Wednesday, February 29, 2012

மார்ச் 4, 2012

தவக்காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
கடவுளின் அன்பு மக்களே,
   மாட்சிமிகு கடவுளின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம்.
இன்றைய திருவழிபாடு நாம் கடவுளுக்கு உரியவர்களாக உருமாற நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருச்சட்டமும் இறைவாக்குகளும் இயேசுவில் நிறைவேறின. அவருடைய இறை மாட்சியில் நாமும் பங்குபெற வேண்டுமென்றால், இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிசாய்த்து வாழ வேண்டும் என்பதை நாம் உணர்வோம். உருமாற்றம் பெற்று இயேசு வின் சாட்சிகளாய் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பெற்றவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், ஈசாக்கை பலியிடுமாறு கடவுள் ஆபிரகாமை பணித்த நிகழ்வை வாசிக்க கேட்கிறோம். வயது முதிர்ந்த காலத்தில் பெற்ற ஒரே மகனையும் கடவுளுக்காக கையளிக்கத் துணிகிறார் ஆபிரகாம். ஆண்டவர் அப்பலியைத் தடுத்து, "உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக் கொள்வர்" என்று தனது மீட்புத் திட்டத்தை அவருக்கு முன்னறிவிக்கிறார். ஆபிரகாமைப் போல கடவுளின் திட்டத்திற்கு கீழ்ப்படிந்து வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பெற்றவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுள் தம் ஒரே மகனான இயேசுவை நமக்காக கையளித்ததை திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார். கடவுளின் அரவணைப்பில் உள்ள நாம் இயேசுவின் பரிந்துரைக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து, அவருக்கு உகந்தவர்களாய் வாழும் வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மாட்சி மிகுந்தவரா இறைவா,
   ஆபிரகாம் வழியாக நீர் வாக்களித்த மீட்பின் கருவியாக செயல்படும் திருச்சபை, உமக்கு ஏற்ற விதத்தில் உருமாற்றம் அடைய திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோர் பொதுநிலையினருக்கு எடுத்துக்காட்டாக வாழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மகத்துவம் மிக்கவரா இறைவா,
   உமது திருமகனின் மீட்புச் செயல் வழியாக, உலக மக்கள் அனைவரையும் உம்மோடு ஒப்புரவாக்க நீர் கொண்ட திருவுளம், உலக மக்களில் நிறைவைக் காணுமாறு உழைக்க தேவையான ஆற்றலை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மீட்பு அளிப்பவரான இறைவா,
   எங்கள் நாட்டினில் உள்ள தவறான சமய நெறிகள், வன்முறைக் கலாச்சாரங்கள், கொள்ளைச் சம்பவங்கள், சாதிப் பிரிவினைகள், பயங்கரவாதக் குழுக்கள் அனைத்தும் மறைந்து, மக்கள் உமது மாட்சிமிகு மீட்பைக் கண்டுணர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நிறைவு தருபவரா இறைவா,
   இவ்வுலகின் வாழ்க்கைப் போராட்ங்களால் மன அமைதி இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும் உமது வார்த்தைகளுக்கு செவிசாய்த்து, உம்மிலும் நீர் அளிக்கும் மீட்பிலும் நிறைவு காண்பவர்களாய் வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உருமாற அழைப்பவரா இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் உமது இறை மாட்சிக்கு உரியவர்களாக உருமாற்றம் பெற்று, உமக்கு என்றும் சாட்சிகளாக வாழும் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, February 24, 2012

பிப்ரவரி 26, 2012

தவக்காலம் முதல் ஞாயிறு

முதல் வாசகம்: தொடக்கநூல் 9:8-15
   கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: "இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும் பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது." அப்பொழுது கடவுள், "எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லா வற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். எனக் கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும். மண்ணுலகின்மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது, எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்ப தற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது" என்றார்.
இரண்டாம் வாசகம்: 1 பேதுரு 3:18-22
   அன்பிற்குரியவர்களே, கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார். அந்நிலையில் அவர் காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார். நோவா பேழையைச் செய்து கொண்டிருந்த நாள்களில், பொறுமையோடு காத்துக்கொண்டிருந்த கடவுளை அந்த ஆவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர், அதாவது எட்டுப் பேர் மட்டும் அந்தப் பேழை யில், தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர். அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்து வின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பு அளிக்கிறது. அவர் வான தூதர்களையும் அதிகாரங்களையும் வல்லமைகளையும் தமக்குப் பணிய வைத்து, விண் ணுலகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 1:12-15
  அக்காலத்தில் தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பாலைநிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர். யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்'' என்று அவர் கூறினார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, February 22, 2012

பிப்ரவரி 26, 2012

தவக்காலம் முதல் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நம் ஆண்டவரில் அன்புக்குரியவர்களே,
   உடன்படிக்கையின் கடவுளின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் முதல் ஞாயிறை சிறப்பிக் கின்றோம். மனமாற்றத்தின் காலத்திற்குள் நுழைந்திருக்கிறோம்.
இன்றைய திருவழிபாடு கடவுளின் மீட்பைப் பற்றி சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்றால் நாம் சோதனைகளை எதிர்கொண்டாக வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாய், நமது வாழ்க்கை சோதனைகளில் வெற்றிபெற இறைவனின் உதவி வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், பேரழிவின் வெள்ளப்பெருக்கிற்கு பின்பு நோவாவுடனும் அவர் புதல்வருடனும் ஆண்டவராகிய கடவுள் செய்த உடன்படிக்கையைப் பற்றி பார்க் கிறோம். கடந்த காலத் துன்பங்களை மறந்து, இறைவன் தரும் புது வாழ்வை ஏற்கும் மனதுடன் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில், நமது பாவங்களுக்காக இறந்த இயேசு கிறிஸ்துவின் மீட்பை, அவரது உயிர்த்தெழுதலினால் திருமுழுக்கு வழியாக நாம் பெற்றுக்கொள் கிறோம் என்று பேதுரு எடுத்துரைக்கிறார். திருமுழுக்கில் கடவுளுக்கு நாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவர்களாக வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவி கொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. உடன்படிக்கையின் இறைவா,
   நீர் திருச்சபையோடு செய்துகொண்ட உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டு, உமக்கு பிரமாணிக்கமாக வாழ திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத் தார், பொதுநிலையினர் அனைவருக்கும் உமது அருளாசிகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மீட்பு அளிப்பவராம் இறைவா,
   உமது திருமகன் வழியாக உலக மக்கள் அனைவரோடும் செய்துள்ள உடன்படிக்கையை புதுப்பித்து, உம்மை ஏற்காத மக்கள் எல்லோரும் உமது மீட்புத் திட்டத்தில் பங்குபெற உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. புத்துயிர் வழங்குபவராம் இறைவா,
   எங்கள் நாட்டில் நிலவும் தீவிரவாதம், மதவாதம், சாதிப் பிரிவினைகள், சண்டை சச்சரவுகள் போன்றவை நீங்கி, மக்கள் அமைதியுடன் வாழும் நிலை உருவாக துணை நிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. புதுவாழ்வு தருபவராம் இறைவா,
   இவ்வுலக வாழ்க்கைப் போராட்டத்தில் பல்வேறு நோய்கள், பிரச்சனைகள், துன்பங் களால் வருந்தும் மக்கள் அனைவரும் உமது இரக்கத்தால் புதுவாழ்வைப் பெற்றுக் கொள்ள துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மனந்திரும்ப அழைப்பவராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் மனமாற்றத்தின் பாதையில் இறையாட்சிக்கு உரியவர்களாக வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, February 17, 2012

பிப்ரவரி 19, 2012

பொதுக்காலம் 7-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 43:18-19,21-22,24-25
   ஆண்டவர் கூறியது: முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதிருங்கள்; இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்க வில்லையா? பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர். ஆனால் யாக்கோபே, நீ என்னை நோக்கி மன்றாடவில்லை; இஸ்ரயேலே, என்னைப் பற்றிச் சலிப்புற்றாயே! உன் பாவங்களால் என்னைத் தொல்லைப்படுத்தினாய்; உன் தீச்செயல்களால் என்னைச் சலிப்புறச் செய்தாய். நான், ஆம், நானே, உன் குற்றங்களை என் பொருட்டுத் துடைத் தழிக்கின்றேன்; உன் பாவங்களை நினைவிற் கொள்ளமாட்டேன்.
இரண்டாம் வாசகம்: 2 கொரிந்தியர் 1:18-22
   சகோதர சகோதரிகளே, நான் ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும் `இல்லை' என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராய் இருப்பதுபோல் நான் சொல்வ தும் உண்மையே. நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும் `இல்லை' என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் 'ஆம்' என உண்மையையே பேசுபவர். அவர் சொல்லும் 'ஆம்' வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறு கின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப் புகழும்போது அவர் வழியாக 'ஆமென்' என சொல்லுகிறோம். கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; இவ்வாறு கிறிஸ்து வோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள் பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 2:1-12
  சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயில் அருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டு வந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கி னர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன'' என்றார். அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், "இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?'' என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர். உடனே, அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்? முடக்குவாதமுற்ற இவனிடம் 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா? 'எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட' என்பதா? எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்'' என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ'' என்றார். அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப் போய், "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே'' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, February 15, 2012

பிப்ரவரி 19, 2012

பொதுக்காலம் 7-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறை இயேசுவில் இனியோரே,
   நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் பொதுக்காலத்தின் ஏழாம் ஞாயிறை சிறப்பிக் கின்றோம். இன்றைய திருவழிபாடு கடவுளின் மாண்புமிக்க செயல்களுக்காக, நாம் அவரைப் புகழ அழைப்பு விடுக்கிறது. அனைத்து விதமான தடைகளையும் தாண்டி இறைவனின் பிரசன்னத்தில் நுழைய இன்று
நாம் கற்றுக்கொள்வோம். அப்பொழுது இறைவன் நம் விசுவாசத்தைக் கண்டு, நமக்கு புது வாழ்வினை வழங்குவார். நமக்கு வரும் துன்பங்கள், நோய்கள் போன்ற இடையூறுகளிலும் கடவுளின் பிரசன்னத்தை நாடி, அவரது மாட்சியின் செயல்களைக் காண வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
இனியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், நமது குற்றங்களை மன்னித்து நமக்கு புது வாழ்வு வழங்குவதாக இறைவன் வாக்களிப்பதை நாம் காண்கிறோம். பாலை நிலத்திலும் பாதை அமைத்து, பாழ் நிலத்திலும் நீரோடைகளைத் தோன்றச் செய்வதாக அவர் வாக்களிக் கின்றார். அவரது மாட்சிமிகு செயல்களைக் கண்டு வியந்து போற்றுபவர்களாய் வாழ உறுதி கொண்டு, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இனியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுளின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறு கின்றன என்றும், ஆகவே அவர் புகழுக்குரியவர் என்றும் திருத்தூதர் பவுல் எடுத்துரைக் கிறார். கடவுள் உண்மை உள்ளவராய் இருப்பது போன்று, நாமும் உண்மையுள்ளவர் களாய் வாழும் உறுதியேற்று, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வாக்குறுதி அளிப்பவராம் இறைவா,
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவ ரும் உமது வாக்குறுதிகளுக்கு தகுதி உள்ளவர்களாக வாழ்ந்து, இறைமக்கள் அனைவரை யும் உம் வாக்குறுதிகளுக்கு தகுதி பெறுபவர்களாக மாற்ற உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. புகழுக்கு உரியவராம் இறைவா,
   உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் உமது மாட்சிமிகு செயல்கள் அனைத்தையும் மனதார ஏற்று, உண்மை கடவுளாகிய உம்மைப் புகழ்ந்து ஏற்றுக்கொள்ள உதவ வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. புதுவாழ்வு வழங்குபவராம் இறைவா,
   எங்கள் நாட்டில் வாழும் மக்கள் அனைவரும், தங்கள் மதம் மற்றும் நம்பிக்கை சார்ந்த தடைகளைத் தகர்த்தெறிந்து, உண்மை கடவுளாகிய உம்மை நாடித் தேடி வந்து, உம்மில் விசுவாசம் கொள்ள உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. குணம் அளிப்பவராம் இறைவா,
   நோய்கள், மன வேதனைகள், கடன் தொல்லைகள், வேலையின்மை, குழந்தை யின்மை, உணவின்மை, தனிமை, முதுமை போன்ற பல்வேறு துன்பங்களில் உமது உதவியை நாடும் எங்கள் சகோதர, சகோதரிகளை முழுமையாக குணப்படுத்த வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மாட்சியின் மன்னராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் உமது மாட்சியை நாடுபவர்களாக வாழவும், மற்றவர்கள் முன் னிலையில் உம்மைப் புகழ்ந்தேற்றவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, February 10, 2012

பிப்ரவரி 12, 2012

பொதுக்காலம் 6-ம் ஞாயிறு

முதல் வாசகம்: லேவியர் 13:1-2,44-46
   அந்நாள்களில் ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது: "ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண் படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டுவரப்பட வேண்டும். அவர் தொழுநோயாளி. அவர் தீட்டுள்ளவர். அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார். ஏனெ னில் நோய் அவர் தலையில் உள்ளது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு, 'தீட்டு, தீட்டு' என குர லெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்."
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 10:31-11:1
   சகோதர சகோதரிகளே, நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யூதருக்கோ கிரேக்க ருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள். நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன் தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன். நான் கிறிஸ் துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 1:40-45
  ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர் மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்பு கிறேன், உமது நோய் நீங்குக!" என்றார். உடனே தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார். ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களி லிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி

Wednesday, February 8, 2012

பிப்ரவரி 12, 2012

பொதுக்காலம் 6-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே,
   நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய திருவழிபாடு கடவுளின் விருப்பத்திற்கு நம்மையே கையளிக்க அழைப்பு விடுக்கிறது. 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்ற தாழ்ச்சி யுள்ள வேண்டுதலை ஆண்டவர் முன் சமர்ப்பிக்க இன்று
நாம் கற்றுக்கொள்வோம். அப்பொழுது இறைவன் நம்மீது கருணை கூர்ந்து, நமக்கு நிறைவான நலன்களைக் கட்டளையிடுவார். நமக்கு வரும் துன்பங்கள், நோய்கள், இடையூறுகளில் கடவுளின் அருட்கரம் நம்மை வழிநடத்த வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், தொழுநோயாளர் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் வழங்குவதை நாம் காண்கி றோம். மற்றவர்களுக்கு பரவக்கூடிய ஒரு தொற்றுநோயாக தொழுநோய் இருந்ததால், தொழுநோயாளர்கள் சமூகத்தில் இருந்து விலகி இருக்குமாறு ஆண்டவர் அறிவுறுத் துகிறார். நமது தீட்டான தீய குணங்களை மற்றவர்களும் கற்றுக்கொள்ளாத வகையில், நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாய், இந்த வாசகத் திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில், நமது செயல்கள் அனைத்தும் கடவுளின் மாட்சிக் காகவே செய்யப்பட வேண்டும் என்று திருத்தூதர் பவுல் அறிவுரை வழங்குகிறார். எப்பொழுதும் நான், எனது என்றே இறைவனிடம் கேட்டு பழகிவிட்ட நாம், அவருக்காக என்ன செய்தோம் என்பதை சிந்திக்க அழைக்கப்படுகிறோம். நாம் கடவுளுக்கு விருப்ப மானவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாய், இந்த வாசகத் திற்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மன்னிப்பு அளிப்பவராம் இறைவா,
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு உகந்த வழியில் வாழ்ந்து, இறைமக்கள் அனைவரையும் பாவம் என்ற தொற்றுநோயிலிருந்து விடுவித்து வழிநடத்த உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மனமாற்றம் அளிப்பவராம் இறைவா,
   உலகெங்கும் தொற்றுநோயாக பரவி இருக்கும் தீவிரவாதம், மதவாதம், வன்முறை, லஞ்சம், ஊழல், அடக்குமுறை போன்றவை, உமது அருளால் அழிந்து ஒழிய உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நலன்கள் அளிப்பவராம் இறைவா,
   எங்கள் நாட்டை வழிநடத்தும் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள், தீய வழிகளில் புகழ் அடைவதையும், அடக்குமுறைகளால் தங்கள் செல்வாக்கை நிலைநாட்டுவதையும் விரும்பாமல், மக்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டவர்களாய் வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நல்வாழ்வு அளிப்பவராம் இறைவா,
   நோய்கள், மன வேதனைகள், கடன் தொல்லைகள், வேலையின்மை, குழந்தை யின்மை, உணவின்மை, தனிமை, முதுமை போன்ற பல்வேறு துன்பங்களால் வருந்தும் எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு முழுமையாக நலம் அளித்து உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மகிழ்ச்சி அளிப்பவராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் உமக்கு உகந்தவர்களாக வாழவும், துன்ப வேளைகளில் உமது உதவியைப் பெற்று மகிழவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, February 3, 2012

பிப்ரவரி 5, 2012

பொதுக்காலம் 5-ம் ஞாயிறு

முதல் வாசகம்: யோபு 7:1-4,6-7
   யோபு கூறியது: மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூர்வீர்; என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா.
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 9:16-19,22-23
   சகோதர சகோதரிகளே, நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம்கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவ னானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெற வேண்டி, நற்செய்திக்காக எல்லா வற்றையும் செய்கிறேன்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 1:29-39
  அக்காலத்தில் இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப்பற்றி இயேசு விடம் சொன்னார்கள். இயேசு அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கி னார். காய்ச்சல் அவரைவிட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில் முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக்கொண் டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், "எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்கள். அதற்கு அவர், "நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்" என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடு முழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி