Friday, October 26, 2012

அக்டோபர் 28, 2012

பொதுக்காலம் 30-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எரேமியா 31:7-9 
   ஆண்டவர் கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்: மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; 'ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்!' என்று பறைசாற்றுங்கள். இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்: மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் காலூனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்; பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர். அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 5:1-6
   சகோதர சகோதரிகளே,  தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார். அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாயிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறி தவறி நடப்போருக்கும் பரிவு காட்டக் கூடியவராயிருக்கிறார். அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்தது போன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வர வேண்டும். அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை. நீர் என் மைந்தர்: இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன் என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார். இவ்வாறே மற்றோரிடத்தில், மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே என்றும் கூறப்பட்டுள்ளது.

நற்செய்தி வாசகம்: மாற்கு 10:46-52
   இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, 'இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்' என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், 'தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்' என்று இன்னும் உரக்கக் கத்தினார். இயேசு நின்று, 'அவரைக் கூப்பிடுங்கள்' என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, 'துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்' என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?' என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், 'ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்' என்றார். இயேசு அவரிடம், 'நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று' என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Friday, October 19, 2012

அக்டோபர் 21, 2012

பொதுக்காலம் 29-ம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 53:10-11 
   அந்நாள்களில் ஆண்டவரின் துன்புறும் ஊழியரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளர் ஆக்குவார்; அவர்களின் தீச்செயல் களைத் தாமே சுமந்து கொள்வார்.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 4:14-16
   சகோதர சகோதரிகளே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கை இடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின் மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம் மைப் போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத் தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

நற்செய்தி வாசகம்: மாற்கு 10:35-45
   அக்காலத்தில் செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று அவரிடம், "போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்'' என்றார்கள். அவர் அவர்களிடம், "நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, "நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புற மும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்'' என்று வேண்டினர். இயேசுவோ அவர்களி டம், "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்க ளால் பெற இயலுமா?'' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "இயலும்'' என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, "நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத் திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்'' என்று கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், "பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களி டையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்ப தற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்'' என்று கூறினார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, October 17, 2012

அக்டோபர் 21, 2012

பொதுக்காலம் 29-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசுவின் துன்பக் கிண்ணத்தில் பங்குபெறுவதன் அவசியத்தை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனிதராய் பிறந்த அனைவரும் துன்பத்தை ஏற்பதன் வழியாக, இன்பத்தின் மேன்மையை உணர அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்து தனது சிலுவை மரணத்தின் வழியாக உயிர்ப்பின் மாட்சியை அடைந்தார். இறைத்தந்தையின் இரக்கத் தைப் பெற்று கிறிஸ்துவின் வலப்பக்கத்தில் அமருமாறு, தூய வாழ்வு வாழவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்த இறைமகன் இயேசுவைப் பின்பற்றி வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
     இன்றைய முதல் வாசகம் ஆண்டவரின் துன்புறும் ஊழியரைப் பற்றிய அறிவிப்பைத் தருகிறது. துன்புறும் ஊழியராம் இயேசு, மக்களின் பாவங்களைப் போக்குமாறு தன் உயி ரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார் என்ற உண்மை தெளிவுபடுத்தப்படுகிறது. இயேசுவின் துன்பம் பலருக்கும் மீட்பை அளிக்கும் என்பது முன்னறிவிக்கப்படுகிறது. இயேசுவைப் பின்பற்றி நேர்மையாளர்கள் ஆகும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம் இறைமகன் இயேசுவும் நமது துன்பங்களில் பங்கேற்றார் என்ற உண்மையை எடுத்துரைக்கிறது. நமது துன்ப வேளையில் நாம் அவரது உதவியைத் துணிவுடன் நாடுமாறு திருமுக ஆசிரியர் அழைப்பு விடுக்கிறார். எல்லா வகையிலும் சோதிக்கப்பட்டாலும், பாவம் செய்யாமல் வாழ்ந்த இயேசுவைப் பின்பற்றி வாழ நாம் அழைக்கப்படுகிறோம். நம் தலைமைக் குருவாம் இயேசுவின் உதவியைத் துணிவுடன் நாடும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. பணியாற்ற அழைப்பவராம் இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், அதிகாரம் செலுத்து பவர்களாய் இல்லாமல், மக்களுக்கு தொண்டு செய்பவர்களாய் வாழும் தூய உள்ளத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அதிகாரத்தை வழங்குபவராம் இறைவா,
  உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் அதிகாரத்தின் பொறுப்பை உணர்ந்தவர்களாய், மக்களுக்காக அமைதியான உலகத்தை உருவாக்க உழைப்பவர்களாய்
வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அருள்மழை பொழிபவராம் இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும் கிறிஸ்துவின் மேன்மையை  உணர்ந்து கொள்ளவும், தனது சிலுவை மரணத்தின் வழியாக அவர் பெற்றுத் தந்த மீட்பின் பலன்களை உரிமை யாக்கி கொள்ளவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆறுதல் தருபவராம் இறைவா,
   உலகில் வறுமை, நோய், தனிமை, முதுமை, இல்லாமை, இயலாமை போன்ற பல துன்பங்களால் வேதனையுறும் மக்கள் அனைவரும், உமது ஆறுதலைப் பெற்று மகிழச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மீட்பு அளிப்பவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமது திருமகனைப் பின்பற்றி, துன்பங்களின் நடுவிலும் தூய வாழ்வு வாழத் தேவையான அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, October 12, 2012

அக்டோபர் 14, 2012

பொதுக்காலம் 28-ம் ஞாயிறு

முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 7:7-11 
   நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை வேண்டி னேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக் கல்லும் அதற்கு ஈடில்லை; அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்கு முன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும். உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன்மீது அன்பு கொண்டேன்; ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது. ஞானத்தோடு எல்லா நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 4:12-13
   சகோதர சகோதரிகளே, கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்கு குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்க ளுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்க வேண்டும்.

நற்செய்தி வாசகம்: மாற்கு 10:17-30
   அக்காலத்தில் இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரி டம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, "நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம், "நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? 'கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக் காதே; உன் தாய் தந்தையை மதித்து நட'' என்றார். அவர் இயேசுவிடம், "போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்'' என்று கூறினார். அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்'' என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத் தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிக வும் கடினம்'' என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, "பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட் படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது'' என்றார். சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?'' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படி யல்ல, கடவுளால் எல்லாம் இயலும்'' என்றார். அப்போது பேதுரு அவரிடம், "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே'' என்று சொன்னார். அதற்கு இயேசு, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவ ரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலை வாழ்வையும் பெறாமல் போகார்'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, October 10, 2012

அக்டோபர் 14, 2012

பொதுக்காலம் 28-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். கடவுளைவிட உலகப் பொருட்களில் அதிகப் பற்று வைக்கும் எவரும் இறையாட்சில் நுழைய முடியாது என்பதை உணர இன்றைய திரு வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனிதர்களாகிய நாம் அனைவரும் கடவுளை அறிந்து, அவரை அன்புசெய்து வாழவே படைக்கப்பட்டிருக்கிறோம். இறை உறவிலும், மனித உறவிலும் நாம் வளர்ச்சி காண கடவுள் வழங்கியுள்ள பத்து கட்டளைகள் நமக்கு வழிகாட்டுதலாக அமைந்துள்ளன. அவற்றைச் சுருக்கி ஒரே அன்பு கட்டளையாக இயேசு நமக்கு வழங்கினார். நமது அன்பு செயல் வடிவம் பெறும் பொழுதுதான் நாம் இறையாட் சிக்கு நெருக்கமானவர்களாக மாற முடியும். செல்வம், உறவு, புகழ் என எது அன்புக்குத் தடையாக இருந்தாலும் அங்கு இறையாட்சி தடுக்கப்படுகிறது. உலகப் பொருட்களைப் புறக்கணித்து இறையாட்சியை விரும்பித் தேடும் நல்ல மனம் வேண்டி, இந்த திருப்பலி யில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம் ஞானத்தின் மேன்மையைப் பற்றி எடுத்துரைக்கிறது. பொன் னும் வெள்ளியும் ஞானத்துக்கு முன் மண்ணைப் போன்று இருப்பதாக சாலமோன் கூறுவதைக் காண்கிறோம். அரசப் பதவியின் செங்கோலும் அரியணையும் ஞானத்துக்கு முன் ஒன்றுமில்லாதது என்று குறிப்பிடுகிறார். ஞானத்தால் அனைத்துவித நலன்களும் தனக்கு கிடைத்ததாகவும் சாலமோன் எடுத்துரைக்கிறார். நாமும் இறைவனிடம் ஞானத் தைக் கேட்டுப் பெறுபவர்களாய் வாழும் வரம் கேட்டு, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறைவனுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம் இறைவார்த்தையின் மேன்மையைப் பற்றி எடுத்துரைக் கிறது. கடவுளின் வார்த்தை உயிருள்ளதும், ஆற்றல் வாய்ந்ததுமாக உள்ளது என்பதை திருமுக ஆசிரியர் விளக்குகிறார். எண்ணங்களை சீர்தூக்கிப் பார்க்கும் இறைவார்த் தைக்கு உண்மையுள்ளவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்ற உள்ளுணர்வோடு செயல்படும்போது, நாம் கடவுளுக்கு உகந்த தூய வாழ்வு வாழ முடியும். இறையாட்சியில் நுழையத் தகுதியுடையவர்களாய் மாற வரம் கேட்டு, இவ்வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஞானத்தின் ஊற்றாம் இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பெற்று, திருச்சபையின் மக்கள் அனைவரையும் ஞானத்தில் வழிடத்த தேவையான அருளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வாழ்வின் ஊற்றாம் இறைவா,
  உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் அனைவரும் மக்களை வாழ்வின் பாதை யில் வழிநடத்தவும், போர், தீவிரவாதம், வன்முறை, கலவரம் போன்ற அழிவுக்குரிய செயல்களில் இருந்து மக்களை விலக்கிப் பாதுகாக்கவும் தூண்டுதல் அளிக்க
வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்மையின் ஊற்றாம் இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மை, நீதி, அமைதி உண்மை ஆகியவற்றை விரும் பித் தேடவும், அதன் வழியாக உமது உண்மையான அன்பையும் இரக்கத்தையும் உணர வும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நீதியின் ஊற்றாம் இறைவா,
   உலகில் பண ஆசை, பதவி மோகம், மத வெறி, தன்னலம், இன வெறி போன்ற காரணங் களால் நீதி மறுக்கப்படும் இடங்கள் அனைத்திலும் உம் இறையாட்சியின் மதிப்பீடுகள் விதைக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மீட்பின் ஊற்றாம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உலகப் பொருட்கள் மீதான நாட்டங்களில் இருந்து விலகி, உமக்கு உகந்த வாழ்வு வாழ்ந்து இறையாட்சியை உரிமையாக்கிக்கொள்ளும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Friday, October 5, 2012

அக்டோபர் 7, 2012

பொதுக்காலம் 27-ம் ஞாயிறு

முதல் வாசகம்: தொடக்க நூல் 2:18-24 
   அனைத்தையும் படைத்து முடித்த பின் ஆண்டவராகிய கடவுள், "மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்'' என்றார். ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை. ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார். அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்'' என்றான். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 2:9-11
   சகோதர சகோதரிகளே, நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்று தாழ்ந்த வராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவ ருக்கு முடியாக சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவ ருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்படவேண்டியிருந்தது. கடவுள் எல்லாவற்றை யும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பிய போது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழிநடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே. தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்க ளைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை.

நற்செய்தி வாசகம்: மாற்கு 10:2-16
   அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கி விடு வது முறையா?'' என்று கேட்டு அவரைச் சோதித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழி யாக, "மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?'' என்று கேட்டார். அவர்கள், "மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள் ளார்'' என்று கூறினார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், 'ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உட லாய் இருப்பர்.' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' என்றார். பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவ ரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கண வரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்'' என்றார். சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று, அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறை யாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3

Wednesday, October 3, 2012

அக்டோபர் 7, 2012

பொதுக்காலம் 27-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இறையாட்சிக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தேழாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவ ரையும் அன்புடன் அழைக்கிறோம். நாம் அனைவரும் உறவில் ஒன்றித்திருக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனிதர்கள் எல்லோரும் கடவுளின் படைப்பு களாகிய இயற்கையோடும், மற்ற மனிதர்களோடும் ஒன்றித்து வாழ வேண்டுமென இன் றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன. சிறப்பாக அனைத்து உறவுகளுக்கும் உயிர் கொடுக்கும் திருமண உறவு பற்றி இயேசு பேசுகிறார். கணவனும் மனைவியும் அன்பில் ஒன்றித்திருக்க கடவுளால் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்று இயேசு அறிவுறுத்துகிறார். அதே வேளையில், குழந் தைகளைப் போல தூய உள்ளம் கொண்டவர்களுக்கே இறையாட்சியில் இடம் கிடைக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார். சிறு பிள்ளைகளைப் போன்று இறையாட்சியை ஏற்றுக்கொள்ளும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறையாட்சிக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகம் முதல் மனிதனான ஆதாம் இயற்கையோடும் ஏவாளோடும் கொண்டிருந்த உறவைப் பற்றி எடுத்துரைக்கிறது. விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பெயரிட்ட மனிதன், தனக்குத் தகுந்த ஒரு துணையைக் காணாமல் தவிப்பதை கடவுள் உணர்கிறார். எனவே ஆணுக்கு ஏற்றத் துணையாகப் பெண்ணை, கடவுள் படைத்ததைக் காண்கிறோம். கணவன், மனைவி இருவரும் ஒன்றித்து வாழ அழைக்கப்பட்டிருக்கிறார் கள் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. எனவே கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுப வர்களாக வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறையாட்சிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம் மனிதரோடு இயேசு கொண்டுள்ள உறவுநிலையி னைப் பற்றி எடுத்துரைக்கிறது. இயேசு தன்னையேத் தாழ்த்தி, துன்பகரமான சாவுக்கு உட்படுத்திக் கொண்டதால் அவர் மாட்சி பெற்றார் என்று திருமுக ஆசிரியர் கூறுகிறார். மனிதருக்கு மீட்பின் மாட்சியை வழங்குமாறு, இறைமகன் இயேசு மனிதராக பிறந்து நமது சகோதரர் ஆனார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இயேசுவின் உண்மையான சகோ தர, சகோதரிகளாக வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. எங்கள் ஆயரே இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது திருச்சபை யின் மக்கள் அனைவரையும் உம்மோடும், பிறரோடும், இயற்கையோடும் நல்லுறவு கொண்டவர்களாய் உருவாக்கத் தேவையான அருளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் அரசரே இறைவா,
  உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் அனைவரும் திருமண உறவை மதிப்ப வர்களாய் வாழவும், திருமணத்தின் மாண்பைப் பாதுகாப்பவர்களாய் திகழவும்
தேவை யான நல்ல மனதினை கொடுக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் தலைவரே இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும் உமது மேலான அன்பை உணரவும், உமது திருமகனின் சிலுவை மரணத்தின் வழியாக நீர் ஏற்பாடு செய்துள்ள மீட்பின் பேறுபலன்களைப் பெற்று மகிழவும் தேவையான மனமாற்றத்தை தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் மருத்துவரே இறைவா,
   உலகில் பரவி வரும் பண நோயினால் இயற்கை வளங்களை அழிப்பவர்களும், நீர் தந்த அழகிய சுற்றுச்சூழலை மாசுபடுத்திப் பாழாக்குபவர்களும் மனந்திரும்பி, இயற்கையுடன் நல்லுறவு கொண்டவர்களாய் வாழத்
தேவையான ஆற்றலை அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் மீட்பரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், சிறு பிள்ளைகளைப் போல இறையாட்சியை ஏற்றுக்கொள்ளும் தூய மனதினைப் பெற்று, உம்மோடும் பிறரோ டும் உறவில் வளரத் தேவையான வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.