Wednesday, October 17, 2012

அக்டோபர் 21, 2012

பொதுக்காலம் 29-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனை வரையும் அன்புடன் அழைக்கிறோம். கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசுவின் துன்பக் கிண்ணத்தில் பங்குபெறுவதன் அவசியத்தை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனிதராய் பிறந்த அனைவரும் துன்பத்தை ஏற்பதன் வழியாக, இன்பத்தின் மேன்மையை உணர அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்து தனது சிலுவை மரணத்தின் வழியாக உயிர்ப்பின் மாட்சியை அடைந்தார். இறைத்தந்தையின் இரக்கத் தைப் பெற்று கிறிஸ்துவின் வலப்பக்கத்தில் அமருமாறு, தூய வாழ்வு வாழவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்த இறைமகன் இயேசுவைப் பின்பற்றி வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
     இன்றைய முதல் வாசகம் ஆண்டவரின் துன்புறும் ஊழியரைப் பற்றிய அறிவிப்பைத் தருகிறது. துன்புறும் ஊழியராம் இயேசு, மக்களின் பாவங்களைப் போக்குமாறு தன் உயி ரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார் என்ற உண்மை தெளிவுபடுத்தப்படுகிறது. இயேசுவின் துன்பம் பலருக்கும் மீட்பை அளிக்கும் என்பது முன்னறிவிக்கப்படுகிறது. இயேசுவைப் பின்பற்றி நேர்மையாளர்கள் ஆகும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அழைக்கப்பட்டவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம் இறைமகன் இயேசுவும் நமது துன்பங்களில் பங்கேற்றார் என்ற உண்மையை எடுத்துரைக்கிறது. நமது துன்ப வேளையில் நாம் அவரது உதவியைத் துணிவுடன் நாடுமாறு திருமுக ஆசிரியர் அழைப்பு விடுக்கிறார். எல்லா வகையிலும் சோதிக்கப்பட்டாலும், பாவம் செய்யாமல் வாழ்ந்த இயேசுவைப் பின்பற்றி வாழ நாம் அழைக்கப்படுகிறோம். நம் தலைமைக் குருவாம் இயேசுவின் உதவியைத் துணிவுடன் நாடும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. பணியாற்ற அழைப்பவராம் இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், அதிகாரம் செலுத்து பவர்களாய் இல்லாமல், மக்களுக்கு தொண்டு செய்பவர்களாய் வாழும் தூய உள்ளத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அதிகாரத்தை வழங்குபவராம் இறைவா,
  உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் அதிகாரத்தின் பொறுப்பை உணர்ந்தவர்களாய், மக்களுக்காக அமைதியான உலகத்தை உருவாக்க உழைப்பவர்களாய்
வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அருள்மழை பொழிபவராம் இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும் கிறிஸ்துவின் மேன்மையை  உணர்ந்து கொள்ளவும், தனது சிலுவை மரணத்தின் வழியாக அவர் பெற்றுத் தந்த மீட்பின் பலன்களை உரிமை யாக்கி கொள்ளவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆறுதல் தருபவராம் இறைவா,
   உலகில் வறுமை, நோய், தனிமை, முதுமை, இல்லாமை, இயலாமை போன்ற பல துன்பங்களால் வேதனையுறும் மக்கள் அனைவரும், உமது ஆறுதலைப் பெற்று மகிழச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மீட்பு அளிப்பவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் உமது திருமகனைப் பின்பற்றி, துன்பங்களின் நடுவிலும் தூய வாழ்வு வாழத் தேவையான அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.