Saturday, March 14, 2015

மார்ச் 15, 2015

தவக்காலம் 4-ம் ஞாயிறு
பொது மொழிபெயர்ப்பு விவிலியம்
முதல் வாசகம்: 2 குறிப்பேடு 36:14-16,19-23
   அந்நாட்களில், குருக்களின் தலைவர்களும், மக்களும் வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும் தொடர்ந்து செய்து, உண்மையற்றவர்களாய், ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையாக்கியிருந்த திருக்கோவிலை மேலும் தீட்டுப்படுத்தினர். அவர் கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவர் தம் மக்களின் மீதும், தம் உறைவிடத்தின் மீதும் இரக்கம் கொண்டு, தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார். ஆனால் அவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர். ஆதலால், அவர்கள் தப்பமுடியாத அளவுக்கு ஆண்டவரது சினம் அவர்கள் மேல் கனன்றெழுந்தது. அவர்களது எதிரிகள் கடவு ளின் இல்லத்தை எரித்து, எருசலேமின் மதில்களைத் தகர்த்தனர்; அங்கிருந்த அனைத்து அரண்மனைகளையும் தீக்கிரையாக்கி, விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தையும் அழித் தனர். மேலும் அவன் வாளுக்குத் தப்பியவர்களைப் பாபிலோ னுக்கு நாடு கடத்தினான்; பாரசீக அரசு எழும்பும்வரை அங்கே, அவர்கள் அவனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் அடிமைகளாக இருந்தனர். நாடு ஓய்வு நாள்களைக் கடைப்பிடிக்காததால், எழுபது ஆண்டுகள் பாழாய்க் கிடக்கும் என்று எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் இவ்வாறு நிறைவேறின. பாரசீக மன்னன் சைரசு ஆட்சியின் முதல் ஆண்டில், எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் நிறைவேறும் வண்ணம், ஆண்டவர் அவனது மனத்தைத் தூண்டி எழுப்பினார். எனவே அவன் தனது நாடு முழுவ தற்கும் மடல் வரைந்து அறிவித்தது யாதெனில், 'பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம் கூறுவது இதுவே: விண்ணகக் கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள் எல்லா வற்றையும் எனக்கு அளித்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்பு மாறு எனக்குப் பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட் டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!'
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 137:1-2.3.4-5.6
பல்லவி: உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!
   பாபிலோனின் ஆறுகள் அருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். அங்கிருந்த அலரிச் செடிகள் மீது எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். (பல்லவி)
   ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்க ளைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். 'சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்' என்றனர். (பல்லவி)
   ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்? எருச லேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப் போவதாக! (பல்லவி)
   உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக! (பல்லவி)

இரண்டாம் வாசகம்: எபேசியர் 2:4-10
   சகோதர சகோதரிகளே, கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர்பெறச் செய்தார். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே. இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும் விண்ணு லகில் அவரோடு அமரவும் செய்தார். கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனிவரும் காலங்களிலும் எடுத்துக் காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார். நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கை யின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை. இது மனிதச் செயல்களால் ஆனது அல்ல. எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது. ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக் கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.

வாழ்த்தொலியோவான் 3:16
   தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

நற்செய்தி வாசகம்: யோவான் 3:14-21
   அக்காலத்தில் இயேசு நிக்கதேமுக்கு கூறியது: "பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன்மீது நம் பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்."