Wednesday, December 19, 2012

டிசம்பர் 23, 2012

திருவருகைக்காலம் 4-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். கிறிஸ்து பிறப்பு விழாவுக்கான இறுதிகட்ட தயாரிப்புக்கு இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. கடவுளின் பெயரால் இஸ்ரயேலை ஆட்சி செய்யும் மீட்பரின் வருகையை எதிர்நோக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. இயேசுவை வயிற்றில் சுமந்தவராய் சென்ற கன்னி மரியாவை சந்தித்த எலிசபெத்தும், யோவானும் அடைந்த மகிழ்ச்சியை அனுபவிக்க நாம் அழைக்கப்படு கிறோம். வரவிருக்கும் நம் ஆண்டவரும் அமைதியின் அரசருமான இயேசுவை நம் உள்ளத்திலும் இல்லத்திலும் வரவேற்க தயாராவோம். நிகழவிருக்கும் கிறிஸ்து பிறப்பு நம்மை மகிழ்ச்சியால் நிரப்ப வேண்டுமென்று, இந்த திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், கடவுளின் சார்பாக இஸ்ரயேலை ஆளப்போகின்றவர் பெத் லகேமில் பிறப்பார் என்ற இறைவாக்கை எடுத்துரைக்கிறது. எஞ்சியிருக்கும் மக்களினத் தார் அனைவரும் ஆண்டவரின் ஆட்சியின் கீழ் வர வேண்டும் என்பது முன்னறிவிக்கப் படுகிறது. அப்போது மாட்சியோடும் வல்லமையோடும் கிறிஸ்து அரசாள்வார் என்பதை உணர்ந்து வாழ நாம் அழைக்கப்படுகிறோம். மேன்மை பொருந்திய ஆண்டவரின் அரசில், அமைதியை சுவைப்பவர்களாய் வாழ வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூர் பவுல், இறைத்தந்தையின் திருவுளம் கிறிஸ்து இயேசுவில் நிறைவேறியதைக் குறித்து எடுத்துரைக்கிறார். தமது அன்பு கட்ட ளைகள் நிலைத்து நிற்பதற்காக, தமக்கு முன்னிருந்த கொடூரமான பழி வாங்கும் சட்டங் களை கிறிஸ்து நீக்கிவிட்டதை அவர் நமக்கு நினைவூட்டுகிறார். இயேசுவின் தியாகப் பலியால் தூயவராக்கப்பட்டிருக்கும் நாம், அவரைப் பின்பற்றி பிறருக்காக நம்மை அர்ப் பணிப்பதில் மகிழ்ச்சி காண வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. நிறைவு தருபவராம் இறைவா, 
   அமைதியின் அரசராம் எங்கள் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உலகிற்கு அமைதியையும் மகிழ்ச்சியை யும் கொடுப்பவர்களாக திகழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. பேருவகை அளிப்பவராம் இறைவா,
   உ
ம் திருமகனின் பிறப்பு விழாவை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் உலக மக்கள் அனைவரும், தங்கள் மனமாற்றத்தின் வழியாக புதுவாழ்வு காணவும், பிறர் நலனுக்காக தங்களை அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடையவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மாட்சியின் மன்னராம் இறைவா,
   எம் நாட்டு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள், மக்களை நேரிய வழியில் நடத்த வும், மக்களிடையே தோன்றும் பிரிவினைகளை ஊக்குவிக்காமல் ஒற்றுமையை உரு வாக்கவும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நலம் நல்குபவராம் இறைவா,
   மனம் மற்றும் உடல்நலக் குறைபாடுகளால் துன்புறுவோரும், வறுமை, கடன் சுமை உள்ளிட்ட உலகு சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளோரும் வேதனை நீங்கி புது வாழ்வு காண அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. பேரன்பின் ஊற்றாம் இறைவா,
   கிறிஸ்து பிறப்பு விழாவுக்காக தயாராகி வரும் எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரி கள், பங்கு மக்கள் அனைவரும் உமது பகிர்தலையும், உம் திருமகனின் தியாகத்தையும் உணர்ந்து தூய வாழ்வு வாழ வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.