Thursday, March 20, 2014

மார்ச் 23, 2014

தவக்காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
தாகமுள்ளவர்களே,
   மீட்பளிக்கும் ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம்.
வாழ்வளிக்கும் தண்ணீரை வழங்கும் ஆண்டவரை நாடிச் சென்று தாகத்தை தணித்துக் கொள்ள இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. குழப்பங்களுக்கு நடுவே விடியலை நோக்கி காத்திருந்த சமாரியப் பெண்ணின் வாழ்வில், ஆண்டவர் இயேசு ஒரு மாற்றத்தை உருவாக்கிய நிகழ்வை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. கடவுளைப் பற்றிய உண்மையைக் கற்றுக்கொடுக்கும் இயேசு, தாமே மெசியா என்பதை உணர்ந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கிறார். இயேசுவை சந்தித்த சமாரியப் பெண் செய்ததைப் போன்று, அவரை மற்றவர்களுக்கு அறிவிக்க நாமும் அழைக்கப்படுகிறோம். இயேசுவே உலக மீட்பர் என்பதை பறைசாற்றும் வரத்துக்காக, இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
தாகமுள்ளவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், பாலைநிலத்தில் தண்ணீரின்றித் தவித்த இஸ்ரயேல் மக்கள் அற்புதமாக தாகம் தணித்த நிகழ்வைக் காண்கிறோம். தனக்கு எதிராக முணு முணுத்த மக்களைப் பற்றி ஆண்டவரிடம் முறையிட்டு, மோசே தீர்வு வேண்டுகிறார். ஓரேபின் பாறையை மோசேயின் தடியால் பிளந்து, ஆண்டவர் தண்ணீர் வழங்கிய அற்பு தத்தைக் காண்கிறோம். பாறையில் இருந்து புறப்பட்ட தண்ணீர் மூலம் இஸ்ரயேல் மக்க ளின் தாகம் தீர்ந்தது. நாமும் வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்கும்போது, ஆண்டவரின் உதவியை விரும்பித் தேட வரம் வேண்டி, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
தாகமுள்ளவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்துவின் மீதான நம்பிக்கை யால் நாம் கடவுளுடன் நல்லுறவு கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துரைக்கிறார். வாழ் வளிக்கும் தண்ணீராகிய தூய ஆவியார் வழியாக பொழியப்பட்ட கடவுளின் அன்பை உணர்ந்து வாழ அறிவுறுத்துகிறார். நாம் பாவிகளாக இருந்தபோதே நமக்காக தம்மையே பலியாக்கிய கிறிஸ்துவின் அன்பை புரிந்துகொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து இயேசு மூலம் நாம் பெற்றுக்கொண்ட அருள்நிலையில் தொடர்ந்து நிலைத்திருக்கும் வரம் வேண்டி, இவ்வாசகத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. வாழ்வின் ஊற்றே இறைவா,
   உமது மந்தையாம் திருச்சபையை உம் அருள் ஊற்றை நோக்கி வழிநடத்தும் ஞானத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் பொழிந்திட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. என்றும் வாழ்பவரே இறைவா,
   மக்களின் துன்பங்களைத் தீர்க்க நீர் மட்டுமே உதவ முடியும் என்பதை உணர்ந்து உமது திருவுளப்படி பணியாற்றும் வரத்தை, உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மீட்பின் ஊற்றே இறைவா,
   ஆன்மீக தாகம் கொண்ட எம் நாட்டு மக்கள் அனைவரும் உம்மிடம் இருந்து தண்ணீரைப் பருகவும், அதன் மூலம் மீட்பின் நிறைவைக் கண்டுணர்ந்து உம்மை மகிமைப்படுத்தவும் உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. எல்லாம் வல்லவரே இறைவா,
   அநீதி, மதவாதம், ஊழல், பயங்கரவாதம் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் எம் நாட்டை, உமது வல்லமையுள்ள கரங்களால் சீர்படுத்தி புதுவாழ்வு அளித் திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. புனிதத்தின் ஊற்றே இறைவா,
   மீட்பின் பாறையான கிறிஸ்து இயேசுவிடம் இருந்து தாகம் தணிக்கும் எம் பங்கு மக்கள், அருட்சகோதரிகள், பங்குத்தந்தை அனைவரையும், அவருக்கு சான்றுபகரும் வகையில் வழிநடத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.