Thursday, March 6, 2014

மார்ச் 9, 2014

தவக்காலம் முதல் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   வாழ்வளிக்கும் ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். சோதனைகளை வெல்லத் தூண்டும் காலமாகிய தவக்காலத்தின் முதல் ஞாயிறை நாம் இன்று சிறப்பிக்கின்றோம். பணம், புகழ், பதவி போன்ற உலக மாயைக ளுக்கு மயங்கிவிடாமல், முழு மனத்துடன் கடவுளுக்கு பணிபுரிய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு தம் பணிவாழ்வைத் தொடங்கும் முன்பு நாற்பது நாட்கள் பாலை நிலத்தில் தனித்திருந்து இறைவனோடு உறவாடினார். அலகையின் சோத னைகளை வென்று, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றும் வழியையும் அவர் நமக்கு காட்டினார். இயேசுவைப் பின்பற்றி வாழ்விலும், தாழ்விலும் நம்மைச் சூழும் சோதனை களை முறியடிக்கும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், கடவுளின் கட்டளைகளை மீறி முதல் பெற்றோர் பாவம் செய்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. அலகையின் மயக்கும் மொழிகளை நம்பி, ஆதாமும் ஏவாளும் ஆண்டவரின் வார்த்தையை மீறியதால் பாவம் உலகில் நுழைவதைக் காண் கிறோம். கடவுளைப் போன்று மாறுவீர்கள் என்ற அலகையின் வார்த்தைகளை நம்பி இறைக்கட்டளையைப் புறக்கணித்ததால், மனிதன் அருள் வாழ்வை இழந்தான் என்ற உண்மை இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது. அலகையின் மயக்கும் வாக்குறுதிகளுக்கு இடம் கொடுக்காமல், கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுளுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஒரே மனிதர் வழியாய் இந்த உலகத்தில் பாவமும் சாவும் நுழைந்தது என எடுத்துரைக்கிறார். ஆதாமின் வழியாக சாவு வந்தது போலவே, இயேசு கிறிஸ்துவின் வழியாக வாழ்வு வந்தது என்றும் பறைசாற்று கிறார். அலகையை வென்ற இயேசு கிறிஸ்துவின் வழியாக, இறைவனின் அருள் கொடை களைப் பெற நாம் தகுதி பெறுகிறோம் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து இயேசுவில் முழுமையான நம்பிக்கை கொண்டு, கடவுள் அருளும் மீட்பை சுவைக்கும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அருள் பொழிகின்ற இறைவா,
   பணம், பதவி, புகழ் போன்ற உலக மாயைகளில் இருந்து விலகி வாழும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் வழங்கி, உம் மக்களை புனிதத்தின் பாதையில் வழிநடத்த உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. மீட்பு அளிக்கின்ற இறைவா,
   உலக நாடுகளை ஆட்சி செய்கின்ற தலைவர்கள் அலகையின் மயக்கும் ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல், உமது அன்பின் ஆட்சியை மக்களிடையே செயல்படுத்துபவர்களாக திகழ துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒளி கொடுக்கின்ற இறைவா,
   உமது அரசை எம் நாட்டில் விரிந்து பரவச் செய்யும் ஓர் அரசை, நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் வழியாக அமையவும், அதன் மூலம் இந்தியாவைச் சூழ்ந்துள்ள ஆன்மீக இருள் மறையவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. மாற்றம் தருகின்ற இறைவா,
   வாழ்வைத் திசைமாற்றும் இவ்வுலகின் மாயக் கவர்ச்சிகளாலும், தீவிரவாத செயல்களா லும்  தங்கள் வாழ்வை சீரழித்து நிற்கும் இளைஞர்களும், அவர்களை தவறான வழியில் நடத்துபவர்களும் மனந்திரும்ப உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. புதுவாழ்வுக்கு அழைக்கின்ற இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் திருமகன் இயேசுவைப் பின்பற்றி பாவச் சோதனைகளை வெற்றி கொள்ளவும், உமது திருவுளத்தை நிறைவேற்றுபவர்களாக வாழவும் துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.