Wednesday, February 22, 2012

பிப்ரவரி 26, 2012

தவக்காலம் முதல் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
நம் ஆண்டவரில் அன்புக்குரியவர்களே,
   உடன்படிக்கையின் கடவுளின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் முதல் ஞாயிறை சிறப்பிக் கின்றோம். மனமாற்றத்தின் காலத்திற்குள் நுழைந்திருக்கிறோம்.
இன்றைய திருவழிபாடு கடவுளின் மீட்பைப் பற்றி சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமென்றால் நாம் சோதனைகளை எதிர்கொண்டாக வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாய், நமது வாழ்க்கை சோதனைகளில் வெற்றிபெற இறைவனின் உதவி வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், பேரழிவின் வெள்ளப்பெருக்கிற்கு பின்பு நோவாவுடனும் அவர் புதல்வருடனும் ஆண்டவராகிய கடவுள் செய்த உடன்படிக்கையைப் பற்றி பார்க் கிறோம். கடந்த காலத் துன்பங்களை மறந்து, இறைவன் தரும் புது வாழ்வை ஏற்கும் மனதுடன் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில், நமது பாவங்களுக்காக இறந்த இயேசு கிறிஸ்துவின் மீட்பை, அவரது உயிர்த்தெழுதலினால் திருமுழுக்கு வழியாக நாம் பெற்றுக்கொள் கிறோம் என்று பேதுரு எடுத்துரைக்கிறார். திருமுழுக்கில் கடவுளுக்கு நாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவர்களாக வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவி கொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. உடன்படிக்கையின் இறைவா,
   நீர் திருச்சபையோடு செய்துகொண்ட உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டு, உமக்கு பிரமாணிக்கமாக வாழ திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத் தார், பொதுநிலையினர் அனைவருக்கும் உமது அருளாசிகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மீட்பு அளிப்பவராம் இறைவா,
   உமது திருமகன் வழியாக உலக மக்கள் அனைவரோடும் செய்துள்ள உடன்படிக்கையை புதுப்பித்து, உம்மை ஏற்காத மக்கள் எல்லோரும் உமது மீட்புத் திட்டத்தில் பங்குபெற உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. புத்துயிர் வழங்குபவராம் இறைவா,
   எங்கள் நாட்டில் நிலவும் தீவிரவாதம், மதவாதம், சாதிப் பிரிவினைகள், சண்டை சச்சரவுகள் போன்றவை நீங்கி, மக்கள் அமைதியுடன் வாழும் நிலை உருவாக துணை நிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. புதுவாழ்வு தருபவராம் இறைவா,
   இவ்வுலக வாழ்க்கைப் போராட்டத்தில் பல்வேறு நோய்கள், பிரச்சனைகள், துன்பங் களால் வருந்தும் மக்கள் அனைவரும் உமது இரக்கத்தால் புதுவாழ்வைப் பெற்றுக் கொள்ள துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மனந்திரும்ப அழைப்பவராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து, நாங்கள் மனமாற்றத்தின் பாதையில் இறையாட்சிக்கு உரியவர்களாக வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.