Friday, February 17, 2012

பிப்ரவரி 19, 2012

பொதுக்காலம் 7-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 43:18-19,21-22,24-25
   ஆண்டவர் கூறியது: முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதிருங்கள்; இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்க வில்லையா? பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர். ஆனால் யாக்கோபே, நீ என்னை நோக்கி மன்றாடவில்லை; இஸ்ரயேலே, என்னைப் பற்றிச் சலிப்புற்றாயே! உன் பாவங்களால் என்னைத் தொல்லைப்படுத்தினாய்; உன் தீச்செயல்களால் என்னைச் சலிப்புறச் செய்தாய். நான், ஆம், நானே, உன் குற்றங்களை என் பொருட்டுத் துடைத் தழிக்கின்றேன்; உன் பாவங்களை நினைவிற் கொள்ளமாட்டேன்.
இரண்டாம் வாசகம்: 2 கொரிந்தியர் 1:18-22
   சகோதர சகோதரிகளே, நான் ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும் `இல்லை' என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராய் இருப்பதுபோல் நான் சொல்வ தும் உண்மையே. நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும் `இல்லை' என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் 'ஆம்' என உண்மையையே பேசுபவர். அவர் சொல்லும் 'ஆம்' வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறு கின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப் புகழும்போது அவர் வழியாக 'ஆமென்' என சொல்லுகிறோம். கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; இவ்வாறு கிறிஸ்து வோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள் பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 2:1-12
  சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயில் அருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டு வந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கி னர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன'' என்றார். அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், "இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?'' என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர். உடனே, அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்? முடக்குவாதமுற்ற இவனிடம் 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா? 'எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட' என்பதா? எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்'' என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ'' என்றார். அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப் போய், "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே'' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

சிந்தனை: வத்திக்கான் வானொலி