Wednesday, June 27, 2012

ஜூலை 1, 2012

பொதுக்காலம் 13-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதிமூன்றாம் ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்களை அன்பு டன் அழைக்கிறோம். இறைவனில் நம்பிக்கை கொண்டு வாழ்வைப் பெற்றுக்கொள்ள இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. பன்னிரு ஆண்டுகளாக இரத்தப் போக்கால் அவதியுற்ற பெண்ணின் நம்பிக்கை அவளுக்கு நலமளித்தது. தொழுகைக் கூடத் தலைவரின் நம்பிக்கை அவரது மகளுக்கு உயிரளித்தது. நாமும் கடவுள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டோராய் வாழும்போது அற்புதங்களைக் காண்போம். நமது நம்பிக்கை நமக்கும் பிறருக்கும் வாழ்வளிக்கும் வகையில் அமைய வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம், மனிதர் அழியாமைக்கென்று கடவுளால் படைக்கப்பட்டவர் கள் என்ற கருத்தை முன் வைக்கிறது. கடவுள் தமது சாயலில், அதாவது நன்மைக்குரிய வாழ்வு வாழ மனிதரை உருவாக்கினார். அலகையின் சூழ்ச்சியால் உலகில் நுழைந்த பாவம் மனிதரை சாவுக்கு ஆளாக்கியது என்றும் எடுத்துரைக்கின்றது. நாம் நிலைவாழ் வின் மக்களாக வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
நம்பிக்கைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறது. செல்வராய் இருந்த இயேசு நம் பொருட்டு ஏழையானது போல, நாமும் பிறரது நன்மைக்காக நம்மை தாழ்த்திக்கொள்ள வேண்டு மென்று புனித பவுல் அழைப்பு விடுக்கிறார். நம்மிடம் மிகுதியாய் இருப்பதைக் கொண்டு பிறரது குறைகளை நீக்கும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நம்பிக்கை தருபவராம் இறைவா,
  
உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தங்கள் நம்பிக்கையால் நீர் அளிக்கும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளவும், திருச்சபையின் மக்கள் அனைவரும் வாழ்வுபெறச் செய்யவும் அருள்புரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வை வழங்குபவராம் இறைவா,
  
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் உம் மீது முழுமையாக நம்பிக்கை கொண்டு வாழவும், தங்கள் நம்பிக்கையால் உமக்கு சான்று பகர்ந்து பிறரும் நிலைவாழ்வைக் கண்டடைய உதவவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. படைத்து பராமரிப்பவராம் இறைவா,
  உம்மை அறியாத எம் நாட்டு மக்களும், தலைவர்களும் உம்மில் நம்பிக்கை கொள்ளவும், அதனால் எங்கள் நாடு வளமும் வாழ்வும் பெற்று செழிக்கவும் உதவிபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. நலம் அளிப்பவராம் இறைவா,
   பணம், பதவி, புகழ் போன்ற ஆசைகளில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும், தங் களிடம் மிகுதியாக இருப்பதைப் பிறரோடு பகிர்ந்து வாழும் நல்ல உள்ளத்தை அளிக்க
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உயிரின் ஊற்றாம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம்மில் முழு மையான நம்பிக்கை கொண்டு வாழவும், உடல், உள்ள நலன்களோடு அருள் வாழ்வின் உயிரையும் பெற்றுக்கொள்ளவும்
வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.