Wednesday, December 12, 2012

டிசம்பர் 16, 2012

திருவருகைக்காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
மகிழ்ச்சிக்குரியவர்களே,
   திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். அண்மையில் உள்ளதை நினைத்து அகமகிழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது மகிழ்ச்சியை மட்டுமல்ல, நம்மிடம் உள்ள அனைத்தையுமே பிறரோடு பகிர்ந்து வாழ திருமுழுக்கு யோவான் நம்மைத் தூண்டுகிறார். "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்.'' தூய ஆவி என்னும் நெருப்பால் நமக்கு திருமுழுக்குக் கொடுக்கும் வலிமைமிக்க ஆண்டவரின் வருகைக்காக நாம் காத்திருக் கிறோம். அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிக்கப்படும் பதராக இல்லாமல், அவருடைய களஞ்சியத்தில் சேர்க்கப்படும் கோதுமையாக வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
மகிழ்ச்சிக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், ஆண்டவரின் பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சியால் ஆர்ப் பரித்து, ஆரவாரம் செய்யுமாறு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் நம் நடுவில் இருப்ப தால், நாம் அச்சம் கொள்ளவோ, சோர்வடையவோ தேவையில்லை என்பதை தெளிவு படுத்துகிறது. இஸ்ரேலின் அரசராகிய ஆண்டவரின் அரவணைப்பில் வாழ்வோர் பேறு பெற்றோர். தம் அன்பினால் புத்துயிர் அளிக்கும் ஆண்டவரைக் குறித்து ஆடிப்பாடி மகிழ நாம் அழைக்கப்படுகிறோம். மீட்பு அளிக்கும் ஆண்டவரில் களிகூர்ந்து வாழ வரம் கேட்டு, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
மகிழ்ச்சிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூர் பவுல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆண்டவரில் இணைந்தவர்களாய் மகிழ்ந்திருக்க அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்துவின் வருகைக்கு நம்மைத் தயார் செய்யும் வகையில், நன்றியோடு கூடிய இறைவேண்டலில் நிலைத்திருக்க நம்மை அழைக்கிறார். நமது கனிந்த உள்ளத்தால், எல்லா மனிதருக்கும் கிறிஸ்துவை பறைசாற்ற உறுதி ஏற்போம். அறிவெல்லாம் கடந்த இறை அமைதியை நம் உள்ளத்தில் சுவைக்க வரம் கேட்டு, இந்த வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மகிழ்ச்சி தருபவராம் இறைவா, 
   எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உமது திருமக னின் அருளால் நிரப்பி, நிலை வாழ்வில் நம்பிக்கை கொண்டவர்களாய் உம்மில் மகிழ்ந் திருக்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. கனிவு மிகுந்தவராம் இறைவா,
   
உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும், உமது அரசை விரும்பித் தேடவும், நீதி மற்றும் உண்மையின் வழியில் மக்களை வழிநடத்தவும் துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. புனிதத்தின் ஊற்றாம் இறைவா,
   எம் நாட்டு மக்களை தவறான வழியில் வழிநடத்தி, உமது நற்செய்தி பரவ தடையாக இருக்கும் உண்மைக்கு எதிரான அமைப்புகள் அழிந்தொழிய அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. குணம் அளிப்பவராம் இறைவா,
   உலகின் இன்பத்தை நாடி தீய நாட்டங்களுக்கும், தீங்கு விளைவிக்கும் கெட்ட பழக்கங் களுக்கும் அடிமைகளாகி தவிப்போர், நிலையான மகிழ்ச்சி தருபவராம் உம்மை சரண டைய வழிகாட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. புத்துயிர் அருள்வராம் இறைவா,
   உமது அன்பின் அரவணைப்பை பெற்றவர்களாய் என்றும் மகிழ்ந்திருக்கும் வரத்தை எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் வழங்க வேண் டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.