்வைத் திருச்சபை இன்று சிறப்பிக்கின்றது. யோவா னைப் பின்பற்றி, கிறிஸ்துவை உலகிற்கு சுட்டிக்காட்டுபவர்களாக வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே, 
     இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் ஒவ்வொருவரும் தாயின் கருப்பையில் இருக்கும்போதே இறைவனால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதை எடுத்துரைக்கிறது. கடவுளின் ஊழியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இறைவாக்கினர்கள், ஆண்டவர் வழங்கும் மீட்பை மக்கள் அனைவரும் பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டிகளாக திகழ்வதைப் பற்றியும் இது பேசுகிறது. யோவானைப் போன்று நாமும் மீட்பின் ஒளியாக ஒளிரும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு கவனமாக செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், தாவீதின் வழிமரபில் தோன்றிய மீட்பரின் வருகைக்கு யோவான் தயார் செய்ததைப் பற்றி பேசுகிறது. மக்கள் பலர் யோவானை மெசியாவாக வேளையில், அவர் தனது தாழ்நிலையை வெளிப்படுத்திய பாங்கை பவுல் எடுத்துரைப் பதைக் காண்கிறோம். யோவானைப் போன்று இறைவன் முன்னிலையில் தாழ்ச்சி உள்ள வர்களாக திகழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு கவனமாக செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. தேர்ந்தெடுத்து வழிநடத்தும் இறைவா,
   உமது பணியை உலகெங்கும் நிறைவேற்ற, நீர் தேர்ந்தெடுத்துள்ள 
ம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், நிறை உண்மையின் சாட்சிகளாகவும், கிறிஸ்துவை சுட்டிக்காட்டுபவர்களாகவும் திகழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. திருச்சபையை ஒளிர்விக்கும் இறைவா,
   உலகெங்கும் வாழும் திருச்சபையின் மக்கள் அனைவரும், உம்மை அறியாத மக்கள் முன்னிலையில் உமக்கு சான்றுபகரவும், உமது வழியில் நடந்து உலகிற்கு ஒளியாக திகழவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
3. வழிகாட்டும் நல்லவராம் இறைவா,
   எம் நாட்டு மக்கள் அனைவரும், அருள் வாழ்விலும் பொருள் வாழ்விலும் செழித்தோங் குமாறு, உம்மைப் பற்றிய ஞானத்தில் வளரவும், நிறை வாழ்வின் உண்மைகளை நாடித் தேடவும் வழிகாட்ட
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மீட்பளிக்கும் நாயகராம் இறைவா,
   உலகில் தங்கள் உரிமைகளையும், உடைமைகளையும் இழந்து அகதிகளாக வாழும் மக்களுக்கும், பெற்றோராலும் பிள்ளைகளாலும் கைவிடப்பட்டு அனாதைகளாக வாழ் வோருக்கும் துன்பங்களிலிருந்து மீட்பளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. மகிமையின் மன்னராம் இறைவா,
   எங்கள் பங்கு குடும்பத்தில் வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், புனித திருமுழுக்கு யோவானைப் போன்று உமது முன்னிலையில் தாழ்ச்சி உள்ளவர்களாகவும், மற்றவர்களுக்கு உம்மை சுட்டிக்காட்டுபவர்களாகவும் வாழத் தேவை யான வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, June 15, 2012

ஜூன் 17, 2012

பொதுக்காலம் 11-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசேக்கியேல் 17:22-24 
   தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: "உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக் கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளி லிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலைமேல் நான் நடுவேன். இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன். அது கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மர மாகத் திகழும். அனைத்து வகைப் பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக் கொள்ளும். அதன் கிளைகளின் நிழல்களில் அவை வந்து தங்கும். ஆண்டவராகிய நான் ஓங்கிய மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன் என்றும், பசுமை யான மரத்தை உலரச் செய்து, உலர்ந்த மரத்தைத் தழைக்கச் செய்துள்ளேன் என்றும், அப்போது வயல்வெளி மரங்களெல்லாம் அறிந்து கொள்ளும். ஆண்டவராகிய நானே உரைத்துள்ளேன்; நான் செய்து காட்டுவேன்."
இரண்டாம் வாசகம்: 2 கொரிந்தியர் 5:6-10
   சகோதர சகோதரிகளே,  நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலில் குடியிருக்கும் வரையில் நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப் படையிலேயே வாழ்கிறோம். நாம் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம். எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தா லும் அதிலிருந்து குடிபெயர்ந் தாலும் அவருக்கு உகந்தவராய் இருப்பதே நம் நோக்கம். ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண் டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறு பெற்றுக்கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 4:26-34
   அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: "இறையாட்சியைப் பின் வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யா மலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர் கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படு கிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது'' என்று கூறினார். மேலும் அவர், "இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும் பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்ட பின் முளைத் தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்'' என்று கூறினார். அவர்களது கேட்டறி யும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர் களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, June 13, 2012

ஜூன் 17, 2012

பொதுக்காலம் 11-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினோராம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம். இறையாட்சியின் மக்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த இறையாட்சி தானாக முளைத்து வளரும் விதையைப் போலவும், பெரிய மரமாக வளர்ந்து பறவைகளின் உறைவிடமாக மாறும் சிறிய கடுகு விதையைப் போன்றும் இருக்கிறது. இறைவனின் விருப்பத்தின்படி இந்த இறையாட்சி உலகெங்கும் விரிந்து பரவி வருகிறது. நாமும் இறையாட்சியின் தூதுவர்களாக செய லாற்றும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், ஆண்டவரால் நடப்படுகின்ற கேதுரு மரத்தைப் பற்றி பேசு கிறது. உயர்ந்தவற்றை தாழ்த்துபவராகவும், தாழ்ந்தவற்றை உயர்த்துபவராகவும் தாம் இருப்பதை எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக ஆண்டவர் எடுத்துரைக்கின்றார். ஆண்டவரால் நட்டு வளர்க்கப்படும் மரத்தில் உறைவிடம் தேடும் பறவைகளாக வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், நமது இவ்வுலக வாழ்வின் நிலையாமையைப் பற்றி பேசுகிறது. இந்த நிலையற்ற உடலில் இருந்து நாம் பிரியும் காலத்தில், கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன் நிற்க வேண்டுமென்பதை எண்ணிப் பார்க்க புனித பவுல் அழைப்பு விடுக்கிறார். நாம் செய்யும் நன்மைகளுக்கு கிறிஸ்துவிடம் கைம்மாறு பெறும் மக்களாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. என்றும் வாழும் இறைவா,
  
உலகெங்கும் விரிந்து பரவி நிற்கும் உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், இறைமக்களை இறையாட்சி நெறியில் உறுதிபடுத்தி வளரச்செய்ய தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நட்டு வளர்ப்பவராம் இறைவா,
  
சிறிய கடுகு விதையாக ஊன்றப்பட்டு, உலகெங்கும் செழித்து வளர்ந்து கொண்டிருக்கும் திருச்சபையின் மக்கள் அனைவரும், இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழவும், உலகில் அமைதியையும் ஒற்றுமையையும் உருவாக்கும் இறையாட்சியின் தூதுவர்க ளாக செயல்படவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உறைவிடம் தருபவராம் இறைவா,
  உம்மை அறியாத எம் நாட்டு மக்கள் அனைவரும் நீர் நட்டு வளர்த்த திருச்சபையில் உறைவிடம் தேடவும், உமது ஆட்சியை ஏற்றுக்கொண்டு உண்மைக்கு சான்றுபகர்ப வர்களாக வாழவும் தூண்டுதல் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. உற்ற துணைவராம் இறைவா,
   நிலையற்ற எங்கள் உடலுக்காக பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் நாங்கள், நிலையான உலகில் வாழத் தேவையான நன்மைகளை செய்து, உமது நீதி
த் தீர்ப்பின் தண்டனைக்கு ஆளாகாதவாறு உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வரங்களைப் பொழிபவராம் இறைவா,
   எங்கள் பங்கு குடும்பத்தில் வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது நிழலில் புகலிடம் தேடும் இறையாட்சியின் மக்களாக வாழவும், உடல், உள்ள, ஆன்ம நலன்களில் வளரவும் 
தேவையான வரங்களைப் பொழிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, June 8, 2012

ஜூன் 10, 2012

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா

முதல் வாசகம்: விடுதலைப்பயணம் 24:3-8
   அந்நாள்களில் மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தை களையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக, "ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்'' என்று விடையளித்தனர். மோசே ஆண்டவரின் வாக்குகள் அனைத்தையும் எழுதி வைத்தார். அதிகாலையில் அவர் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார். அவர் இஸ்ர யேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர். மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக் கலங்களில் விட்டு வைத்தார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார். அவர் உடன்படிக்கையின் ஏட்டை எடுத்து மக்கள் காது களில் கேட்கும்படி வாசித்தார். அவர்கள், "ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந் திருப்போம்'' என்றனர். அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள் மேல் தெளித்து, "இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ'' என்றார்.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 9:11-15
   சகோதர சகோதரிகளே, கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன் னதை விட மேலானது, நிறைவுமிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல; அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல. அவர் பலியாகப் படைத்த இரத் தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒரு முறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்புக் கிடைக்கும்படி செய்தார். வெள்ளாட்டுக் கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள் மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவு ளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே. இவ்வாறு அவர் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராய் இருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப் பட்ட, என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது. இது ஒரு சாவின்மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திய உடன் படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பளிக்கிறது.

நற்செய்தி வாசகம்: மாற்கு 14:12-16,22-26
   புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'' என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாள ரிடம், "'நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?' என்று போதகர் கேட்கச் சொன்னார் எனக் கூறுங்கள். அவர் மேல் மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.'' சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார் கள். அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்'' என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், "இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத் தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்கமாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல் கிறேன்'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, June 6, 2012

ஜூன் 10, 2012

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
  கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் உள்ளன்புடன் வரவேற்கிறோம். கோதுமை அப்பத்திலும், திராட்சைப்பழ இரசத்திலும் இருக்கின்ற மறைவான பிரசன்னத்தை திருச்சபை இன்று கொண்டாடி மகிழ்கிறது. நம் ஆண்டவரின் திருஉடலையும் திருஇரத்தத்தையும் உணவாகவும் பானமாகவும் பெறப் பேறுபெற்றவர்கள் நாம். இறுதி இரவுணவு வேளையில் கிறிஸ்து ஏற்படுத்திய இந்த நற்கருணைப் பலியே, நம் கத்தோலிக்க வழிபாட்டின் மையமாக விளங்குகிறது. நற்க ருணை நாதருக்கு உண்மையுள்ள சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் ஆர்வத்துடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே, 
     இன்றைய முதல் வாசகம், மோசே வழியாக கடவுள் ஏற்படுத்திக்கொண்ட பழைய உடன்படிக்கையைப் பற்றி எடுத்துரைக்கிறது. மோசே இஸ்ரயேல் மக்கள் சார்பாக ஆண்டவருக்கு நல்லுறவுப் பலி செலுத்துவதையும், அவர்கள்மீது உடன்படிக்கையின் இரத்தத்தைத் தெளித்ததையும் இதில் காண்கிறோம். கடவுள் நம்மோடு செய்துள்ள உடன்படிக்கைக்கு உண்மை உள்ளவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு கவனமாக செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், தலைமை குருவான கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையைப் பற்றி பேசுகிறது. இயேசு கிறிஸ்து தம்மையே மாசற்ற பலியாக ஒப்புக்கொடுத்து, நமக்கு மீட்பு கிடைக்கச் செய்தார் என்பதை எடுத்துரைக்கிறது. கிறிஸ்து வுக்கு உகந்த புதிய உடன்படிக்கையின் மக்களாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத் துக்கு கவனமாக செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எங்கும் இருப்பவராம் இறைவா,
   உலகெங்கும் நற்கருணைப் பலியை நிறைவேற்றும்
ம் திருத்தந்தை, ஆயர்கள், குருக் கள் அனைவரும், கிறிஸ்துவின் மறைபொருளான பிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் வாழவும், இறைமக்களை விசுவாச வாழ்வில் வளரச்செய்யவும் அருள்புரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. ஒற்றுமையை அருள்பவராம் இறைவா,
   உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், நற்கருணைப் பலியின் மேன்மை யையும் உண்மைத்தன்மையையும் உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபையில் ஒன்றிணை யும் மனம் தர வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
3. தியாகத்தின் உருவாம் இறைவா,
   எம் நாட்டு மக்களுக்கு வழிகாட்டும் தலைவர்கள் தியாக உணர்வோடு செயல்பட்டு, உண்மை மற்றும் நீதியின் பாதையில் மக்களை வழிநடத்தவும், சமூகத்தில் அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும்
துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. பகிந்துவாழ அழைப்பவராம் இறைவா,
   உலகில் பல்வேறு தேவைகளாலும், துன்பங்களாலும் நொந்து வருந்தும் மனிதர் களோடு, உமது அன்பையும் இரக்கத்தையும் உதவியையும் பகிரும் கருவிகளாக வாழ, கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் துணைபுரிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. அன்பின் பிறப்பிடமாம் இறைவா,
   எங்கள் பங்கு சமூகத்தில் வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், நற்கருணை விசுவாசத்திலும், அன்பு வாழ்விலும், தியாக உணர்விலும் வளரத்
தேவையான வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, June 1, 2012

ஜூன் 3, 2012

மூவொரு இறைவன் பெருவிழா

முதல் வாசகம்: இணைச்சட்டம் 4:32-34,39-40
   மோசே மக்களை நோக்கிக் கூறியது: "உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல், வானத்தின் ஒரு முனைமுதல் மறு முனைவரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்ததுண்டோ? அல்லது இதுபோல் கேள்விப்பட்டது உண்டா? நெருப் பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர் வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல, சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக் கென உரிமையாக்கிக் கொள்ள முன்வரும் கடவுள் உண்டா? 'மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்' என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்."
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8:14-17
   சகோதர சகோதரிகளே, கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ள வில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண் டீர்கள். அதனால் நாம், "அப்பா, தந்தையே" என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக் கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப்பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப்பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்குபெற வேண்டும்; அப்போதுதான் அவ ரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

நற்செய்தி வாசகம்: மத்தேயு 28:16-20
  அக்காலத்தில் பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவி லுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திரு முழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி