Thursday, March 27, 2014

மார்ச் 30, 2014

தவக்காலம் 4-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
ஒளிக்குரியவர்களே,
   உலகின் ஒளியாம் ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம்.
அதிசயங்கள் செய்யும் ஆண்டவரைப் பற்றிய அகப்பார்வை பெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுளைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும் நமக்கு ஒரு புதிய பார்வையைத் தந்தவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பிறவியில் இருந்தே பார் வையற்ற ஒருவரை அவர் குணப்படுத்தும் நிகழ்வை இன்றைய நற்செய்தி எடுத்துரைக் கிறது. கண்ணால் செய்யப்படும் பாவங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இயேசு நமக்கு படிப்பிக்கிறார். தீர்ப்பளிக்கும் ஆற்றல் கொண்ட தம் மீது நம்பிக்கை கொள்ளுமா றும் ஆண்டவர் அழைக்கிறார். பாவ இருளில் இருந்து விலகி, கிறிஸ்துவின் ஒளியில் பங்குபெற்று வாழும் வரத்துக்காக, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
ஒளிக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் சாமுவேல் தாவீதை ஆண்டவரின் பெயரால் அருட்பொழிவு செய்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. ஈசாயின் புதல்வருள் ஒருவரை அரச ராகத் தேர்வு செய்திருப்பதாக சாமுவேலிடம் ஆண்டவர் கூறுகிறார். புதிய அரசரை அருட் பொழிவு செய்வதற்காக கொம்பில் எண்ணெய்யை நிரப்பிக்கொண்டு, இறைவாக்கினர் பெத்லகேம் செல்கிறார். உடல்திறனும், உயரமும் கொண்ட எழுவரை விட்டுவிட்டு சிறுவ னான தாவீதை ஆண்டவர் தேர்ந்தெடுப்பதைக் காண்கிறோம். அகத்தைப் பார்த்து செயல் படும் ஆண்டவரின் திட்டங்களை நமது வாழ்வில் ஏற்க வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஒளிக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நம்மை ஒளியின் மக்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். தீமை விளைவிக்கும் இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு தொடர்பு வைத்திருக்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறார். தீயவர்களின் வாழ்வில் ஒளி விளக்காக சுடர்விட்டு, அவர்களை நல்லவர்களாக மாற்ற அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து வின் ஒளியால் மற்றவர்களை ஒளிர்விக்க திருத்தூதர் நமக்கு நினைவூட்டுகிறார். நம்மில் உள்ள பாவ இயல்பைப் புதைத்துவிட்டு, கிறிஸ்துவின் உயிரைப் பெற்றவர்களாக வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்துக்கு செவிசாய்ப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. ஒளியாய் இருப்பவரே இறைவா,
   திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவ ரும், உமது வழிகாட்டும் ஒளியில் பயணிக்க அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. பார்வை அளிப்பவரே இறைவா,
   உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் உமது ஒளியில் நடந்து, மக்களின் துன்பங் களைப் போக்க ஆர்வத்துடன் உழைக்கும் மனம் தந்திடுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. ஒளி தருபவரே இறைவா,
   எம் நாட்டை கவ்வியுள்ள ஆன்மீக, அரசியல், பொருளாதார இருளை அகற்றி, மக்கள் அனைவரும் ஒளியின் பாதையில் முன்னேற உதவிடுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. சுகம் கொடுப்பவரே இறைவா,
   உடல், உள்ள, ஆன்மீக பார்வையிழந்து தவிக்கும் மக்கள் அனைவரையும் குணப்படுத்தி, உமது ஒளியால் இந்த உலகத்தின் முகத்தைப் புதுப்பிக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. ஒளியால் நிறைப்பவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும், உமது அன்பின் ஒளியால் நிறைத்து, ஒளியின் மக்களாக வாழ வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.