Saturday, July 27, 2013

ஜூலை 28, 2013

பொதுக்காலம் 17-ம் ஞாயிறு

முதல் வாசகம்: தொடக்க நூல் 18:20-32
   அந்நாள்களில் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, "சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெரும் கண்டனக் குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. என்னை வந்தடைந்த கண்டனக் குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்துகொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்'' என்றார். அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திரு முன் நின்று கொண்டிருந்தார். ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: "தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்க ளாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டா வது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ? தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்த தன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?'' என்றார். அதற்கு ஆண்டவர், "நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்'' என்றார். அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, "தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்து விட்டேன்; ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக் கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?'' என்றார். அதற்கு அவர், "நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்'' என்றார். மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, "ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?'' என்று கேட்க, ஆண்டவர், "நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்'' என்றார். அப்பொழுது ஆபிரகாம்: "என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்?'' என, அவரும் "முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்'' என்று பதிலளித்தார். அவர், "என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத் துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?'' என, அதற்கு அவர், "இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்'' என்றார். அதற்கு அவர், "என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேச விடும். ஒருவேளை அங்கு பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?'' என, அவர், "அந்த பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்'' என்றார்.
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 2:12-14
   சகோதர சகோதரிகளே, நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப் பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர் பெற்று எழுந்துள்ளீர்கள். உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர் பெறச் செய்தார். நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். நமக்கு எதிரான ஒப் பந்த விதிகள் பல கொண்ட கடன் பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவை யில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்துவிட்டார்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 11:1-13
   அக்காலத்தில் இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, "ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக் கொடும்'' என்றார். அவர் அவர்களிடம், "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ் வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதி ராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களை யும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங் களை விடுவித்தருளும்'' என்று கற்பித்தார். மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வரு மாறு கூறினார்: "உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, 'நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், 'எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத் திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது' என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக் குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங் கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல் லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக் கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர் களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப் பது எத்துணை உறுதி!''

Friday, July 26, 2013

ஜூலை 28, 2013

பொதுக்காலம் 17-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இறைவேண்டலின் வல்லமையை உணர்ந்து வாழ இன்றைய திருவழி பாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் இயேசு, தந்தையாம் இறைவனிடம் தனி மையாக வேண்டிக் கொண்டிருந்த பல நிகழ்வுகள் நற்செய்திகளில் சொல்லப்பட்டிருக்கின் றன. இன்று தங்களுக்கும் இறைவேண்டல் செய்யக் கற்றுத்தருமாறு, சீடர்கள் இயேசுவி டம் கோரிக்கை வைக்கின்றனர். அவர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுக் கும் இயேசு, அதன் பயனையும் சுட்டிக்காட்டுகிறார். தொடர்ந்து இறைவேண்டல் செய் வோரின் உள்ளுணர்வுகளை ஆண்டவர் புறக்கணிக்க மாட்டார் என்ற பாடத்தை மனதில் இருத்த நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசுவைப் போன்று இறைவனின் திரு வுளம் நம்மில் நிறைவேற வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், சோதோம் கொமோரா நகரங்களை அழிவில் இருந்து காப் பாற்ற ஆபிரகாம் இறைவேண்டல் செய்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. கொடிய பாவங்க ளுக்காக அழிக்கப்பட இருந்த அந்த நகரங்களை, நீதிமான்களை முன்னிறுத்தி அவர் காப் பாற்ற முயல்வதைக் காண்கிறோம். ஐம்பது, நாற்பது, முப்பது என நீதிமான்களின் எண் ணிக்கையை குறைத்து ஆபிரகாம் பேரம் பேசுவதைக் காண்கிறோம். பத்து பேர் இருந்தால் கூட அந்நகரங்களை அழிக்க மாட்டேன் கடவுள் வாக்களிக்கிறார். நமது வேண்டலுக்கு கனிவோடு பதிலளிக்கும் ஆண்டவருக்கு உண்மை உள்ளவர்களாய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்து வழியாக நமக்கு வழங் கப்பட்ட பாவ மன்னிப்பைப் பற்றி எடுத்துரைக்கிறார். திருமுழுக்கின் வழியாக நாம் கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப்பட்டு, அவர் மீதான நம்பிக்கையால் பாவத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளதை பவுல் நினைவூட்டுகிறார். நமது பாவங்களின் கடன் பத்திரம் ஆண்டவர் இயேசுவின் சிலுவை மரணத்தால் அழிக்கப்பட்டுவிட்டதை உணர அழைக்கப் படுகிறோம். நம் பாவங்களை மன்னித்த கிறிஸ்துவின் அருளில் வளர வரம் வேண்டி, இவ் வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வேண்டலை கேட்பவராம் இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமக்கு உகந்தவர்க ளாக வாழவும், உமது திருச்சபையின் புதுவாழ்வுக்காக உழைக்கவும் வரமருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மாற்றங்களை தருபவராம் இறைவா,
   உலக நாடுகளில் நிலவும் வன்முறைகளும், கலவரங்களும், உள்நாட்டுப் போர்களும், ஒழுக்கக் கேடுகளும் மறைந்து, உமக்கு உகந்த வாழ்க்கை முறைகள் செழித்தோங்க வர மருள
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அருள்மழை பொழிபவராம் இறைவா,
   எமது நாட்டில் பெருகி வரும் பிரிவினை எண்ணங்களும், வன்முறை கலாச்சாரங்களும், முறைதவறிய ஆசைகளும் அழிந்து, அமைதியை விரும்பும் புதிய சமூகம் உருவாக வர மருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. கருணை காட்டுபவராம் இறைவா,
   உலகின் பல்வேறு சூழ்நிலைகளால் அமைதி இழந்து தவிக்கும் உள்ளங்கள் உமது உதவியைப் பெற்று, இறை இரக்கத்தின் அமைதியை சுவைக்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. நன்மை அளிப்பவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும்
உம் திருவுளம் எம் மில் நிறைவேற அனுமதிக்கவும், அதன் மூலம் பாவத்தின் கட்டுகளில் இருந்து விடுதலை பெற்று புதுவாழ்வு வாழவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, July 20, 2013

ஜூலை 21, 2013

பொதுக்காலம் 16-ம் ஞாயிறு

முதல் வாசகம்: தொடக்க நூல் 18:1-10
   அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகா முக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயி லில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலை விட்டு ஓடினார். அவர்கள் முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, "என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம்மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டு வருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெ னில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்'' என்றார். "நீ சொன்னபடியே செய்'' என்று அவர்கள் பதில் அளித்தார்கள். அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, "விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப் பங்கள் சுடு'' என்றார். ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச் சென்று, ஒரு நல்ல இளங்கன் றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான். பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும் பொழுது அவர்களருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். பின்பு அவர்கள் அவரை நோக்கி, "உன் மனைவி சாரா எங்கே?'' என்று கேட்க, அவர், "அதோ கூடாரத்தில் இருக்கிறாள்'' என்று பதில் கூறினார். அப்பொ ழுது ஆண்டவர், "நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்'' என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 1:24-28
   சகோதர சகோதரிகளே, உங்கள் பொருட்டு துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். என் மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன். நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலை முறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களினங்களிடையே அது அளவற்ற மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார். கிறிஸ்துவைப் பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சி நிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 10:38-42
   அக்காலத்தில் இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட் டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசு விடம் வந்து, "ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல் லும்'' என்றார். ஆண்டவர் அவரைப் பார்த்து, "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங் கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, July 18, 2013

ஜூலை 21, 2013

பொதுக்காலம் 16-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறைவார்த்தைக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் பதினாறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இறைவனை நம் இல்லத்தில் வரவேற்று உபசரிக்கவும், அவரது வார்த் தையை பணிவுடன் கேட்கவும் நம்மை தயாரிக்குமாறு இன்றைய திருவழிபாடு அழைப்பு விடுக்கிறது. நற்கருணை வடிவில் நம்மைத் தேடி வரும் ஆண்டவரை நாம் எத்தகைய தயாரிப்போடு வரவேற்கிறோம் என்பதை சிந்திக்க அழைக்கப்படுகிறோம். நோயிலும், பசி யிலும் வாடுவோரில் தம்மைக் கண்டு, உபசரிக்க இறைவன் நம்மை அழைக்கிறார். அதே நேரத்தில், இறைவனின் வார்த்தைக்கு முழுமையாக செவிகொடுத்து, அவர் காட்டும் வழி யில் நடக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசு விரும்பும் நல்ல பாதையைத் தேர்ந்தெடுத்து வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறைவார்த்தைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், வழிப்போக்கர் வடிவில் தோன்றிய ஆண்டவரை ஆபிரகாம் உணவு வழங்கி உபசரித்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. திரித்துவ இறைவனின் அடையா ளமாக மூன்று ஆட்கள் இங்கு தோன்றுவதைக் காண்கிறோம். அவர்களுக்கு அப்பங்கள் சுட்டும், இளங்கன்று கறி சமைத்தும் ஆபிரகாம் விருந்து படைப்பதைக் காண்கிறோம். ஆபிரகாம் அளித்த விருந்தை உவப்போடு ஏற்ற ஆண்டவர், சாராவுக்கு ஈசாக்கின் பிறப் பினை வாக்களிக்கிறார். நாம் முழு மனதோடு கடவுளுக்கு பணி செய்து, அவரது கொடை களை தாராளமாய் பெற்று மகிழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறைவார்த்தைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், காலங்காலமாக மறைந்திருந்து கிறிஸ்து இயேசுவில் வெளிப்படுத்தப்பட்ட இறைத் திட்டத்தைப் பற்றி எடுத்துரைக்கிறார். மனிதராக பிறந்த வார்த்தையான இறைவன், நமக்காக அனுபவித்த வேதனையை உணர நமக்கு அழைப்பு விடுக்கிறார். திருச்சபையின் வழியாக கடவுளின் திட்டம் மாட்சியுடன் செயல்படுவதாக பவுல் கூறுகிறார். கிறிஸ்துவில் முதிர்ச்சி பெற்று, நிலை வாழ்வின் மாட்சியைப் பெற நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவைப் பற்றிய ஞானத்தில் வளர வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வாக்குறுதி தருபவராம் இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது வாக்குறுதிக்கு தகுதி உள்ளவர்களாக வாழவும், மக்கள் உம்மிடம் கொண்டு சேர்க்கவும் வரமருள வேண் டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. திட்டமிட்டு செயல்படுத்துபவராம் இறைவா,
   உலகில் வாழும் நாட்களில் உம்மைப் பற்றிய உண்மையைத் தேடவும், உம் திருமக னில் நீர் நிறைவேற்றிய மீட்புத் திட்டத்தைப் புரிந்துகொள்ளவும் மக்கள் அனைவருக்கும் வரமருள
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நல்வழி காட்டுபவராம் இறைவா,
   உமது இறைவார்த்தையை அறிவிக்கவும், கேட்கவும் தடையை ஏற்படுத்தும் அமைப்பு கள் உலகிலிருந்து மறையவும், நற்செய்தி பணிக்கு இடறலாக செயல்படும் மனிதர்கள் மனந்திரும்பவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. அமைதி அளிப்பவராம் இறைவா,
   உலகில் போர்கள், கலவரங்கள், அடக்கு
முறைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, அகதிகளாக வாழும் மக்கள் அனைவரும் உமது உதவியை வேண்டி, ஆறுதலடையும் வர மருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உணவளித்து காப்பவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும்
உம் திருமகனின் வார்த்தைகளைப் பின்பற்றி, உமது திருவுளத்தை எங்கள் வாழ்வாக்கிட வரமருள வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, July 13, 2013

ஜூலை 14, 2013

பொதுக்காலம் 15-ம் ஞாயிறு

முதல் வாசகம்: இணைச்சட்டம் 30:10-14
   மோசே மக்களை நோக்கிக் கூறியது: "உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழ இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவ ரிடம் திரும்பு. ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக் குப் புரியாதது இல்லை: உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை. நாம் அதைக் கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை. நாம் அதைக்கேட்டு நிறை வேற்றுமாறு, நமக்காக யார் கடல்கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை. ஆனால், நீ அதை நிறை வேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது: உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது."
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 1:15-20
   கிறிஸ்து இயேசு கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகா தவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழி யாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன. திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக் கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழுநிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புர வாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 10:25-37
   அக்காலத்தில், திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவை சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு இயேசு, "திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?" என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, "'உன் முழு இதயத் தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளா கிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்தி ருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக' என்று எழுதியுள்ளது" என்றார். இயேசு, "சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்" என்றார். அவர், தம்மை நேர்மை யாளர் எனக் காட்ட விரும்பி, "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: "ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒரு வர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறுபக்கம் விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமா ரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, 'இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்' என்றார். கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவ ருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப் படியே செய்யும்" என்று கூறினார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, July 11, 2013

ஜூலை 14, 2013

பொதுக்காலம் 15-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அடுத்திருப்பவர்களே,
   பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இறையன்பு மற்றும் பிறரன்பு கட்டளைகளை நம் வாழ்வில் செயல் படுத்த இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. நம்மை நாமே நேர்மையாளர்களாக எண்ணிக் கொள்ளாமல், கடவுளின் முன்னிலையில் நாம் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். இயேசுவின் வழியில், கடவுளுக்கும் மற்ற மனிதர்களுக்கும் அடுத்திருப்பவர்களாய் வாழ அழைக்கப்படுகிறோம். எரிகோ செல்லும் பாதையில் அடிபட்டுக் கிடந்தவரை கண்டுகொள்ளாமல் சென்ற யூத குருவையும், லேவி யரையும் போன்று மனிதநேயம் இல்லாதவர்களாய் நடந்துகொண்ட தருணங்களுக்காக மன்னிப்பு வேண்டுவோம். நல்ல சமாரியரைப் போன்று, தேவையில் இருப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாய் வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அடுத்திருப்பவர்களே,
   இன்றைய முதல் வாசகம், மோசே வழியாக ஆண்டவர் விடுக்கும் அழைப்பை எடுத் துரைக்கிறது. முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடவுளிடம் திரும்ப நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரால் கொடுக்கப்பட்ட கட்டளைகளையும் நியமங்களை யும் கடைபிடித்து வாழ மோசே அழைக்கிறார். கடவுளின் கட்டளையைத் தேடி விண் ணகத்துக்கோ, கடல் கடந்தோ நாம் செல்ல வேடியதில்லை என்பதை மோசே உணர்த்து கிறார். அது இறைவார்த்தையில் நம் அருகிலேயே உள்ளதை உணர்ந்து வாழ அழைக்கப் படுகிறோம். கட்டளைகளை கடைப்பிடித்து இறை உறவிலும், மனித உறவிலும் வளர வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அடுத்திருப்பவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்து வழியாக நாம் கடவு ளோடு ஒப்புரவாக்கப்பட்டிருப்பதைப் பற்றி பேசுகிறார். படைப்புகள் அனைத்தும் கிறிஸ்து இயேசுவுக்காக, அவர் வழியாகவே படைக்கப்பட்டன என்பதை உணர பவுல் அழைப்பு விடுக்கிறார். திருச்சபையின் தலையாக இருக்கும் கிறிஸ்துவின் வழியாகவே அனைத் தும் இணைந்து நிலைபெறுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். கடவுளின் முழு நிறைவான கிறிஸ்து இயேசுவின் வழியாக, பிற மனிதர்களுடனும் கடவுளுடனும் ஒப்புர வாக வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஒப்புரவாக்க அழைப்பவராம் இறைவா,
  
கிறிஸ்துவின் நற்கருணைப் பலியை நிறைவேற்றும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக் கள் அனைவரும், உலக மக்களை உம்மோடு ஒப்புரவாக்கும் பணியை சிறப்பாக ஆற்றும் வரத்தினை வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்புசெய்ய அழைப்பவராம் இறைவா,
   உலகெங்கும் சிற்றின்ப ஆசைகளில் மூழ்கி, எந்திரங்களோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும்
மக்கள், குடும்ப உறுப்பினர்களையும் அருகில் வசிப்பவர்களையும் அன்பு செய்து வாழும் மனநிலையை வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. பணியாற்ற அழைப்பவராம் இறைவா,
   எம் நாட்டில் ஏழ்மை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, போன்ற பல்வேறு பிரச் சனைகளால் கலங்கித் தவிப்போருக்கு உதவிபுரியும் நல்ல அரசியல் தலைவர்களை உரு வாக்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. உதவிபுரிய அழைப்பவராம் இறைவா,
   உலகின் பல பகுதிகளில் உடல் மற்றும் மனக் காயங்களால் அமைதி இழந்து வேதனை யுறும் மக்களை குணப்படுத்த உழைக்கும் நல்லுள்ளம் கொண்டவர்கள் பெருக உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. பின்பற்ற அழைப்பவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும்
உம் திருமகனைப் பின்பற்றி, இறையன்பாலும் பிறரன்பாலும் உறவுகளை வளர்க்கும் வரம் ஈந்திட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

Saturday, July 6, 2013

ஜூலை 7, 2013

பொதுக்காலம் 14-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 66:10-14
   எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைக ளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன். நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்க ளைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள். இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்; ஆண் டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.
இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 6:14-18
   சகோதர சகோதரிகளே, நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியா கவே, என்னைப் பொறுத்த வரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். விருத்த சேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பா வதே இன்றியமையாதது. இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்க ளாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக! இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம். ஏனெனில் என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம். சகோதர சகோதரிகளே, நம் ஆண்ட வர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.

நற்செய்தி வாசகம்: லூக்கா 10:1-12,17-20
   அக்காலத்தில் இயேசு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும் படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களி டையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழி யில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடைய வரே; வீடு வீடாய்ச் செல்லவேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொண் டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள். நீங் கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, 'எங் கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகி றோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்' எனச் சொல்லுங்கள். அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்." பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, "ஆண்டவரே, உமது பெயரைச் சொன் னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன" என்றனர். அதற்கு அவர், "வானத்திலி ருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவி கள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர் கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்" என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Thursday, July 4, 2013

ஜூலை 7, 2013

பொதுக்காலம் 14-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அனுப்பப்பட்டவர்களே,
   பொதுக்காலத்தின் பதினான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இயேசுவின் அழைப்பை ஏற்று இறையட்சியைப் பறைசாற்ற இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவ டையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்க நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்தவர்கள் அனைவரும் ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளைப் போன்று வாழ அனுப்பப்பட்டிருக்கிறோம் என்பதை உணர இயேசு அழைப்பு விடுக்கிறார். நாம் ஆண்டவருக்காக பணியாற்றும் அமைதியின் தூதர்களாக இந்த உலகில் செயல்பட இறைவன் அழைக்கிறார். நம் பெயர் விண்ணகத்தில் எழுதப் பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அனுப்பப்பட்டவர்களே,
   இன்றைய முதல் வாசகம், ஆண்டவர் தரும் நிறைவாழ்வின் மகிழ்ச்சியைப் பற்றி எடுத் துரைக்கிறது. எருசலேமுக்கு கிடைக்கும் ஆறுதலையும் அக்களிப்பையும் பற்றிய ஆண்ட வரின் இறைவாக்கை இங்கு காண்கிறோம். "ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய் வேன்" என்ற ஆண்டவரின் உறுதிமொழி, இறைவாக்கினர் எசாயா வழியாக வழங்கப்படு கிறது. "தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்: மார் பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்: மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்" என்கிற வாக்குறுதியை சுவைக்க நாம் அழைக்கப்படுகிறோம். இறைவனின் மக்களாகவும், இறை யாட்சியின் சாட்சிகளாகவும் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அனுப்பப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துவில் நாம் புதிய படைப்பு களாவதைப் பற்றி பேசுகிறார். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டவர்களாய் வாழ்வதன் அவசியத்தை அவர் நமக்கு உணர்த்துகிறார். வெளி அடையாளங்களைன்றி, உள்ளத்தின் அர்ப்பணிப்பையே ஆண்டவர் விரும்புகிறார் என்பதை எடுத்துரைக்கிறார். சிலுவையில் அறையுண்ட இயேசுவுக்காக அடிமை வாழ்வை ஏற்றுக்கொண்ட பவுல், தன் காய்த்தழும்புகளைக் குறித்து எடுத்துரைக்கிறார். கிறிஸ்துவுக்காக துன்புறுவதைப் பற்றி பெருமை பாராட்டுகிறார். தாழ்மையுடன் நம்மை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து, அவரது அருளின் மக்களாக வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. பணியாற்ற அனுப்புபவராம் இறைவா,
  
உமது பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத் தார் அனைவரும், உமது அறுவடையை மிகுதியாக்கும் உண்மையுள்ள பணியாளர்களாக செயல்பட உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. நிறைவாழ்வு அருள்பவராம் இறைவா,
   உலகெங்கும்
ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளைப் போன்று வாழ்ந்து கொண்டிருக் கும் கிறிஸ்தவர்கள் அனைவரையும், உமது இறையாட்சியின் கருவிகளாக மாற்றி உல கிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. ஆறுதல் தருபவராம் இறைவா,
   உமது உண்மையின் ஆட்சியை எம் நாட்டில் நிறுவுவதற்காக அனைத்து மாநிலங்களி லும் நற்செய்தி பணியாற்றும் மறைபணியாளர்கள் வழியாக, மாற்று சமய மக்கள் உமது அன்பையும் ஆறுதலையும் சுவைக்க அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. தேற்றரவு அளிப்பவராம் இறைவா,
  உலகில் பல்வேறு சூழ்நிலைகளால் அமைதி இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும் உம்மை நாடி வரவும், தாயைப் போன்று தேற்றரவு அளிக்கும் உமது அன்பில் தாலாட்டப் படவும் வரம் தருமாறு உம்மை மன்றாடுகிறோம்.

5. மகிழ்ச்சியின் ஊற்றாம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமக்கு உகந்த நற் செய்தி பணியாளர்களாக வாழ்ந்து,
இறையாட்சியின் மகிழ்ச்சியைப் பறைசாற்றுபவர்க ளாக வாழ துணைநிற்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.