Wednesday, August 13, 2014

ஆகஸ்ட் 17, 2014

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
இரக்கத்துக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். நம்பிக்கையின் வலிமையை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது துன்ப நேரங்களில் ஆண்டவரின் இரக்கத்தைப் பெற, நம்பிக் கையோடு அவரை தொந்தரவு செய்ய வேண்டுமென இன்றைய நற்செய்தி கற்பிக்கிறது. உதவி தேடிச் சென்ற கானானியப் பெண்ணிடம் இயேசு பாராமுகமாய் நடந்துகொள்வதை காண்கிறோம். நாமும் பல நேரங்களில் ஆண்டவரின் இரக்கத்தைப் பெறுவதற்கு தகுதி யற்றவர்களாய் இருக்கலாம். அப்போது நமது தகுதியின்மையை ஏற்றுக்கொண்டால், நாம் ஆண்டவரின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற உண்மையை உணர அழைக்கப் படுகிறோம். ஆண்டவர் முன்னிலையில் நமது தாழ்நிலையை உணர்ந்து வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இரக்கத்துக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா வழியாக பேசும் ஆண்டவர், பிற இனத்தாரும் தம்மை வழிபட வருவார்கள் என்ற வாக்குறுதியை வழங்குகிறார். ஆண்ட வருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவர் மீது அன்புகூர்வதற்கும் அவர்களை தம் திரு மலைக்கு அழைத்து வரப்போவதாக உறுதி அளிக்கிறார். ஆண்டவரின் இல்லம், இறை மன்றாட்டின் வீடு என அழைக்கப்படும் முன்னறிவிப்பும் வழங்கப்படுகிறது. பிற சமயத்தி னர் ஆண்டவரின் இல்லத்தை தேடி வருவதற்கு தூண்டுகோலாய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்தை உளமேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இரக்கத்துக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், பிற இனத்தாருக்கு நற்செய்தி பணியாற்றுவதில் பெருமை கொள்வதாக எடுத்துரைக்கிறார். கடவுள் விடுத்த அழைப்பும், கொடுத்த அருட்கொடைகளும் திரும்பப் பெறப்படுவதில்லை என்ற நம்பிக்கையை வழங் குகிறார். கடவுள் தேர்ந்தெடுத்த மக்கள் கீழ்ப்படியாதவர்களாய் மாறும்போது, அவரை நாடித் தேடும் பிற இனத்தவர் இறைவனின் இரக்கத்தைப் பெறுவார்கள் என்ற உண்மை யைச் சுட்டிக்காட்டுகிறார். ஆண்டவருக்கு உண்மையுள்ளவர்களாய் வாழ வரம் வேண்டி, இவ்வாசகத்தை உளமேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. இரக்கத்தின் உருவே இறைவா,
  
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது இரக்கத்தின் கருவிகளாக செயல்பட்டு, மக்களிடையே பிறரன்பு செயல்களைத் தூண்டி எழுப்புபவர்க ளாகத் திகழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. இரக்கத்தின் அரசரே இறைவா,
   உலகெங்கும் போர்கள் மற்றும் வன்முறைகளால் நாட்டையும் வீட்டையும் இழந்து, கைவிடப்பட்ட நிலைக்கு
தள்ளப்பட்டுள்ள மக்கள் மீது இரக்கம் காட்டி, அவர்கள் அமைதி யான வாழ்வைப் பெற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. இரக்கத்தின் ஊற்றே இறைவா,
   எம் நாட்டில் உமக்கும், உமது மக்களுக்கும் எதிராக செயல்படுகின்றவர்கள் மனந்திரும்ப வும், இயற்கைச் சீற்றங்களாலும், அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளோர் அமைதி காணவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கத்தின் நிறைவே இறைவா,
   ஈராக் உள்ளிட்ட நாடுகளில் துன்புறும் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பு பெறவும், உலகெங்கும் உமது மக்களுக்கு எதிராக நிகழும் அடக்குமுறைகளும் வன்முறைகளும் முடிவுக்கு வர வும்
உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. இரக்கம் பொழிபவரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது முன்னிலை யில் தங்கள் தகுதியின்மையை உணரவும், துன்ப நேரத்தில் நம்பிக்கையோடு
உம்மை நாடி வரவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.