Thursday, March 5, 2015

மார்ச் 8, 2015

தவக்காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியோரே,
   நம்மைப் படைத்து, நமது வாழ்க்கை நெறிகளை வகுத்தளித்த அன்புநிறை இறைவன் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை வரவேற்கிறோம். தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறாகிய இன்று நாம் சிறப்பிக்கும் திருவழிபாடு, இறைப் பற்றுடன் பிறரை அன்புசெய்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுளின் கட்டளைகளைக் கடைப் பிடித்து வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், அவரது திருவுளத்திற்கு ஏற்றவாறு நடக்கவும், பாவச் சூழ்நிலைகளை விட்டு விலகவும் வேண்டும் என்பதை உணர்வோம். இயேசுவைப் போன்று சமூக அநீதிகளுக்கு சாட்டையடி கொடுக்கின்வர்களாய் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
அன்புக்குரியோரே,
   இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் கொடுத்த பத்துக் கட்டளைகளை மோசே மக்களுக்கு வழங்குவதைக் காண்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை அன்பு செய்யவும், தன்னைப் போன்று பிறை அன்பு செய்து வாழவும் நாம் அழைக்கப்படுகிறோம். நேர்மையான உள்ளத்துடன் கடவுளின் கட்டளைகளுக்கு பணிந்து வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்புக்குரியோரே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில், சிலுவை மறைபொருளின் வழியாக வெளிப்பட்ட கடவுளின் ஞானத்தையும் வல்லமையையும் பற்றி திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார். நமது ஞானத்தையும் வல்லமையையும் விட, கடவுளின் மடமையும் வலுவின்மையும் மேலானவை என்பதை உணர்ந்து, அவருக்கு உகந்தவர்களாய் வாழும் வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. திருச்சட்டத்தின் நிறைவாம் இறைவா,
   மோசே வழியாக நீர் வழங்கிய பத்து கட்டளைகளும் திருச்சபையோரின் வாழ்க்கை நெறிகளாக தொடர்ந்திட உழைக்கும் ஆற்றலை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதியை நிலைநாட்டும் இறைவா,
   உலக நாடுகளில் நிலவும் அநீதியான சட்டங்களும் அடக்குமுறைகளும் மறையவும், உமது கட்டளைகளுக்கு ஏற்ப உலகில் இறையன்பும் பிறரன்பும் செழிக்கவும் மக்களிடம் நல்லதோர் மனமாற்றத்தை உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. வல்லமை மிகுந்தவராம் இறைவா,
   தாங்களே அதிகாரம் மிக்கவர்கள் என்ற ஆணவத்தில் மிதக்கின்ற எங்கள் நாட்டின் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் உமது வல்லமையை உணர்ந்து, உமக்கும் மக்க ளுக்கும் பணி செய்பவர்களாய் மாற உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஞானத்தின் உற்றாம் இறைவா,
   இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும் பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. போராட அழைப்பவராம் இறைவா,
   உமது கட்டளைகளுக்கு பணிந்து, இயேசுவைப் போன்று அநீதிகளுக்கு எதிராக போராடு பவர்களாக வாழ, எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரை யும் நிறைவாக ஆசீர்வதித்து, வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.