Wednesday, August 20, 2014

ஆகஸ்ட் 24, 2014

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   பொதுக்காலத்தின் இருபத்தோராம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன் போடு வரவேற்கிறோம். கடவுளின் விருப்பத்தை உணர்ந்து செயல்படவும், அவர் வழங்கி யுள்ள பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவர்களாய் திகழவும் இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. "மானிட மகன் யாரென்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற இயேசுவின் கேள்விக்கு சரியாக பதிலளித்த சீமோன் பேதுரு, திருச்சபையின் பாறையாக மாறுவதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. விண்ணரசின் திறவுகோல்களை பேதுருவிடம் வழங்குவதாக ஆண்டவர் இயேசு வாக்களிக்கிறார். விண்ணுலகு மற்றும் மண்ணுலகின் மீது பேதுரு அதிகாரம் பெறுவதையும் காண்கிறோம். 'இயேசுவே வாழும் கடவுளின் மகன்' என்று அறிக்கையிட நாம் தயாராக இருக்கும்போது, ஆண்டவர் நமக்கு மேலான பொறுப்புகளைத் தருவார். நமது வாழ்க்கை கடமைகளை முழுமனதுடன் நிறை வேற்றி, ஆண்டவரின் அருளைக் கண்டுணர வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில், எலியாக்கிம் என்பவருக்கு அரண்மனை மேற்பார்வை யாளர் பொறுப்பு வழங்கப்போவதாக ஆண்டவர் வாக்குறுதி அளிக்கிறார். ஆண்டவருக்கு கீழ்ப்படியாத செபுனா என்பவரின் அதிகாரத்தைப் பறித்து, எலியாக்கிமுக்கு தரப்போவதாக இறைவாக்கு உரைக்கப்படுகிறது. தாவீது குடும்பத்தாரின் திறவுகோல் அவருக்கு கொடுக் கப்படும் என்று கூறப்படுவது, பேதுருவின் அதிகாரத்துக்கு முன்னடையாளமாக இருக்கி றது. நாம் ஆண்டவருக்கு கீழ்ப்படிதல் உள்ளவர்களாய் நடக்க வரம் வேண்டி, இவ்வாச கத்துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
பொறுப்புக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், கடவுளின் அருள்செல்வத்தைப் பற்றி எடுத்துரைக்கிறார். ஆண்டவரின் திட்டங்களும் தீர்ப்புகளும் மனித அறிவுக்கு அப் பாற்பட்டவை என்பதை உணர்ந்து வாழப் பணிக்கிறார். ஆண்டவரின் முன்னிலையில் நாம் மிகவும் சிறியவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள அழைக்கப்படுகிறோம். அனைத்தை யும் படைத்து பராமரிக்கும் எல்லாம் வல்ல கடவுளின் திட்டத்தை ஏற்று வாழவும், அவர் தந்துள்ள பொறுப்புகளை அர்ப்பணிப்போடு நிறைவேற்றவும் வரம் வேண்டி, இவ்வாச கத்துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அனைத்துலக அரசரே இறைவா,
  
திருச்சபையின் மீதும் உலகின் மீதும் நீர் வழங்கியுள்ள அதிகாரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உறுதியான மனநிலையோடு கையாள உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
2. அதிகாரம் வழங்குபவரே இறைவா,
   உலக நாடுகளின் ஆட்சியாளர்களும், சமூகத் தலைவர்களும் மக்களிடையே ஒற்று மையை வளர்க்கவும், பொருளாதார, அருளாதார நலன்களைக் கொணரவும் ஆர்வத்துடன் உழைக்க
உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. அருளின் அதிபதியே இறைவா,
   எம் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் உமது நற்செய்தியைப் பிறருக்கு அறிவிப்பதில் ஆர்வம் கொள்ளவும், இந்தியாவில் உமது அரசை விரைந்து கட்டியெழுப்ப வும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆறுதல் தருபவரே இறைவா,
  
உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பு பெறவும், நற்செய்தியின் பரவலை எதிர்ப்போர் அனைவரும் மனந்திரும்பி அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் கை விடவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
5. மாட்சியின் மன்னரே இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது விருப்பத்தை உணர்ந்து வாழவும், ஆண்டவர் தந்துள்ள பொறுப்புகளை முழுமனதோடு நிறைவேற்ற
வும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.