Thursday, February 14, 2013

பிப்ரவரி 17, 2013

தவக்காலம் முதல் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   மீட்பளிக்கும் கடவுளின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வர வேற்கிறோம்.
மனமாற்றத்திற்கு தூண்டும் காலமாகிய தவக்காலத்தின் முதல் ஞாயிறை நாம் இன்று சிறப்பிக்கின்றோம். உலகப் பொருட்களால் ஏற்படும் சோதனைகளுக்கு மயங் காமல், கடவுளுக்கு முழு மனதோடு பணிபுரிய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு திருமுழுக்கு பெற்று, தன் பணிவாழ்வைத் தொடங்கும் முன் பாலை நிலத்தில் தனித்திருந்து இறைவனோடு உறவாடினார். அவ்வேளையில் அலகை அவரை சோதித்தபோது, கடவுளில் முழு நம்பிக்கை கொள்ளும் வழியை நமக்கு காட்டினார். அலகையின் தந்திர மொழிகளில் ஏமாறாமல், அந்த சோதனைகளை இயேசு வெற்றி கொண்டார். அவரைப் பின்பற்றி கடவுளுக்கு எதிராக நம் வாழ்வில் வரும் சோதனை களை முறியடிக்கும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில் மோசே, கடவுளின் மீட்பளிக்கும் ஆற்றலை நினைவு கூரும் வழியை இஸ்ரயேல் மக்களுக்கு கற்பிக்கிறார். எகிப்தியரால் கடுமையாக ஒடுக் கப்பட்ட இஸ்ரயேலர் ஆண்டவரை நோக்கி கூக்குரல் எழுப்பியபோது, ஆண்டவர் தம் ஓங்கிய புயத்தின் ஆற்றலால் அவர்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டதை மோசே நினைவூட்டுகிறார். ஆண்டவர் வழங்கிய பாலும் தேனும் பொழியும் புதிய நாட்டுக்காக நன்றி செலுத்த அவர் அழைப்பதையும் இங்கு காண்கிறோம். நம் பாவச்சூழலில் இருந்து விடுபட ஆண்டவரின் உதவியை நாடி, அவர் அளிக்கும் விண்ணக நாட்டை உரிமையாக்கி கொள்ளும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், இயேசுவில் நம்பிக்கை கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறார். இறைவனின் வார்த்தையாக விளங்கும் இயேசுவை நம் ஆண்டவராகவும் மீட்பராகவும் ஏற்க அழைக்கப்படுகிறோம். மரணத்தை வென்று உயிர்த் தெழுந்த கிறிஸ்து இயேசுவில் நம்பிக்கை கொள்ளும் எவரும் வெட்கமடைவதில்லை என்ற உறுதியை பவுல் நமக்கு வழங்குகிறார். ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கை யிட்டு மன்றாடும்போது, நலன்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்வோம் என்பதில் நம் பிக்கை கொண்டவர்களாக வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவி கொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஆசி வழங்குபவராம் இறைவா,
   புதிய இஸ்ரயேலாம் திருச்சபையை வழிநடத்தி வரும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் நீர் வாக்களித்த விண்ணக நாட்டை நோக்கி மக் களை அழைத்து செல்ல, ஆசி வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மீட்பு அளிப்பவராம் இறைவா,
   உமது திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்து வாழியாக நீர் அளித்த மீட்பை, உலக மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு நாடித் தேடி பெற்றுக்கொள்ள உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. புத்துயிர் கொடுப்பவராம் இறைவா,
   தங்கள் மீட்புக்காக உம்மை நோக்கி கூக்குரல் எழுப்பவும், உமது அருளின் உயிரைப் பெற்றவர்களாய் கிறிஸ்துவின் மரணம், உயிர்ப்பு ஆகியவை வழியாக நீர் அளிக்கும் மீட்பை சுவைத்து மகிழவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆற்றல் தருபவராம் இறைவா,
   இவ்வுலகில் எழும் பலவித சோதனைகளால் வாழ்வின் நோக்கத்தை மறந்து திசைமாறி அலையும் மனிதகுலத்துக்கு, உமது அருள் ஒளியால் தீமைகளை வென்று விண்ணக வாழ்வை உரிமையாக்கும் ஆற்றலைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. புதுவாழ்வுக்கு அழைப்பவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், பாவச்சூழல்களால் வரும் சோதனைகளில் வெற்றிபெற்று, உம் மீதான நம்பிக்கையில் முழு மனதோடு நிலைத்திருக்கவும், உமக்கு ஏற்புடைய வாழ்வு வாழவும் துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.