Saturday, April 27, 2013

ஏப்ரல் 28, 2013

பாஸ்கா காலம் 5-ம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 14:21-27
   அந்நாள்களில் பவுலும் பர்னபாவும் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, "நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்'' என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள். அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள்.
இரண்டாம் வாசகம்: திருவெளிப்பாடு 21:1-5
   யோவானாகிய நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற்போயிற்று. அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது. பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, "இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன'' என்றது. அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், "இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்'' என்று கூறினார். மேலும், "'இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை' என எழுது'' என்றார்.

நற்செய்தி வாசகம்: யோவான் 13:31-35
  யூதாசு இறுதி இராவுணவின் அறையை விட்டு வெளியே போனபின் இயேசு, "இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்'' என்றார்.

சிந்தனை: வத்திக்கான் வானொலிMP3